"கிரிப்டோ நாணயங்கள் எல்லாமே மோசடிதான்" - டாகிகாயின் நிறுவனர் அதிரடியும் பின்புலமும்

"கிரிப்டோ நாணயங்கள் எல்லாமே மோசடிதான்" - டாகிகாயின் நிறுவனர் அதிரடியும் பின்புலமும்
"கிரிப்டோ நாணயங்கள் எல்லாமே மோசடிதான்" - டாகிகாயின் நிறுவனர் அதிரடியும் பின்புலமும்

சமூக ஊடக உலகிற்கு திரும்பி வந்திருக்கிறார் ஜேக்சன் பால்மர். இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் வெளியிட்டிருக்கும் குறும்பதிவுகள் கிரிப்டோ நாணய அபிமானிகளை அதிரவைத்திக்கிறது. ஏனெனில், பிட்காயின் உள்ளிட்ட எல்லா கிரிப்டோ நாணயங்களும் ஒருவகை மோசடியே என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜேக்சன் பால்மர் இப்படி கூறியிருப்பது வியப்பில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணய மோகத்தை பகடி செய்வதற்கான டாகிகாயின் (Dogecoin) கிரிப்டோ நாணயத்தை உருவாக்கியவர் அல்லவா பால்மர்!

ஆம்... மெய்நிகர் நாணயம், இணைய நாணயம் என்றெல்லாம் கொண்டாடப்படும் பிட்காயின் பரவலாக கவனத்தை ஈர்க்கத் துவங்கிய காலத்தில், 2013-ஆம் ஆண்டில் அப்போது அடோபி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஜேக்சன் பால்மரால், பிட்காயினுக்கு போட்டியாக டாகிகாயின் உருவாக்கப்பட்டது.

பிட்காயினுக்கு போட்டி என்றாலும், உண்மையில் இன்னொரு கிரிப்டோ நாணயத்தை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் பால்மர் நினைக்கவில்லை. கிரிப்டோ நாணயங்கள் பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து கடுப்பானவர், இந்தப் போக்கை கேலி செய்யும் வகையில் சும்மா விளையாட்டாக டாகிகாயினை உருவாக்கினார்.

பெயரில் துவங்கி, செயல்பாடு வரை எல்லாவற்றிலும் டாகிகாயின் கிரிப்டோ நாணயங்களின் பகடி நாணயமாக இருந்தது. இதற்காக இணைய மீமில் பிரலபமான ஜப்பானிய நாயின் பெயரையும், உருவத்தையும் தேர்வு செய்தார். இந்த நாணயத்திற்கான நிரலுக்கும் அவர் மெனக்கெடவில்லை. ஏற்கெனவே இருந்த லைட்காயின் எனும் கிரிப்டோ நாணய நிரலை தூசி தட்டி இதற்காக பயன்படுத்திக்கொண்டார்.

இந்த உருவாக்கத்தில் பில்லி மார்கஸ் எனும் மென்பொருளாளரும் அவருடன் இணைந்துகொண்டார். டாகிகாயினின் பகடி நோக்கத்தை மீறி அதற்கு ஆயிரக்கணக்கான அபிமானிகள் உண்டாயினர்.

கிரிப்டோ எல்லாம் வெத்து வெட்டு என சொல்வதற்காக உருவாக்கப்பட்ட டாகிகாயின், பலரால் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்ட கிரிப்டோ உலகில் சீரான வளர்ச்சி அடைந்ததை இணைய விந்தை என்றுதான் சொல்ல வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னர்கூட, டெஸ்லா அதிபர் டாகிகாயின் பற்றி தெரிவித்த குறிப்புகளால் இதன் மதிப்பு திடீரென உயர்ந்தது. கேலி நாணயமாக உருவாக்கப்பட்டாலும், இன்று டாகிகாயின் ஆறாவது பெரிய கிரிப்டோ நாணயமாக இருப்பதை இன்னொரு விந்தை என்றுதான் கருத வேண்டும். இவ்வளவு ஏன், 2014-இல் ஒரு கட்டத்தில் பிட்காயினை மிஞ்சும் அளவுக்கு இது பரிவர்த்தனை செய்யப்பட்டது.

டாகிகாயின் எப்படி வளர்ச்சி பெற்றது தனிக்கதை என்றாலும், இந்தக் கதையில் இருந்து அதன் நிறுவனர் பால்மர் எப்போதோ விலகி விட்டார் என்பதுதான் விஷயம்.

2015-ஆம் ஆண்டில் பால்மர், கிர்ப்டோ சமூகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டார். 2019-இல் அவர் தனது ட்விட்டர் பக்கத்தையும் பொதுவெளியில் இருந்து மறைத்துக்கொண்டார். இடைப்பட்ட காலத்தில் டாகிகாயின் முதலீட்டு நோக்கில் பலரையும் ஈர்த்திருக்கிறது.

இந்நிலையில். மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துள்ள பால்மர், கிரிப்டோ நாணய மோகம் பற்றி எச்சரிக்கும் வகையில் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

பல ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகு கிரிப்டோ நாணயங்கள் வலதுசாரி, மிகை முதலாளித்துவ தொழில்நுட்பம் என்று கண்டறிந்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு, கட்டுப்பாடு அமைப்புகளின் விதிகளை குறைப்பது மற்றும் செயற்கை பற்றாக்குறையை உருவாக்குவதன் மூலம், இதன் உருவாக்குநர்களுக்கு செல்வத்தை பெருக்குவதற்கானவை என்றும் அவர் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மையமில்லாத தன்மைதான் பிட்காயின் போன்ற நாணயங்களில் தனித்தன்மையாக சொல்லப்படும் நிலையில், இந்த அம்சத்தையும் பால்மர் தாக்கியிருக்கிறார்.

மையமில்லாதவை என்று சொல்லப்படுவதை மீறி, கிரிப்டோ நாணயங்கள் செல்வாக்குமிக்க ஒரு சில செல்வந்தர்களால் கட்டுப்படுத்தப்படுபவை என்றும், அவர் குறை கூறியிருக்கிறார். மையமாக்கப்பட்ட நிதி அமைப்புகளுக்கு மாற்றாக சொல்லப்பட்ட இந்த நாணயங்கள் இந்த அமைப்புகளின் பல தன்மைகளையே வரித்துக்கொண்டுள்ளன என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பால்மர், பிட்காயினை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், அவரது கருத்து பிட்காயினுக்கும் பொருந்தும் என்றே கொள்ள வேண்டும்.

கிரிப்டோ நாணயங்கள் தணிக்கை, கட்டுப்பாடுகள், வரி விதிப்பு போன்ற பாதுகாப்பையும் வலுவிழக்கச் செய்வதாக அவர் கூறியுள்ளார். கிரிப்டோ வலைப்பின்னலில் உள்ளவர்கள் மறைமுகமான காய் நகர்த்தலில் அதன் மதிப்பை உணர்த்தி லாபம் பார்க்கின்றனர் என்ற நோக்கிலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிட்காயின் உள்ளிட்ட நாணயங்கள் பற்றி இரண்டு விதமான கருத்துகள் நிலவிவரும் நிலையில், கிரிப்டோ நாணயங்கள் மீது ஆர்வம் கொள்பவர்கள் பால்மர் சொல்வதையும் மனதில் கொள்ளவேண்டும்.

ஜேக்சன் பால்மரின் டிவிட்டர் பக்கம், இங்கே: https://twitter.com/ummjackson

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com