ஹைபர் டென்ஷனுக்கு வழிவகுக்கிறதா மீன்கள்? இருப்பினும்... - அச்சுறுத்தும் அறிக்கைகள்

ஹைபர் டென்ஷனுக்கு வழிவகுக்கிறதா மீன்கள்? இருப்பினும்... - அச்சுறுத்தும் அறிக்கைகள்
ஹைபர் டென்ஷனுக்கு வழிவகுக்கிறதா மீன்கள்? இருப்பினும்... - அச்சுறுத்தும் அறிக்கைகள்

மீன் என்று சொன்னாலே நம் மனதுக்கு வருவது மெல்லிய புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை மற்றும் இதயம், மனம், உடலுக்கு நன்மை பயப்பவை என்பதுதான். ஆனால், ஒருபுறம் நன்மை என்றாலும் அனைத்து மீன்களும் நன்மைதான் தருகிறது என்றால் அது கேள்விக்குறிதான். ஏனெனில் குறிப்பிட்ட சில மீன்கள் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, ஹைபர் டென்ஷனுக்கு வழிவகுக்கும் என்கிறது ஆய்வுகளின் அதிர்ச்சி தரவுகள். கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்றவை இதயத்துக்கு நன்மை கொடுத்தாலும் அவற்றை சரியாக சமைக்காவிட்டால் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்குமாம்.

மீன்கள் எப்படி ஹைபர் டென்ஷனுக்கு வழிவகுக்கிறது?

கருவாடு என அழைக்கப்படுகிற உலர்ந்த மீன்கள் ரத்த நாளங்களை சேதமடைய வைத்து ஹைபர் டென்ஷனுக்கு வழிவகுக்கிறது என்கிறது ஒரு பிரிட்டன் ஆய்வு. மீன்களிலுள்ள தண்ணீரானது முழுவதும் நீக்கப்பட்டு அது நீண்டநாட்களுக்கு கெட்டுப்போகாத வண்ணம் மாற்றப்படுவதே கருவாடு. இந்த காய்ந்த மீன்களில் அதிக புரதங்களும், குறைந்த கொழுப்புகளும் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் உலர் மீன்களிலுள்ள ஒரு பொருளானது இதய ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அதுதான் உப்பு.

உப்பு ஏற்றப்பட்ட மீன்களில் உடலின் தேவைக்கு அதிகமான சோடியம் இருக்கிறது. இதனால் உப்பு குறைவான மீன்களை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது பிரிட்டன் ஆய்வு.

அதிக உப்பு எப்படி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது?

உப்பிலுள்ள சோடியம் மற்றும் நீர் உறிஞ்சும் தன்மையே உயர் ரத்த அழுத்தத்துக்கு காரணமாக கருதப்படுகிறது. உப்பானது ரத்தத்தில் தண்ணீர் அளவை அதிகரிப்பதால், ரத்தக்குழாய் சுவர்களின்மீது ரத்தத்தை வேகமாக மோதவைத்து, தமனிகளின்மீது அதீத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதாவது ரத்த ஓட்டத்தின் பொதுவான வேகத்தைவிட அதிவேகமாக்குகிறது.

ஏற்கனவே உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் உலர் மீன்களை எடுத்துக்கொள்ளும்போது அதிலுள்ள உப்பால், பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க சிறந்த வழி உப்பின் அளவை குறைப்பதுதான். அதாவது ஒருநாளில் அதிகபட்சமாக 6 கிராம்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அதிக உப்பு சேர்த்துக்கொண்டால் ஒரே வாரத்தில் அதன் விளைவுகள் தெரியும்.

மீன் ஆரோக்கியமற்றதா?

மீன் ஆரோக்கியமற்ற உணவின் லிஸ்ட்டில் இடம்பெறாது. அதேசமயம், சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்றவை மூளை மற்றும் இதயத்தை பாதுகாக்கும் உணவுகளாகும். மீன் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மேலும் ரத்த நாளங்களை பாதிக்கக்கூடிய உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக மீன்களை மத்திய தரைகடல் டயட் முறையுடன் அதிகளவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com