இந்தியாவிலும் பரவிய ஒமைக்ரான்; பூஸ்டர் டோஸ் ஆய்வுகளை துரிதப்படுத்தும் மருத்துவ உலகம்! ஏன்?

இந்தியாவிலும் பரவிய ஒமைக்ரான்; பூஸ்டர் டோஸ் ஆய்வுகளை துரிதப்படுத்தும் மருத்துவ உலகம்! ஏன்?
இந்தியாவிலும் பரவிய ஒமைக்ரான்; பூஸ்டர் டோஸ் ஆய்வுகளை துரிதப்படுத்தும் மருத்துவ உலகம்! ஏன்?

இந்தியாவில் தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து இந்தியா வந்திருந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், அதில் இருவருக்கு ஒமைக்ரான் திரிபு வைரஸ் உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு அரசு ஒமைக்ரான் திரிபுக்கான பிரத்யேக பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள தகவலில், “ஒமைக்ரான் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம். விழிப்புணர்வுடன், அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் ஒமைக்ரானை நம்மால் எதிர்கொள்ள முடியும். டெல்டா கொரோனாவைவிட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது இந்த ஒமைக்ரான் கொரோனா திரிபு. தற்போதைய சூழலில் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் மீறிவிட வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவக் குழுவை சேர்ந்த மருத்துவர் குகானந்தம் ‘இந்தியாவில் ஒமைக்ரான் பரவல்’ குறித்து புதிய தலைமுறையிடம் பேசுகையில், “ஒமைக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு, பின் அதன் பக்கத்து நாடுகளிலும் கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் இருவருக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கொரோனா என்பது, அடிப்படையிலேயே அதிக மாறுதல்களை தன்னகத்தே செய்து கொள்ளும் வைரஸ்வகையை சார்ந்தது. அதனால்தான் இதுநாள்வரை இதில் பல திரிபுகள் ஏற்பட்டுள்ளன.

இருப்பினும் ஒமைக்ரான் திரிபுக்கு, பிற திரிபுகளைவிடவும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படக்காரணம், இது 32 பிறழ்வுகளை கொண்டது என்பதால்தான். இதற்கு முன் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வகை திரிபு, 2 பிறழ்வுகளை மட்டுமே கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது. இரண்டே இரண்டு பிறழ்வுகளை கொண்ட டெல்டா திரிபு, இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற காரணத்தால், இந்த 30+ பிறழ்வு கொண்ட ஒமைக்ரான் குறித்தும் மக்களுக்கு கூடுதல் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிறழ்வுகள் அதிகம் கொண்டிருப்பதால், இந்த ஒமைக்ரான் மற்றவற்றை விடவும் வேகமாக பரவும் சக்தி கொண்டுள்ளது என்பது நாம் கவனிக்கவேண்டிய விஷயமாக உள்ளது. ஆனால் இது உறுதியானவர்களுக்கு, ஆபத்து அதிகம் ஏற்படுத்துவதாக தெரியவில்லை; மாறாக மிக மெல்லிய பாதிப்பே ஏற்படுகிறது. ஆகவே மக்கள் பயப்பட தேவையில்லை. இதுவரை ஒமைக்ரான் பரவிய நாடுகளில், அதன் நோயாளிகளை ஆராய்ந்து பார்க்கையில் அவர்களுக்கு மிக லேசான உடல் பாதிப்பு மட்டுமே ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதை வைத்தே இதை குறிப்பிடுகிறேன். அரசும் மக்களும், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய நேரம் இது” என்றார்.

மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ‘இந்தியாவில் ஒமைக்ரான் பரவல்’ குறித்து புதிய தலைமுறையிடம் பேசுகையில், “கடந்த 25-ம் தேதி முதல், ஒமைக்ரான் தடுப்புக்கு தமிழகத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சர்வதேச விமான நிலையங்கள் அனைத்திலும் மிக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 24-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் கர்நாடகாவில் இது உறுதியாகியுள்ளது. இதன் பரவல் தமிழகத்துக்குள் வராமல் இருக்க, நாங்கள் 100% இரவு பகலாக வேலை செய்கிறோம். இப்போதைக்கு இந்த வைரஸ் கூடுதல் வேகமாக பரவும் என்று உறுதியாக நமக்கு தெரிகிறது. ஆகவே அடுத்தடுத்த நாள்களில் இதன் பரவல் தமிழகத்தில் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதை கருத்தில்கொண்டு, தமிழக அரசு அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மருத்துவமனையை தயார் நிலையில் வைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. 

பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்குமான போக்குவரத்து சார்ந்த கட்டுப்பாடுகள் குறித்தெல்லாம் வரும் நாள்களில் முடிவெடுக்கப்படும். ஏற்கெனவே தென்னாப்ரிக்க மக்களுக்கு விமான நிலையங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு, அவர்கள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆகவே கட்டுப்பாடுகள் குறித்து சென்சிடிவாக முடிவெடுக்க உள்ளோம். இப்போதைக்கு மக்களின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே எங்களுக்கு அவசியப்படுகிறது. அந்தவகையில் அரசுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக அனைவருமே இரு டோஸ் தடுப்பூசியையும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். செவிலியர்கள் வந்து கட்டாயப்படுத்தினால் மட்டுமே தடுப்பூசி போடுவோம் என்று இருக்கக்கூடாது. போலவே முதல் டோஸ் போட்டவர்கள், இரண்டாவது டோஸை தவிர்க்கக்கூடாது. முக்கியமாக அனைவரும் மாஸ்க் அணிவதில் அலட்சியம் காட்டவே கூடாது” என்றார்.

இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் மூர்த்தி இவ்விவகாரம் குறித்து புதிய தலைமுறையிடம் பேசுகையில், “இந்த ஒமைக்ரான் மக்கள் மத்தியில் எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை இனிதான் அறிய வேண்டியுள்ளது. போலவே தடுப்பூசிக்கு எப்படி வேலை செய்யும் என்பதையும் அறிய வேண்டியுள்ளது. தற்போதைக்கு இது மெலிதான பாதிப்புகளையே ஏற்படுகிறது என்பதால், சற்று ஆறுதல் அடையலாம். இருப்பினும் இதுவும் இன்னும் பெரியளவில் தரவுகளுடன் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்.

இந்த நேரத்தில் மருத்துவ உலகில் பூஸ்டர் டோஸ் குறித்த விவாதம் எழுந்துள்ளது. பூஸ்டர் டோஸ் போடுபவர்களுக்கு, இப்படியான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்படலாம் என சொல்லப்படுவதால், வரும் நாள்களில் அதுசார்ந்த ஆய்வுகள் அதிகரிக்கப்படும். எதுவாகினும், நாம் இப்போது மிக ஆரம்ப நிலையிலேயே உள்ளோம். ஆகவே மக்கள், சுய எச்சரிக்கையுடன் இருக்கவும். அரசு செய்தால்தான் விழிப்புணர்வு நடவடிக்கை என்றில்லை; அரசைப்போலவே ஒவ்வொரு தனிநபருக்கும் பொறுப்பு அதிகம் உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com