இந்தியாவில் முடிவுக்கு வருகிறதா 'ஒர்க் ஃப்ரம் ஹோம்'? - ஒரு அப்டேட் பார்வை
வீட்டில் இருந்தே வேலை என்பது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான் என்றாலும், இதனை கொரோனா பேரிடர் கட்டாயமாக்கியது. சுமார் 18 மாதங்களாக டெக்னாலஜி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதை ஊக்குவித்தன. வீட்டில் இருந்தே வேலை என்ற முறையானது, வரத்தையும் சாபத்தையும் இணைத்தே கொண்டிருந்தன. பலருக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது மிகவும் ஜாலி. ஆனால், சிலருக்கு கொடுமை. வீட்டில் ஏசி இல்லாதது, மேசை, குழந்தைகள், தனியறை இல்லாதது உள்ளிட்ட பல சிக்கல்கள்.
கெவின்கேர் வீட்டில் இருந்தே வேலை என்பதை நிரந்தரமாக்கியது. வீட்டில் இருந்தே வேலை என்பதால் நிறுவனங்களுக்கு பல செலவுகள் மீதமானது. இன்னும் சில நிறுவனங்கள் 'ஒர்க் ஃப்ரம் ஹோம் அலவன்ஸ்' (Work from home allowance) கொடுக்கத் தொடங்கின. இந்தப் பெயரில் இல்லை என்றாலும் சில நிறுவனங்கள் உணவுக்கு கூப்பன், இணையதளத்துக்கு மாதாந்திர கட்டணம், மேசை - நாற்காலி வாங்குவதற்கு ஒரு முறை கட்டணம் என ஒவ்வொரு நிறுவனமும் முடிந்தவரை பணியாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்தது. கடந்த 18 மாதங்களாக இருந்து வந்த ஒர்க் ஃப்ரம் ஹோம் முறை இப்போது முடிவுக்கு வரும் கட்டத்தை எட்டி இருக்கிறது.
விப்ரோ: விப்ரோ நிறுவனத்தின் முக்கியத் தலைவர்கள் ஜூலை 13-ம் தேதி முதல் வாரம் இரு முறை அலுவலகம் வருவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் 55 சதவீத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவித்தது. தற்போது மேலும் கூடுதல் சதவீத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்தாலும் உடல் வெப்பநிலை மற்றும் கோவிட் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என அறிவித்திருக்கிறது. விப்ரோ நிறுவனத்தில் 2 லட்சம் பணியாளர்கள் உள்ளன.
இன்ஃபோசிஸ்: 2.6 லட்சம் பணியாளர்கள் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இரு மாதங்களுக்கு முன்பே அலுவலகம் வருவதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதன் பிறகு செய்திகள் வெளியாகவில்லை.
தொடர்புடைய செய்தி: செப்டம்பர் வரை வீட்டில் இருந்தே வேலை: கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டம்?
டிசிஎஸ்: 2025-ம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் 25 சதவீத பணியாளர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என கோவிட் முதல் அலையின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அந்த நிலைபாட்டை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது. 5 லட்சம் பணியாளர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் உள்ளனர். இதில் 90 சதவீதம் நபர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது எடுத்துக்கொண்டனர். மேலும், மொத்த பணியாளர்களில் 50 சதவீதத்தினர் அலுவலகம் வர தயராக இருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 80 சதவீத பணியாளர்கள் அலுவலகம் வருவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.
தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரித்திருப்பது, இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் பல நிறுவனங்கள் ஹைபிரிட் மாடலில் செயல்பட தொடங்கி இருக்கின்றன. கேபிஎம்ஜி, ஐடிசி, வேதாந்தா, மோதிலால் ஆஸ்வால் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறிய டெக்னாலஜி நிறுவனங்களிலும் பணியாளர்கள் வரத்தொடங்கி இருக்கிறார்கள்.
பெங்களூருவில் அவுட்டர் ரிங் சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் அடுத்த ஆண்டு இறுதிவரை (2022 டிசம்பர்) அந்த பகுதியில் இருக்கும் நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கர்நாடக அரசு கேட்டிருக்கிறது. அதனால், இந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கும் கோவிட்டுக்கும் சம்பந்தம் இல்லை.
தவிர, அலுவலகத்தை சார்ந்து பெரிய துறை மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அலுவலகம் திறக்கும் பட்சத்தில் இவர்களுக்கு பெரும் சாதகமாக இருக்கும். குடிநீர், உணவு, ஸ்நாக்ஸ், போக்குவரத்து, சுற்றுலா, ஓட்டல் என பலர் அலுவலகத்தை நம்பி இருக்கிறார்கள்.
அலுவலகம் சென்றாக வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை என்றாலும், அதற்கான சோதனையை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. வீட்டில் இருப்பதை விட அலுவலகத்தில் வேலை செய்வது நன்றாக இருந்தாலும் தற்போது அலுவலகம் செல்ல முடியாத சூழல் சிலருக்கு இருக்கிறது. அலுவலகம் திறந்தாலும் பள்ளிகள் இன்னும் ஆன்லைனிலேயே நடக்கின்றன. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சீட்டுக்கட்டை கலைத்துபோட்டு விளையாடுவதுபோல அனைவரின் வாழ்க்கையையும் கலைத்துபோட்டிருக்கிறது கொரோனா.