"தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் 2 நாள் மது கூடாது"- மருத்துவர் வி.ராமசுப்ரமணியன் நேர்காணல்

"தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் 2 நாள் மது கூடாது"- மருத்துவர் வி.ராமசுப்ரமணியன் நேர்காணல்

"தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் 2 நாள் மது கூடாது"- மருத்துவர் வி.ராமசுப்ரமணியன் நேர்காணல்
Published on

கொரோனா இரண்டாவது அலையில் நமக்கு எழும் அடிப்படையான சில சந்தேகங்களுக்கு, தொற்று நோய் தடுப்பு அரசு சிறப்பு மருத்துவக் குழுவின் தொற்றுநோயியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் பகிர்ந்தவற்றிலிருந்து...

ஆவி பிடித்தல், கொரோனாவை தடுக்க உதவுமா?

“இது மருத்துவரீதியாக எந்த இடத்திலும் நிரூபிக்கப்படவில்லை. ஒருவேளை ஆவிபிடிப்பது யாருக்கேனும் சௌகரியத்தை கொடுத்தால், அவர்கள் மருத்துவரிடம் அனுமதி பெற்றுவிட்டு, அறிவுரைக்கேற்ப அதை செய்யலாம். இருப்பினும் மருத்துவ ரீதியாக இவற்றுக்கு தொடர்பு கிடையாது.”

குப்புறப்படுத்தால், உடலில் ஆக்சிஜன் அளவு அதிகமாகுமா?

“உடலில் ஆக்சிஜனை அதிகப்படுத்த, குப்புறப்படுத்தல் மற்றும் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தல் உதவி புரியும். இப்படி செய்யும்போது, வயிறுப்பகுதிக்கு அழுத்தம் கிடைக்கும். இதன்மூலம், உள்ளிருக்கும் நுரையீரலின் சில பகுதிகளுக்கும் அழுத்தம் கிடைக்கும். மேலும் முதுகுக்கு இடையிலிருக்கும் காற்றுப் பைகள் விரிவடையும். இவை விரிவடையும்போது, ஆக்சிஜனை நம்மால் போதுமான அளவு  உள்ளிழுக்க முடியும். நீண்ட நேரத்துக்கு இப்படி இருக்கும்போது, ஆக்சிஜன் தேவை சீராகும்.”

துணியால் செய்யப்பட்ட மாஸ்க் அணிவது சரியாக இருக்குமா? ஆபத்தை தவிர்க்க, இரண்டடுக்கு மூன்றடடுக்கு உதவுமா?

“என்-95 மாஸ்க் வகையை, மருத்துவ பணியாளர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. பொதுமக்களை பொறுத்தவரை, இரண்டு அல்லது மூன்று படலம் கொண்ட கொண்ட பருத்தி மாஸ்க் அணியலாம். அன்றாடம் அணியும் மாஸ்க்கை, அன்றாடம் துவைத்துவிட வேண்டும். இந்த மாஸ்க் அணியும்போது, அதற்கு அடியில் சர்ஜிக்கல் மாஸ்க் அணியலாம். இப்படி இரண்டடுக்கு மாஸ்க் அணிந்தால், 90 சதவிகித ஆபத்துகள் தடுக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.”

ஏ.சி. அறையில். இருப்பவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?

“வீட்டுக்குள் ஏ.சி. பயன்பாட்டை பொறுத்தவரை, அதை தவிர்த்துவிட்டு காற்றோட்டமான சூழலை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இருப்பினும் அது கட்டாயமில்லை. ஏ.சி.தான் அவர்களுக்கு சௌகரியம் என்றால், அதிலேயே இருக்கலாம். இப்படியானவர்கள், வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தவுடன் முகம், கை, கால்களை சோப் போட்டு நன்கு கழுவ வேண்டும். தன் சுகாதாரத்தில் கூடுதல் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், வீட்டுக்குள் மாஸ்க் அணியவேண்டும் என்று கட்டாயமில்லை.

அலுவலகங்களில் ஏ.சி. என்று வரும்போது, மாஸ்க் அணிவது நல்லது. ஏ.சி. போட்டிருக்கிறது என்பதற்காக ஜன்னல் கூட திறக்காமல் பணிபுரிய வேண்டாம். காற்றோட்டமாக இருப்பதே இப்போதைக்கு முதன்மை. இப்போதைக்கு, வீட்டிலிருந்தே பணி செய்வது சிறந்தது என்பதால் அதை நோக்கி செல்வது இன்னும் நல்லது.”

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எவ்வளவு நாள்கள் கழித்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

“கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், இதுவரை தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஒருவேளை ஏற்கெனவே ஒரு டோஸ் போட்டிருந்தால், 2 முதல் 3 மாதங்கள் கழித்து அடுத்த டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டுக்கொண்டால், பின்னாள்களில் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது தேவையில்லாத மனத்தடை. இப்படியான மனத்தடை இருப்பவர்கள், கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பக்கவிளைவுகளையும் யோசித்து பார்க்க வேண்டும். தடுப்பூசி மட்டுமே அவற்றிலிருந்து நம்மை காக்க நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம்

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொள்ளும்போது, கோவேக்சினை 4 வார இடைவெளியிலும், கோவிஷீல்டை 12 வார இடைவெளியிலும் எடுத்துக்கொண்டால், கொரோனாவுக்கான நோய் எதிர்ப்புத் திறன் திடமாக உருவாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த இடைவெளி அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.”

நேசல் ஸ்ப்ரே அடித்துக்கொண்டால், கொரோனாவாலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம் என்பது உண்மையா?

“இந்த ஸ்ப்ரே வகைகள், வாய் மூக்கு பகுதியிலிருக்கும் வைரஸை ஓரளவு அழிக்கும். இப்படி வாய்ப்பகுதி ஆரோக்கியமாக இருக்கும்போது, எதிரில் இருப்பவருக்கு நம்முடைய தும்மல் - இருமல் வழியாக வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க உதவும். ஆனால் ஏற்கெனவே உடலுக்குள் சென்றுவிட்ட வைரஸ், இந்த ஸ்ப்ரே மூலம் அழியுமா என்றால், அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.”

கர்ப்பிணிகள் – பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

“கோவிட் 19 ஏற்படுத்தும் பாதிப்புகளோடு ஒப்பிடுகையில், கர்ப்பிணிகளுக்கு இதனால் ஏற்படும் பக்கவிளைவுகாள் குறைவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து, பல மருத்துவ ஆய்வு நிறுவனங்கள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி தரலாம் என பரிந்துரைத்துள்ளன. இருப்பினும், அதில் ஆபத்தும் நிறைந்திருப்பதால், இந்திய அரசு இந்தப் பரிந்துரைகளை ஏற்காமல் இருக்கிறது. ஆகவே இந்தியாவில் இன்னமும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என நம்புகிறோம்.”

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மது அருந்தலாமா, இறைச்சி சாப்பிடலாமா?

“தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்கு மதுவை கண்டிப்பாக அருந்தக்கூடாது. மீறி மது அருந்தினால், அது தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்கும். 2 நாள்களுக்குப் பிறகும், வாரம் ஒருமுறை என்ற அளவில் வேண்டுமானால் மது அருந்தாலும். முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

தடுப்பூசி போட்டபின்னர் இறைச்சி சாப்பிட்டால், அதனால் உடலில் பக்கவிளைவுகளோ – தடுப்பூசியின் செயல்திறன் குறைவோ ஏற்படும் என்பதற்கோ எந்த வித மருத்துவ சான்றும் இல்லை. ஆகவே அவரவர் உடல் நலனுக்கு ஏற்ற உணவை உட்கொள்ளலாம்.”

ரெம்டெசிவிர் உயிர்க்காக்கும் மருந்தில்லை என சொல்லப்படும்போது, அது இந்தளவுக்கு டிமேன்ட் ஏற்பட என்ன காரணம்?

“இதற்கு முன்னரும் இப்படி நிறைய மருந்துகள், சிகிச்சைகளை பின்பற்றி பின்னாள்களில் விட்டிருக்கிறோம். உதாரணத்துக்கு ஹைட்ராக்ஸிக்ளூரோக்யுனைன் – பிளாஸ்மா தெரபியை போன்றவற்றை சொல்லலாம்.

கொரோனா சிகிச்சையில் இப்போதைக்கு, ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு ஆகியவைதான் உயிரைக் காப்பதாக நமக்கு தெரிகிறது. இவை இரண்டோடும் சேர்த்து, ஒரு சில மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். உதாரணத்துக்கு வைட்டமின் மருந்துகள் – சத்து மாத்திரைகள் தரப்படுகிறது. அவையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் மனநலன் மேம்பாட்டுக்குத்தான்  தரப்படுகின்றனவே தவிர, கட்டயாமாக இருப்பதில்லை.

இனி வரும் நாள்களில், அமெரிக்காவில் பரிந்துரைக்கப்படும் ஆன்டிபாடி ட்ரிப், இங்கே வரலாம்.

ஆக சூழலுக்கேற்ப, கொரோனா திரிபுக்கேற்ப சிகிச்சை மற்றும் மருந்துகளில் மாற்றங்கள் இருந்துக்கொண்டே இருக்கும்.”

கொரோனா தடுப்புக்கு, ஒவ்வொரு தனிமனிதனும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

“மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, அரசின் பொதுமுடக்கத்தை மதிப்பது போன்றவை அடிப்படை. இதற்கு அடுத்தபடியாக, காய்ச்சல் – சளி – இருமல் – தொண்டை வலி – மூச்சுத்திணறல் – வயிற்றுப்போக்கு – வாந்தி – உடல் வலி – தலைவலி – வாசனை திறன் குறைவு போன்றவை தெரியவந்தால், கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளவும்.

பரிசோதனை முடிவுக்கேற்ப முதல் நிலையில் வீட்டிலேயே உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு 94 சதவிகிதத்தை விட குறைவாக வந்தால் மட்டும், மருத்துவமனையில் சேரவும். ஆக்சிஜன் அளவு சீரானவுடன், மருத்துவ பரிந்துரையுடன் வீட்டுக்கு செல்லவும்.

இவை அனைத்து வயதினருக்குமே பொருந்தும் என்றாலும், 30 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்கவும்.

எல்லாவற்றுக்கும் முதன்மையாக, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.”

 எப்போது இரண்டாவது அலை கொரோனா தனியும்?

“நாம் ஏற்கெனவே உச்சத்தை அடைந்துவிட்டோம். ஆகவே இனி சரிவை நோக்கி செல்வோம் என நம்பலாம். எண்ணிக்கை சரியத்தொடங்கி 2 வாரங்களில், மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடுகள் சரியாகும். அந்தவகையில் ஜூலை பிற்பகுதியில் இந்த இரண்டாவது அலை தனியலாம் என எதிர்ப்பார்க்கலாம்.

இருப்பினும் இங்கே நாம் ஆறுதல் பட்டுக்கொள்வதைவிட, அடுத்த அலைக்கு தயார் ஆகிக் கொள்வதே முக்கியம். இன்னும் 3 மாதங்களில் அடுத்த அலை கொரோனா ஏற்படலாம் என கணிக்கப்படுகிறது. அதற்கு எதிராக நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வதில் முக்கியமானது, தடுப்பூசி போட்டுக்கொண்டு நம்மை நோய்க்கு எதிராக மாற்றிக்கொள்வது.”

மருத்துவ ரீதியாக, பொதுமுடக்கம் அவசியம்தானா?

“நிச்சயம் அவசியம். பொதுமுடக்கம் போட்டவுடன், ஒரேநாளில் எண்ணிக்கை குறையும் என்று கிடையாது. இரண்டு வாரம் வரை நேரம் எடுக்கும். அந்தவகையில் மருத்துவ ரீதியாக பொதுமுடக்கம், பலனளிக்கும் நல்ல வழிமுறை.”

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com