கொரோனா கால மாணவர் நலன் 22: ``குழந்தைகளிடம் தடுப்பூசியை திணிக்கும் அரசு”- சாதகமா பாதகமா?

கொரோனா கால மாணவர் நலன் 22: ``குழந்தைகளிடம் தடுப்பூசியை திணிக்கும் அரசு”- சாதகமா பாதகமா?
கொரோனா கால மாணவர் நலன் 22: ``குழந்தைகளிடம் தடுப்பூசியை திணிக்கும் அரசு”- சாதகமா பாதகமா?

பிப்ரவரி 13-ம் தேதி கணக்குப்படி இந்தியாவில் 15 - 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவ குழந்தைகளில் 70% பேர் தங்களுக்கான கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்று விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். விரைவில் இதை 100% என்று உயர்த்த, பிற சிறார்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார் அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

இந்தியாவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யாருக்கும் இன்றுவரை கட்டாய தடுப்பூசி என்பது போன்ற எந்த உத்தரவும் அமலில் இல்லை. அப்படியான சூழலில், சிறார் மத்தியிலான தடுப்பூசி விநியோகத்தை தொடங்கிய ஒன்றரை மாத காலத்துக்குள் அரசு சுமார் 70% சிறார்கள் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு விட்டதாக குறிப்பிடுவது, சிறார் மத்தியில் கட்டாய தடுப்பூசியை அரசு செலுத்துகிறதோ என்ற கேள்வியை நமக்கு எழுப்புகிறது. இதையொட்டியே, இந்த அத்தியாய கொரோனா கால மாணவர் நலன் அமையவுள்ளது.

சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தி, சமீபத்தில், ``12-14 வயது குழந்தைகளுக்கு அறிவியல்ரீதியாக ஏன் கட்டாய கொரோனா தடுப்பூசி தேவையில்லை” என்றொரு கருத்தை முன்வைத்திருந்ததும், இங்கே கவனிக்கத்தக்கது. அவரிடமே ``70% சிறார் தடுப்பூசி” பற்றிய அறிவிப்பு குறித்தும் பேசினோம்.

“சிறார் தடுப்பூசி விநியோகம் விஷயத்தில், நிச்சயம் அரசு தனது செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் இன்றுவரை கட்டாய தடுப்பூசி திட்டமெதுவும் அமலில் இல்லை என்பது, எல்லோரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவெனில் - `சட்டமாக இல்லை என்பதை போலவே, அறிவியல் பூர்வமாகவும் சிறாருக்கு தடுப்பூசி போடுவது அத்தியாவசியம் இல்லை’. இதை நான் குறிப்பிட்டு சொல்ல, சில காரணங்கள் உள்ளன. அவற்றை சொல்கிறேன்:

1. குழந்தைகளுக்கு கொரோனா நோய் பாதிப்பின் தீவிரம் மிகக் குறைவு. பொதுவாக கொரோனா வைரஸ், மனித உடலின் திசுக்களுக்குள் செல்வதற்கு ACE2 receptor தேவை. அவை குழந்தைகளுக்கு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், நோய் தீவிரம் இருக்காது. அதேபோல உயிரிழப்பும், மிகக் குறைவு. அப்படி அரிதாக இறக்கும் குழந்தைகளும்கூட, இணைநோய் பாதிப்பு இருப்பவர்கள்தான். மற்றபடி, கொரோனா இறப்பென்பது மிக மிக அரிதாக உள்ளது குழந்தைகளுக்கு. ஆக எல்லா குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி வேண்டுமென்பது அறிவியல் ஆதாரமற்றவை. இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசியின் தேவை அதிகம் இருக்கிறது. இக்கருத்துகளை நான் மட்டும் சொல்லவில்லை. கோவேக்சின் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் சஞ்சய் ராயும், தெளிவாக விளக்குகிறார். சஞ்சய் ராய், `குழந்தைகளுக்கு கட்டாய தடுப்பூசி தேவையில்லை என சொல்வது - சாதக/பாதகங்களை கணக்கிட்டால், அது பாதகங்கள் அதிகம் உள்ளது என்பதால் கட்டாய தடுப்பூசி தேவை இல்லை’ என்பதை முன்வைக்கிறார்.

2. தற்போது செலுத்தப்படும் குழந்தைகள் தடுப்பூசியின் செயல்பாடு எவ்வளவு நாள்கள் நீடிக்கும், எந்தளவுக்கு உறுதியான பலன்களை கொடுக்கும் என்பது பற்றிய நீண்ட கால/ குறுகிய கால ஆய்வு முடிவுகள் இப்போதுவரை வெளிவரவில்லை. தடுப்பூசியின் பின்விளைவுகள் /பாதுகாப்புத்தன்மை குறித்தான நீண்ட கால/குறுகிய கால ஆய்வுகள் முறையாக நடத்தப்பட வேண்டும். அப்படியான நிலையில், அனைவரும் தடுப்பூசி போடவேண்டுமென அரசு நினைப்பது எப்படி சரியாகும்?

3. தடுப்பூசியின் நீண்ட கால பின்விளைவுகள் [உதாரணமாக இதய தசை அழற்சி(Myocarditis)] பற்றிய தெளிவான புள்ளிவிவரம் இப்போது வரை இல்லை. அவற்றைப்பெற நீண்ட காலம் தேவைப்படுவதால், அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளாமல் தடுப்பூசியை எல்லா குழந்தைகளுக்கும் செலுத்த நினைப்பது,  தடுப்பூசி போடவில்லையெனில் தேர்வு எழத விடமாட்டோம் என மறைமுகமாக அவர்களை தடுப்பூசிக்கு வற்புறுத்துவது ஒரு பொறுப்பான அரசின் செயல்பாடுகள்தானா?

4. முதல்முறை 10-18 வயது சிறார்களுக்கு தமிழகத்தில் செய்த ஆய்வில் ரத்தத்தில் உள்ள கொரோனா நோய் எதிர்ப்பு புரதம் (Ig G) 68% பேருக்கு உள்ளதென முடிவுகள் சொல்கிறது. இது, டிசம்பர் 2021 கடைசி வாரம் (ஓமைக்ரான் அலைக்குப் பிறகு) நிச்சயம் அதிகரித்திருக்கும். அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளாமல் தடுப்பூசியை கட்டாயமாக்குவது சரியல்ல. ஒருவேளை அது அதிகரித்திருப்பது தெரியவந்தால், இணை நோயற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசியின் தேவை பெரியளவில் இருக்காது. ஏனெனில் குழந்தைகள் மத்தியில் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கையில் (68%), அது செயற்கையாக தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட 27 மடங்கு அதிகம் என இருக்கையில் (இப்போது விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள் யாவும் தோராயமாக 80% செயல்திறன்தான் தரும் என சொல்லப்படுகிறது) அது பெரியளவிலான பலன்களை அவர்களுக்கு தராது. முன்பே சொன்னதுபோல, இணை நோயற்ற குழந்தைகள் மத்தியிலான கொரோனா தடுப்பூசியின் பலனும் அதன் விகிதமும் முற்றிலுமாக தெரியாத நிலையில் கட்டாய தடுப்பூசி தேவையில்லை.

5. குழந்தைகளுக்கு எந்த நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சிறந்தது என்பது பற்றிய ஆய்வுகள் இப்போதுவரை தெளிவாக இல்லை. ஆக, இப்போதிருக்கும் ஒரேயொரு கொரோனா தடுப்பூசியை, எல்லோருக்கும் தடுப்பூசி போடுவது எப்படி சரியாகும்? `இணை நோயற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி நிச்சயம் தேவையில்லை’ என தேசிய கொரோனா தடுப்புக் குழு உறுப்பினர் மரு.ககன்தீப் காங் கூறியிருப்பது; `இறப்புகள் ஏறக்குறைய முற்றிலுமாக இல்லாத சூழலில் கட்டாய தடுப்பூசி தேவையில்லை’ என மத்திய தடுப்பூசி பரிந்துரைக் குழுவின் முக்கிய உறுப்பினர் மரு.ஜெயபிரகாஷ் முலியேல் ஆகியோர் கூறியுள்ளதெல்லாம் இங்கே குறிப்பிடத்தக்கது.

6. குழந்தைகள் மத்தியிலான மொத்த கொரோனா இறப்பில், 15 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில்தான் இறப்பு அதிகமிருப்பதாக அரசு தெரிவிக்கின்றது. ஆனால், அப்படி பதிவாகும் இறப்பிலும்கூட, இணை நோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்குத்தான் அதிக இறப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் முழுமையான தரவை அறிந்துக்கொள்ள நினைத்து, தேசிய கொரோனா தடுப்புக் குழு உறுப்பினர் மருத்துவர் ககன்தீப் காங் சமீபத்தில் ஒரு கேள்வியொன்றை அரசுக்கு வைத்திருந்தார். அதில் அவர், “15-18 வயது குழந்தைகளுக்கு இறப்பு மிக மிகக் குறைவாக இருந்தாலும், அப்படி இறந்தவர்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு இணைநோய்கள் இருந்தது?” எனக் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதா, இல்லையா எனும் விபரத்தைக் காட்டிலும், இணைநோய்கள் இறப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பதை அரசும் அதிகாரிகள் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்பதே எங்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஏனெனில் அதை தெரிந்துக் கொண்டால்தான், தடுப்பூசியின் அவசியத்தை நம்மால் உணரமுடியும். தடுப்பூசிதான் உயிர்க்கவசம் என்கையில், உயிர் தொடர்பான புள்ளிவிவரமின்றி அரசு செயல்படுவது சரியா?

7. தடுப்பூசி செலுத்திய / செலுத்தாத பெரியவர்களை பொறுத்தவரை, நோய்பரப்பும் தன்மையில் பெருமளவு வேறுபாடு இல்லை என்பது ஆய்வுகள் மூலம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அத்தகைய ஆய்வுகளை குழந்தைகள் மத்தியில் செய்யாமல் தடுப்பூசியை அவர்களுக்கு மறைமுகமாக கட்டாயப்படுத்துவது எப்படி சரியாகும்?

8. தேசிய கொரோனா தடுப்புக் குழு உறுப்பினர் மருத்துவர் ககன்தீப் காங் தனது ஒரு பேட்டியில், “குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கப்படும் கொரோனா தடுப்பூசியே, பின்னாள்களில் அவர்களுக்கான கொரோனா நோய் எதிர்ப்பு சக்திக்கு அடித்தளமாக அமையும். (கொரோனா இன்னும் உலகை விட்டு மறைய பல வருடங்கள் ஆகும் என்பது இங்கே நினைவுகூறதக்கது.) ஆனால் இன்றுவரை கொரோனாவுக்கு எதிராக கொடுக்கப்படும் தடுப்பூசியில் எது சிறந்தது என தெளிவான ஆதாரங்கள் இல்லை. மட்டுமன்றி, இன்று இந்தியாவில் குழந்தைகளுக்கு இருப்பது ஒரேயொரு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிதான். இப்படி உரிய ஆய்வு இல்லாமல், எந்த கொரோனா தடுப்பூசி சிறந்த பலனைக் கொடுக்கும் என்றும் தெரியாமல் இப்படி எல்லா குழந்தைக்கும் ஒரே தடுப்பூசியை கொடுப்பதால், கொரோனாவுக்கு எதிரான அவர்களின் இயற்கை நோய் தொற்று எதிர்ப்புக்கு (Original antigenic sin) பாதகம் ஏற்படலாம். பல பின்விளைவுக்கு அதுவே காரணமாகவும் அமையலாம்” என சொல்கிறார். இதை அரசு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

9. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று உள்ளது. அது, சட்டப்படி தடுப்பூசியின் சாதக/பாதகங்களை பெற்றோரிடம் விளக்கி அவர்கள் ஒப்புதல் பெற்றுதான் குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்த வேண்டும். ஆனால் பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு காப்பாளராக (Guardian) தலைமை ஆசிரியர் இருப்பதால்,அவரின் ஒப்புதலோடு தடுப்பூசி செலுத்த முடியும் எனும் தவறான வாதத்தை அரசு முன்வைக்கிறது. உண்மையில் தடுப்பூசி செலுத்த இருக்கும் மாணவர் தன் பெற்றோரின் இசைவை கேட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் உரிமை உள்ளது. மேலும் பெற்றோர் தனது குழந்தைக்கு தடுப்பூசி தேவையில்லை என எழுதிக் கொடுக்க சட்டத்தில் இடமுள்ளது. அப்படி எழுதிக் கொடுத்தால், தலைமை ஆசிரியரின் இசைவு செல்லாது என்றும் சட்டத்தில் உள்ளது. அப்படியிருக்கு, தலைமை ஆசிரியர்தான் காப்பாளர் என அரசு சொல்வது எப்படி சரியாகும்? எத்தனை தலைமை ஆசிரியர்கள் இதுவரை துணிந்து தடுப்பூசியை கட்டாயமில்லை என்று மாணவர்களுக்கு சுதந்திரமாக பேசும், செயல்படும் நிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் நாம் காண வேண்டியுள்ளது. ஆக, இவ்விஷயத்தில் பெற்றோரின் முடிவே இறுதியானது என்பதை அரசு சொல்ல வேண்டும்.

10. தற்போதைய பரவலில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒமைக்ரான் திரிபில் (97% ஒமைக்ரான் பரவல்தான் என்றும்; 3% டெல்டா பரவல்தான் என்றும் அரசு சொல்கிறது) என இருக்கையில் ``தடுப்பூசிக்கு ஒமைக்ரான் கட்டுப்படாது” என மத்திய தடுப்பூசி பரிந்துரைக் குழுவின் முக்கிய உறுப்பினர் மரு.ஜெயபிரகாஷ் முலியேல் கூறியுள்ளார். இதை அடிப்படையாக கொண்டு ``குழந்தைகளுக்கு கட்டாய தடுப்பூசி எப்படி அறிவியல் ரீதியாக சரியாகும்?” என உச்சநீதிமன்ற கேள்விக்கு `தடுப்பூசி கட்டாயமல்ல’ என அரசு எழுத்து வடிவில் தாக்கல் செய்தது. ஆனால் இன்று அதுவா நடக்கிறது? ஒன்றரை மாதத்துக்குள் 70% குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டாச்சு என்கின்றது அரசு. எனில் மறைமுகமாக குழந்தைகளை இவர்கள் தடுப்பூசிக்கு வற்புறுத்துகின்றனர் என்றுதானே பொருள்? இது நிச்சயம் ஏற்புடையதக்கதல்ல.

இப்படி என்னால் `குழந்தைகள் மத்தியிலான கட்டாய தடுப்பூசி’க்கு எதிராக இன்னும் பல காரணங்களை அடுக்க முடியும். இருப்பினும் அரசுக்கு எனது கோரிக்கையொன்று உள்ளது. அதை மட்டும் சொல்கிறேன். அரசு அடுத்தபடியாக 12 - 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளதாக சொல்கிறது. அதற்கு முன்னர் அவர்கள் இதுவரை 12-14 வயது குழந்தைகள் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், எத்தனை பேரை மருத்துவமனையில் சேர்க்கும் சூழல் ஏற்பட்டது, எத்தனை பேர் உயிரிழந்தனர், அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு இணைநோய்கள் இருந்ததா என்பதை பொதுவெளியில் வெளியிட வேண்டும். அவற்றை தொடர்ந்து, அந்த வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்தானா என்பதை நிபுணர் குழுவுடன் ஆலோசித்துவிட்டு அரசு முடிவு செய்ய வேண்டும். மக்களோடு கலந்துரையாடல் நடத்தி முடிவெடுப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.

நான் சொல்வதெல்லாம் - தடுப்பூசியின் பாதுகாப்புகள், முறையாக ஆராயப்பட வேண்டும். அந்த ஆய்வுகள், பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் (அவர்களின் பெற்றோர்களுக்கும்) தடுப்பூசியின் சாதக/பாதகங்களை அறிந்து தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும். அறிவியல் கருத்துகளின் அடிப்படையில் தேவையை ஒட்டி தடுப்பூசியின் பயன்பாடு அமைய வேண்டும்.

அதேபோல தடுப்பூசிக்கான தேவையானோருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இன்றும் உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையால் தவிக்கிறது. பல இடங்களில், தடுப்பூசி கிடைக்கப்பட வேண்டியவர்கள் பலரும், தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கின்றனர். ஆகவே தேவையறிந்து கொடுங்கள். போலவே, தேவையில்லாத இடத்தில் தடுப்பூசியை கொடுத்தால் ஏதேனும் தீமைகள் உள்ளனவா என்றும் ஆராயப்பட வேண்டும். இவையே இங்கு முக்கியம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com