2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடத்தப்படுமா? - எதிர்பார்ப்பில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு!

2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடத்தப்படுமா? - எதிர்பார்ப்பில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு!
2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடத்தப்படுமா? - எதிர்பார்ப்பில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு!

விளையாட்டு உலகின் திருவிழா என்றால் அது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்தான். காலம் காலமாக பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய சிறப்பு மிக்க விளையாட்டு போட்டி இது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையென தற்போது மாடர்ன் ஒலிம்பிக் நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என பல விளையாட்டு வீரர்கள் பெருங்கனவு கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த விளையாட்டு பிரபலமாகும். 

கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் நடத்தப்பட்டது. அடுத்ததாக வரும் 2024 பாரிஸ் நகரிலும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் ஒலிம்பிக் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2032-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2036-ஆம் ஆண்டை டார்கெட் செய்துள்ளது இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (IOA). ஏனெனில் அந்த ஆண்டு எந்த நாடு ஒலிம்பிக்கை ஹோஸ்ட் செய்யவுள்ளது என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. அதனால் அதை டார்கெட் செய்துள்ளது இந்தியா. 

என்ன சொல்கிறார் IOA தலைவர் நரீந்தர் பாத்ரா?

“வரும் 2023-ஆம் ஆண்டு மும்பை நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வு நடைபெற உள்ளது. இது அண்மையில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான அமர்வில் உறுதி செய்யப்பட்டது. இதனை இந்தியா மாபெரும் விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கை ஹோஸ்ட் செய்வதற்காக எடுத்து வைத்துள்ள முதல் அடியாக நான் பார்க்கிறேன். வரும் 2030 இளையோர் ஒலிம்பிக் மற்றும் 2036 ஒலிம்பிக்கை இந்தியாவில் நடத்த எங்களால் முடிந்த அளவிலான முயற்சிகளை முன்னெடுப்போம்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய மூன்றாவது பெரிய நாடாக இந்தியா முன்னேற வாய்ப்புள்ள நிலையில் அதுவும் சாதகமாகவே அமையும். அதே நேரத்தில் இந்த அமர்வின் மூலம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் இங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பார்க்கவும் முடியும். வரும் நாட்களில் இந்தியா விளையாட்டு உலகில் சக்தி படைத்த நாடாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியா இரண்டாவது முறையாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை நடத்த உள்ளது. கடைசியாக 1983 வாக்கில் தலைநகர் டெல்லியில் இந்த அமர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அமர்வில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒலிம்பிக் குறித்து ஆலோசித்து, முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்த அமர்வில்தான் அடுத்ததாக ஒலிம்பிக்கை நடத்த உள்ள நாடுகள் எது? எந்த விளையாட்டை சேர்க்கலாம்? என்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 

“2023 அமர்வுக்கு இந்தியாவை நாங்கள் தேர்வு செய்ததற்கான முக்கியக் காரணம் உலகளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இருப்பதும். இளைஞர்களை அதிகம் கொண்டிருக்கின்ற நாடாகவும் இருப்பதால் தான். இது பலம் மிக்க இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்” என தெரிவித்துள்ளார் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் Bach. 

இருந்தாலும் வல்லுனர்கள் சிலர் 2036 எடிஷனில் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கை ஹோஸ்ட் செய்யும் வாய்ப்பு அமையவில்லை என்றால் அது 2040 வாக்கில் கைகூடும் என சொல்வதை பார்க்க முடிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com