தாலிக்குத் தங்கம் வேண்டுமா? பெண்களுக்கு கல்வி வேண்டுமா? : ஆதரவும்.. எதிர்ப்பும்-ஓர் அலசல்

தாலிக்குத் தங்கம் வேண்டுமா? பெண்களுக்கு கல்வி வேண்டுமா? : ஆதரவும்.. எதிர்ப்பும்-ஓர் அலசல்
தாலிக்குத் தங்கம் வேண்டுமா? பெண்களுக்கு கல்வி வேண்டுமா? : ஆதரவும்.. எதிர்ப்பும்-ஓர் அலசல்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ளது.

தாலிக்குத் தங்கம் திட்டம் எனப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில், 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது வெளியான பட்ஜெட்டில், இந்த திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றியமைக்கப்படுகிறது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.



இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு, பின்னர் உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு படிப்பு காலம் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும். இதனால், அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை உயர்வதற்கு வழிவகுக்கும். ஒருபுறம் பெண் பிள்ளைகள் படிப்பிற்காக ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டு நிதி ஒதுக்கியது பாராட்டிற்குரிய வகையில் இருந்தாலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், பொதுப்பிரிவினருக்கான திருமண உதவி திட்டம் என்பதால் பல பயனாளிகள் பாதிக்கப்படுவார்கள் என அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஏழை பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் திருமணச் செலவுகளுக்காக ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டியதாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

தங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது நிச்சயம் உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என அரசுப்பள்ளி மாணவிகள் சிலர் கூறுகின்றனர். அதேசமயம், பட்டப்படிப்பு வரை படித்து திருமணமாகும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயுடன் 8 கிராம் தங்கம் என மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்ததாகவும், தற்போதைய திட்டம் மூலம் சுமார் 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தால் 36 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



இதுதொடர்பாக பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒரு காலத்தில் பெண்களின் எதிர்காலம் திருமணம் மட்டுமே என்று பார்க்கப்பட்டது. தற்போது பெண்களின் எதிர்காலத்தில் முக்கியத்துவமாக கல்வி இருக்கும் எனக் கூறினார். உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதன் மூலம் தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தாலிக்குத் தங்கம் திட்டம் குறித்து புதிய தலைமுறையின் 360 நிகழ்ச்சியில் கருத்துகளை முன்வைத்த ஆசிரியர் ரமாதேவி, “ பெண்களின் மீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டிய திட்டம் இது. ஏனென்றால் இன்றைய பெண்களுக்கு முக்கியமானது தாலியா, கல்வியா என்ற கேள்வி முன்வைக்கப்படும்போது, கல்விதான் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். இப்போதும்கூட பெண்களை தாலி, தங்கம் எனும் குறுகிய வட்டத்திற்குள் ஏன் குறுகிப்போக செய்கிறோம் என தெரியவில்லை. அதனை விடவும் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதுதானே நல்ல சமூகமாக இருக்க முடியும்.

ஏன் இப்படி ஆண்களுக்கு ஒரு திருமண உதவி திட்டம் இதுவரை இல்லை, அப்படியானால் பெண்கள் என்றாலே செலவுதான், பெண்களுக்கு திருமணம் செய்வதுதான் ஒரே இலக்கு, அதற்கு தாலி தேவை, அதனை செய்ய தங்கம் தேவை, பணம் தேவை எனும் பிற்போக்கான கருத்துக்களையே இந்த சமூகம் முன்னெடுத்து வந்துள்ளது. அப்படி பார்க்கையில் மிக முற்போக்கான திட்டமாகவே இதனை பார்க்கிறேன்.

திருமண உதவி திட்டங்களில் மற்ற நான்கு திட்டங்கள் அப்படியே உள்ளது, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் மட்டுமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலமாக 36 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒரு ஒரு மாணவிக்கு கிடைக்கும் என சொல்லப்படுவது தவறு, ஏனென்றால் முந்தைய திட்டம் குறைந்த வருமானம் கொண்டோருக்கும், குடும்பத்தில் ஒரு பெண் குழந்தைக்கும் மட்டுமே பலனளித்தது. ஆனால், இப்போது ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த திட்டம் உதவும், மேலும் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை ஊக்குவிக்கவும், குழந்தை திருமணங்களை தடுக்கவும் இந்த திட்டம் உதவும். அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய பெண் குழந்தைகள் உயர்கல்வி கற்பதன் மூலமாக அவர்களும், சமூகமும் மேம்படுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை” என தெரிவித்தார்

இது தொடர்பாக பேசும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகி தமிழ்செல்வி பேசுகையில், “ தற்போதைய பட்ஜெட்டுக்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன, அதற்கு எங்கள் சங்கமும் பல்வேறு கருத்துகளை வழங்கியிருந்தது. குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை உட்பட திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை பெண்களை முன்னிலைப்படுத்தியே வழங்கியிருந்தது, அப்படி பார்க்கையில் இந்த பட்ஜெட் பெண்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே உள்ளது.

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி என்பது வரவேற்கத்தக்க அம்சம், இது அந்த மாணவிகளின் கல்வி, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்னொரு திட்டத்தை மாற்றி இதனை செய்வது என்பது பொருத்தமல்ல. ஏற்கனவே இருந்த தாலிக்குத் தங்கம் எனப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டம் கிராமப்புற, ஏழை எளிய பெண்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. பல கிராமப்புற பெண்கள் இன்றும் திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர் என்பது உண்மை, எனவே பழைய திட்டத்தை தொடரவேண்டும்.

இன்றும் கூட உயர்கல்வி படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. எனவே திருமணம் செய்ய நிதியுதவி அளிப்பதை பிற்போக்குத்தனமாக கருத தேவையில்லை. உயர்கல்விக்காக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் என்பது மிகவும் தேவையான ஒரு திட்டம், எனவே அதனை தனி திட்டமாக முன்னெடுக்க வேண்டும். தாலிக்குத் தங்கம் திட்டத்தை வரதட்சணையை ஊக்குவிக்கும் திட்டமாக பார்ப்பது தவறு,

ஏனென்றால் இன்றும் கூட உயர்கல்வி படித்த பல பெண்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் வேலை செய்கின்றனர், அதுபோல ஒரு கிராம் தங்கம் கூட இல்லாத எண்ணற்ற குடும்பங்கள் இங்கே உள்ளது, எனவே ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கு உதவியாக இருக்கும் தாலிக்குத் தங்கம் திட்டத்தை தொடர வேண்டும்”  என தெரிவித்தார்.

பெண்களுக்கான கல்வி மற்றும் திருமண உதவி திட்டங்கள்:

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பெண்களுக்கான பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆதிதிராவிடர் பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை 100 விழுக்காடாக உறுதிப்படுத்திடும் நோக்கத்தோடு "பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இதன்படி 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு மாதமாதம் ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. பழங்குடியின மாணவிகளைப் பொறுத்த வரையில் சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 6 ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவியர் கல்வியைத் தொடரவும் ஊக்கத்தொகையானது வழங்கப்படுகிறது. இதேபோன்று சமூக நலத்துறையின் சார்பாக ஏழை எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக ஏழை பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கத்தோடு, நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 10 வகுப்பு படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டயபடிப்பு படித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு மற்றும் பட்டயபடிப்பு படித்திருக்க வேண்டும் என்ற அடிப்படை தகுதி உருவாக்கப்பட்டுள்ளதோடு பெண்கள் பட்டபடிப்பு வரை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் அதிகரிக்கச்செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com