மும்பை அணி ப்ளே ஆஃப் போகாமல் தடுக்க மற்ற அணிகள் கங்கணம் கட்டி விளையாடியதா? - ஓர் அலசல்

மும்பை அணி ப்ளே ஆஃப் போகாமல் தடுக்க மற்ற அணிகள் கங்கணம் கட்டி விளையாடியதா? - ஓர் அலசல்

மும்பை அணி ப்ளே ஆஃப் போகாமல் தடுக்க மற்ற அணிகள் கங்கணம் கட்டி விளையாடியதா? - ஓர் அலசல்

ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் கெத்து காட்டும் அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். ஆனால் நடப்பு சீசனில் பிளே-ஆப் சுற்றுக்கு மும்பை முன்னேறுமா? என்பதே சந்தேகமாகி உள்ளது. அதிலும் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடக் கூடாது என்பதில் மற்ற அணிகள் (குறிப்பாக புள்ளிப் பட்டியலில் பின்தங்கிய அணிகள்) ரொம்பவே குறிக்கோளாக இருந்ததாக மீம்ஸ்களும், அது சார்ந்த பேச்சுகளும் இணைய களத்தில் உலா வருகின்றன. அந்த அளவுக்கு மற்ற அணிகள் மீது மும்பை இதற்கு முந்தைய சீசன்களில் முரட்டுக் குத்து குத்தியுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ்!

2008 முதல் ஐபிஎல் அரங்கில் விளையாடி வரும் Franchise அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். 13 சீசன்களில் 4 முறை மட்டுமே முதல் சுற்றுடன் மும்பை வெளியேறி உள்ளது. 3 முறை பிளே-ஆப், 1 முறை ரன்னர் அப், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணி. 

அந்த அணியின் ஆட்டமும் சாம்பியன் போல தான் இருக்கும். ரோகித், டிகாக், பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா சகோதரர்கள், பும்ரா மாதிரியான மேட்ச் வின்னிங் வீரர்கள் நிறைந்த அணி அது. 

நடப்பு சீசனில் எப்படி?

நடப்பு சீசனில் இந்தியாவில் நடந்த முற்பாதியில் 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றது மும்பை. தற்போது அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது பாதியில் 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் மும்பை உள்ளது. லீக் சுற்றில் கடைசி போட்டியாக மும்பை, ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 

இந்த ஆட்டத்தில் மும்பை முதலில் பேட் செய்து 200 ரன்களுக்கு மேல் எடுத்து, 171 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அந்த அணியால் தகுதி பெற முடியும். மும்பை (-0.001) மற்றும் கொல்கத்தா (+0.587) அணிகளுக்கு இடையே உள்ள ரன் ரேட் வித்தியாசம் தான் மும்பை இந்த பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மற்ற அணிகளின் வெற்றி தோல்வியினால் மும்பை பாதிப்பா?

நடப்பு சீசனை பொறுத்தவரையில் நான்காவது இடத்திற்கான ரேஸில் இருந்த அணிகள் பெற்ற வெற்றி, தோல்வி மும்பை அணியின் இந்த நிலைக்கு ஒரு காரணம் என சொல்லலாம். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் சேர்க்க தவறியதே ரன் ரேட் வித்தியாசத்தை ஏற்படுத்த முக்கியக் காரணம். 

ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை, கொல்கத்தா என நான்கு அணிகள் நான்காவது அணியாக நடப்பு சீசனுக்கான பிளே ஆப் சுற்றில் நுழைய முயற்சி செய்தன. அதில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்றது. இதே ராஜஸ்தான் அணி சென்னையை 7 விக்கெட் வித்தியாசத்தில் 15 பந்துகள் எஞ்சியிருக்க 190 ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருந்தது. டெல்லியை கொல்கத்தா வீழ்த்தியதும் மும்பைக்கு பாதகமாக அமைந்தது. 

ஆனால், இதற்கு முன்பு சில சீசன்களிலும் மும்பை இறுதி நேரத்தில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. அந்த நேரத்தில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள் அந்த அணிக்கு சாதகமாக அமைந்திருந்தது. ஆனால், அந்த சினாரியோ இப்போது மும்பை அணிக்கே பாதகமாக மாறிவிட்டது. மும்பை அணி வீரர்களின் மோசமான ஆட்டம்தான் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. மற்ற காரணங்கள் எல்லாம் பின்புதான்.

கிரிக்கெட் விளையாட்டில் எதுவும் சாத்தியம் என்பதால் அதிர்ஷ்டம் மும்பை பக்கம் வீசினால் அந்த அணி இந்த சீசனில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com