"3-ம் அலையில் டெல்டா பிளஸ் தாக்கத்தை தவிர்த்தல் சாத்தியமே... எப்படி?"- மருத்துவர் பேட்டி

"3-ம் அலையில் டெல்டா பிளஸ் தாக்கத்தை தவிர்த்தல் சாத்தியமே... எப்படி?"- மருத்துவர் பேட்டி
"3-ம் அலையில் டெல்டா பிளஸ் தாக்கத்தை தவிர்த்தல் சாத்தியமே... எப்படி?"- மருத்துவர் பேட்டி
ஆண்ட்ராய்டு போனில் அப்டேட் வருவதுபோல கொரோனா வைரஸ் வாரந்தோறும் ஒரு அப்டேட் விட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி வந்த லேட்டஸ்ட் அப்டேட்தான் டெல்டா ப்ளஸ். இந்தியாவை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கொரோனா மூன்றாம் அலை தாக்கக்கூடும் என மருத்துவர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த டெல்டா ப்ளஸ் வேரியன்ட்டால்தான் இந்தியாவில் 3-ம் அலை உருவாகுமா? - மருத்துவர் சென்பாலனிடம் கேட்டோம்.
''இந்தியாவில் கொரோனாவின் போக்கை, இந்தியாவிற்கு முன் பாதிப்படைந்த உலக நாடுகளை வைத்து ஓரளவு கணிக்கலாம். இரண்டாவது அலை ஏற்படப்போவதைக் கூட அப்படித்தான் நிபுணர்கள் கணித்தனர். அந்த வகையில் சில உலக நாடுகளின் நிலையைக் காணலாம்.
பிரிட்டனில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலை, லாக்டவுன் மற்றும் தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. ஜனவரி மாதத்தில் இரண்டாம் அலையின் உச்சத்தில் நாளொன்றுக்கு 60,000 தொற்றுகளுக்கு மேல் கண்டறியப்பட்ட நிலையில், அது கட்டுக்குள் வந்து மே மாதத்தில் நாளொன்றுக்கு 2,000 புதிய தொற்றுகளாக குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் நாளொன்றுக்கு 15,000 புதிய தொற்றுகளாக அதிகரித்துள்ளது.
அதேபோல அமெரிக்காவில் இரண்டாவது அலையின் உச்சமான ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுகள் கண்டறியப்பட்டன. தற்போது 10,000 - 15,000 வரையில் புதிய தொற்றுகள் உள்ளன.
இஸ்ரேல் நாட்டில் தினந்தோறும் 9,000 புதிய தொற்றுகள் எனும் நிலையில் இருந்து 20, 30 எனும் இரட்டை இலக்க நிலைக்கு நோய் கட்டுக்குள் வந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்து, தினமும் 200 புதிய தொற்றுகள் ஏற்படுகின்றன. இதனால் அங்கு மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி மற்ற ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நோய் கட்டுக்குள் வந்துள்ளது. சில இடங்களில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
இரண்டாவது அலை முடிவுக்கு வந்தபின் மீண்டும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக டெல்டா வைரஸ் வேரியன்ட்டின் பரவல் கூறப்படுகிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றுகளில் பெரும்பாலானவை டெல்டா வேரியன்ட் என்று கூறப்படுகிறது. இவை தடுப்பூசி போடாத இளம்வயதினரை தாக்குகின்றன. சில நேரங்களில் தடுப்பூசி போட்டவர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். ஆனால் இதுவரை, தடுப்பூசி போடப்பட்டவர்கள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை அரிதாகவே ஏற்படுகிறது.
உலகளவில் இரண்டாவது அலைக்குப் பிறகான நோய் அதிகரிப்பிற்கும், இந்தியாவில் இரண்டாம் அலையும் ஏற்படக் காரணமாக இந்த டெல்டா வைரஸே கூறப்படுகிறது. ஆனால், அடுத்த திருப்பமாக அதனினும் மாறுபாடடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டெல்டா பிளஸ் வேரியன்டின் பரவல் வேகம் முந்தைய வகைகளை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தடுப்பூசிகளின் செயல்திறனும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இவை அனைத்தும் எதிர்பார்ப்பே. இந்த டெல்டா பிளஸ் வைரஸின் உண்மைப் பண்புகளை அவை பரவத் தொடங்கிய பின்பே நம்மால் அறிய முடியும். ஒருவேளை டெல்டா ப்ளஸ் வைரஸின் பரவும் தன்மை அதிகமாக இருந்தால், இந்தியாவில் இந்த வேரியன்டால் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால் மூன்றாம் அலையின் தாக்கமானது தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏற்கெனவே நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து இருப்பதால் இவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடும். இவை நமக்குச் சாதகமாக இருந்தால் மூன்றாம் அலையை சிறிய அளவிலேயே கூட முறியடிக்க முடியும்.
முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் நோய்ப் பரவலும், தீவிரத்தன்மையும் குறைவாக இருப்பதால் தடுப்பூசியை விரைவுபடுத்துவது மூன்றாம் அலையைத் தடுக்க நம்மிடம் உள்ள ஓர் எளிதான வழி.
சுருக்கமாக, டெல்டா ப்ளஸ் வேரியன்ட்டால் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டால், ’ஆம்’ வாய்ப்புள்ளது. அதை முறையான தடுப்புமுறைகள் மூலம் தவிர்க்க முடியுமா என்றால், ’ஆம்’ தவிர்க்கவோ குறைக்கவோ முடியும்'' என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com