ரவி சாஸ்திரி போன்று துணிச்சலான முடிவு எடுக்க தயங்குகிறாரா ராகுல் டிராவிட்? - ஓர் பார்வை

ரவி சாஸ்திரி போன்று துணிச்சலான முடிவு எடுக்க தயங்குகிறாரா ராகுல் டிராவிட்? - ஓர் பார்வை
ரவி சாஸ்திரி போன்று துணிச்சலான முடிவு எடுக்க தயங்குகிறாரா ராகுல் டிராவிட்? - ஓர் பார்வை

இந்திய கிரிக்கெட் அணியின் 24-வது தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட். முதலில் இடைக்கால பயிற்சியாளராக அணியுடன் பணியாற்றிய டிராவிட் கடந்த 2021 நவம்பர் முதல் முழுநேர தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். 

இந்திய அணி தற்போது அவரது பயிற்சியின் கீழ்தான் தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா இழந்துள்ள நிலையில் பயிற்சியாளர் டிராவிடை ஓவர் ரேட்டட் (மிகைப்படுத்தி) செய்து கொண்டாடி விட்டதாக சமூக வலைதளங்களில் சாடி வருகின்றனர் ரசிகர்கள். 

பயிற்சியாளர் டிராவிட்!

ராகுல் டிராவிட்டுக்கு பயிற்சியாளர் பொறுப்பு புதிதல்ல. 2014-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வழிகாட்டியாக (மென்டர்) இந்த பணியை தொடங்கியவர் அவர். நான்கு ஆண்டுகள் இந்திய ஜூனியர் மற்றும் இந்திய-ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியவர். தற்போதைய இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் சிலர் அவரிடம் பாலபாடம் கற்றவர்கள். பண்ட், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர் என பலர் அவரது வார்ப்புகள். 2019 முதல் 2021 வரை தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ) இயக்குனராக அவர் பணியாற்றியுள்ளார். இந்திய அணியில் விளையாட தகுதி படைத்த இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது, வீரர்களின் உடற்தகுதி உட்பட என.சி.ஏ-வின் மொத்த பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டவர். 

4 மாதங்களில் 5 கேப்டன்களுடன் பணியாற்றிய ராகுல்!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் நான்கு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நான்கு மாதங்களில் ஒரு மாதம் அவர் இடைக்கால பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார். அது இந்திய அணி கடந்த 2021 ஜூலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடந்தது. 

அந்த தொடரில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டார். அதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றும், டி20 தொடரை 1-2 கணக்கில் இழந்தும் இருந்தது இந்தியா. நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான ஹோம் சீரிஸில் டி20 தொடருக்கு ரோகித் கேப்டன். அதுவே டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு ரஹானே கேப்டன், இரண்டாவது போட்டிக்கு கோலி கேப்டன். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடருக்கு (கோலி + கே.எல்.ராகுல் கேப்டன்), ஒருநாள் தொடருக்கு கே.எல்.ராகுல் என அவர் பயிற்சியாளராக பணியாற்றி உள்ள 4 மாதங்களில் மட்டும் நடைபெற்ற 16 போட்டிகளில் 5 கேப்டன்கள் இந்தியாவை வழி நடத்தி உள்ளனர். அதனால் ரெகுலர் கேப்டன் இல்லாமல் அணியில் சரியான வீரர்கள் கொண்ட சேர்க்கையை அமைப்பதில் டிராவிட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணியின் பயிற்சியாளராக இயங்கி வந்த யாருக்கும் இந்த சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை. 

ரவி சாஸ்திரி போன்று முக்கிய முடிவுகள் எடுக்க தயங்குகிறாரா ராகுல் டிராவிட்? 

2017 வாக்கில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் ரவி சாஸ்திரி. இவரது பயிற்சியின் கீழ்தான் ஆஸ்திரேலியாவில் 2018-19 மற்றும் 2020-21 என இரண்டு முறை இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது. கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது. அதுவே ஐசிசி தொடரில் தோல்விகளை தழுவியுள்ளது. இதே தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்தியா டெஸ்ட் தொடரை அவரது பயிற்சியின் கீழ் இழந்துள்ளது. 

இருப்பினும் அவர் துணிச்சலான முடிவுகளை முன்னெடுப்பார். அதனை கேப்டனிடம் சொல்லி கன்வெர்ட் செய்வார். டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பவுலரும், ஆல் ரவுண்டருமான அஷ்வினை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் விளையாட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அதற்கு ஒரு உதாரணம். அதில் அணியின் வெற்றிக்காக கள வியூகம் அமைக்கும் ரீதியாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முக்கிய பங்கு இருக்கலாம். அதே போல 2021 தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது உளவியல் ரீதியிலான அழுத்தம் இந்திய அணியின் மீது விழுந்த போதும் அதை கண்டும் காணாமல் இந்தியா தொடரை வெல்ல முக்கியக் காரணம் ரவி சாஸ்திரிதான். இதையெல்லாம் விட அவரது பயிற்சி காலத்தில் பெரிய அளவில் கேப்டன்சி மாற்றங்கள் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ரவி சாஸ்திரியுடன் ஒப்பிடும் போது டிராவிட் செய்கின்ற சில தவறுகள் சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் அணி தோல்வியை தழுவிய போதும் இரண்டாவது போட்டியில் அதே அணியை வைத்து விளையாடியது தொடங்கி பல ஆங்கிளில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு, பயிற்சியாளர் டிராவிட் தன் தரப்பிலிருந்து என்ன விதமான இன்புட் கொடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரியவில்லை. 

பார்க்க பரம சாதுவாக தெரிந்தாலும் துணிச்சல்மிக்க முடிவுகளை எடுப்பதற்கு டிராவிட் தயங்குபவர் இல்லை. 2005 -இல் இந்திய அணியின் கேப்டனாக டிராவிட் செயல்பட்டபோது இலங்கை அணிக்கு எதிரான ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தோனியை மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறக்க முக்கிய காரணமாக இருந்தவர். அதனால் அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதோடு அந்த போட்டியில் தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரான 183* ரன்களை எடுத்திருந்தார். 

அதே போல முழுநேர பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சவால் நிறைந்த ஆடுகளத்தை தயார் செய்யுமாறு டிராவிட், கான்பூர் மைதான ஆடுகள பராமரிப்பாளரிடம் சொன்னதாகவும். அதற்காக சுமார் 35000 ரூபாய் அவர் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை உத்தரப் பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 2021 தொடக்கத்தில் இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரை இந்தியா 3 - 1 என கைப்பற்றியது. அந்த தொடர் நடைபெற்ற ஆடுகளங்கள் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததாக சில விமர்சனங்கள் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  

பிறகு என்ன சிக்கல்?

இந்திய அணி தற்போது டிரான்சிஷனில் உள்ளது. கடந்த ஆண்டு வரை கோலியின் தலைமையின் கீழ் இயங்கி வந்த அணி இப்போது தலைமை மாறுகின்ற காரணத்தால் சில சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அதை அடுத்தடுத்த போட்டிகளில் பயிற்சியாளர் டிராவிட் மாற்றுவார் என நம்புவோம். அது வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் 2023 50 ஓவர் உலகக் கோப்பை தொடரையும் வெல்ல உதவட்டும். 

மேலும் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரச்சனை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. யுவராஜின் ஓய்வுக்கு பிறகு அவர் விட்டுச்சென்ற வெற்றிடம் அப்படியே நிரப்பப்படாமல் உள்ளது. அதையும் டிராவிட் சரி செய்வார் என நம்புவோம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com