அரசு காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார்மயம்? - புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணி

அரசு காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார்மயம்? - புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணி
அரசு காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார்மயம்? - புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணி

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான யுனைட்டட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனியை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அரசு காப்பீடு நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் முக்கிய திருத்தங்களை கொண்டுவரும் மசோதா ஒன்றை மத்திய அரசு வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தது, எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அரசு காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றன.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள "ஜெனரல் இன்ஷூரன்ஸ் பிசினஸ் (நேஷனலைசேஷன்) திருத்த மசோதா" என்பது மத்திய அரசின் காப்பீடு நிறுவனங்களான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி, ஓரியன்டல் இன்ஷூரன்ஸ் கம்பெனி மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றின் உரிமை மற்றும் மேலாண்மை தொடர்பானது. இப்போதுள்ள சட்டப்படி, இந்த நிறுவனங்களின் பங்குகளில் 51 சதவீதத்துக்கு குறையாமல் மத்திய அரசின் உரிமையில் இருக்க வேண்டும். அதாவது மத்திய அரசு இந்த நிறுவனங்களின் உரிமையாளராக இருக்க வேண்டும்.

இந்த சட்டத்தைத் திருத்தி, அரசு இந்த நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தபட்சம் 51 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிற முக்கிய விதியை மாற்றுவதற்காக, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒப்புதல் கிடைத்து, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, அரசு இந்த நிறுவனங்களில் 51% பங்குகளை தனது உரிமையில் வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்காது.

இதைத்தவிர, இந்த நிறுவனங்களின் செயல்பாட்டில் மாறுதல்களை உண்டாக்கும் வகையிலே, இந்த நிறுவனங்களின் இயக்குநர்களின் பொறுப்புகள் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் காப்பீடு நிறுவனங்களை தனியார்மயமாக்க இந்த மாற்றங்கள் அவசியம் என கருதப்படுகிறது.

சட்டத்தில் இந்தத் திருத்தங்களை செய்த பிறகு, இந்த நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்க முடியும். இந்த வருட நிதிநிலை அறிக்கையிலேயே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு அரசுடமை வங்கிகள் மற்றும் ஓர் அரசுடமை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை தனியார்மயமாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஆயோக் சமீபத்தில் மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ள ஓர் அறிக்கையில், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனியை தனியார்மயமாக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் காரணமாக, மத்திய அரசு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பல அரசுடைமை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், காப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதால் அந்நிய முதலீடு மூலம் ஓர் அரசுடமை காப்பீட்டு நிறுவனத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக நாடாளுமன்றத்திலே குற்றம்சாட்டப்பட்டது. இந்தப் புகாரை மறுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காப்பீட்டு துறையில் உள்ள போட்டியை சமாளிக்க அரசுடைமை காப்பீடு நிறுவனங்கள் புது வகையான சேவைகளை வழங்க வேண்டும் என்றும், அதற்காக அவர்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

பொதுவுடைமை காப்பீடு நிறுவனங்களை தனியாருக்கு விற்க முயலவில்லை என்றும், பங்குகள் பொதுமக்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் எனவும் மத்திய அரசும் கூறி வருகிறது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய மசோதா காரணமாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மற்றும் எதிர்கட்சிகள் இடையே மேலும் ஒரு மோதல் உருவாகி வருகிறது. ஏற்கெனவே எல்.ஐ.சி. பங்குகளை விற்க எதிர்ப்பு தொடரும் நிலையில், அரசுக்கு நாடாளுமன்றத்தில் மேலும் எதிர்ப்பு அதிகரிக்கும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com