2-ம் அலை கவலை: வழக்கமான சிகிச்சைகளுக்கு மருத்துவமனை செல்வதில் தயக்கமா? - டாக்டர் கைடன்ஸ்

2-ம் அலை கவலை: வழக்கமான சிகிச்சைகளுக்கு மருத்துவமனை செல்வதில் தயக்கமா? - டாக்டர் கைடன்ஸ்

2-ம் அலை கவலை: வழக்கமான சிகிச்சைகளுக்கு மருத்துவமனை செல்வதில் தயக்கமா? - டாக்டர் கைடன்ஸ்
Published on

தினசரி மாலையில் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிபரங்களைப் பார்ப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதிகரிப்பதும், குறைவதுமான எண்ணிக்கை பல குழப்பங்களை நமக்கு அளிக்கும். ஒன்று, நமது இயல்பாக லேசாக உடல் சூடானால் 'இது காய்ச்சலா… கொரோனாவா?' என்கிற அளவுக்கு யோசிப்போம். இன்னும் சிலர் எவ்வளவு காய்ச்சல் வந்தாலும் 'ரெண்டு மாத்திரைகளைப் போட்டால் போதும்' என்றே இருப்பார்கள்.

'கண்ணாடி மாற்றுவது, ரத்த அழுத்தம், நீரிழிவு சோதனைகளுக்குச் செல்லலாமா…' மழைக்காலம் தொடங்கிவிட்ட நேரத்தில், குறிப்பாக கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல் உள்ள நிலையில், நமது வழக்கமான உடல்நலப் பிரச்னைகளுக்கு என்ன செய்யவேண்டும்?

இந்தக் காலகட்டத்தில் நம் உடலின் மாற்றங்கள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்… என்ன செய்யக்கூடாது என மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் கேட்டோம். 

"சரியான நேரத்தில் கேட்கப்படுகிற கேள்விதான். முதலில் கோவிட் தொடர்பான அடிப்படை விஷயங்களைப் பற்றி பேசிவிடுவோம். சில விஷயங்களை அடிக்கடி நினைவூட்டிக்கொள்வது தவறில்லை.

மூன்று விஷயங்கள்:

எந்தவொரு காய்ச்சலையும் முதல் மூன்று நாள்கள் வைரல் ஃபீவராகவே மதிப்பிடுவது வழக்கம். அதனால், உங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேலும், காய்ச்சல் குறையாது இருந்தாலும், அதோடு மூட்டு வலி, மூச்சுத் திணறல் இருந்தாலும் அலட்சியம் காட்டாது உடனே மருத்துவமனை செல்வதே நல்லது. 

கோவிட் 19 பற்றி இந்த ஏழெட்டு மாதங்களாக நிறைய விஷயங்கள் தெரிந்திருப்பீர்கள். காய்ச்சல் இருக்கும்போது எந்த உணவும் ருசி தெரியாமல் இருப்பது, உடலில் மூட்டுப் பகுதிகளில் கடும் வலி இருப்பது போன்ற அறிகுறிகள் தென்படும். அப்போது மூன்று விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

எவ்வளவு சீக்கிரம் அறிகுறிகளை உணர்கிறோம். எவ்வளவு சீக்கிரத்தில் டெஸ்ட் எடுத்துக்கொள்கிறோம். எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைப் பெற தொடங்கிறோம். இவை மூன்றிலும் தாமதிக்காமல் இருந்தால் அவ்வளவு விரைவாக நோயிலிருந்தும் குணமடைய முடியும்.

வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்கு...

கொரோனா காலத்தில் வழக்கமாக சில மருத்துவ சிகிச்சைகள் செய்ய வேண்டியிருப்போர்கள் என்ன செய்யலாம்?

இதில் அடிப்படையில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, உடனடியாக சிகிச்சை பெற்றே ஆகவேண்டும் என்ற பிரிவில் இருப்பவர்கள். இரண்டு, கொஞ்சம் தள்ளிப் போடலாம் என்ற பிரிவில் இருப்பவர்கள்.

உதாரணமாக, கர்ப்பபையில் ஒரு வருடமாகக் கட்டி இருக்கிறது, குழந்தை பேறு இல்லாமல் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் நோய் பேரிடர் காலம் சற்று தணியும் வரை தங்கள் சிகிச்சையை ஒத்திப்போடலாம். சாதாரண வயிற்றுபோக்கு என்றால், இளநீர் குடிப்பது போன்ற சிலவற்றைச் செய்து பார்க்கலாம். பலருக்கு இவற்றிலேயே சரியாகிவிடும்.

டயாலசிஸ், கீமோ தெரபி சிசிச்சைகள் போன்ற மிக அவசியமான உயிர்காக்கும் சிகிச்சைகளை எடுப்பவர்கள் எக்காரணம் கொண்டும் சிகிச்சையை தள்ளிப்போடக் கூடாது. சரியான நேரத்திற்கு தக்க பாதுகாப்பு நடவடிக்கையோடு சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

இதற்கு உடனடியாகச் செல்ல வேண்டும், இதற்கு ஒத்திப்போடலாம் என்று தீர்க்கமாக வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரின் உடல்நிலையும், அதற்கு முன் அவர்களின் சிகிச்சை விபரங்களும்தான் அதை முடிவு செய்யும்.

மழைக்கால சிக்கல்கள்:

மழைக்காலம் தொடங்கிவிட்டது. அதற்கே உரிய சில நோய்கள் வரக்கூடும். குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் காலம். முடிந்தளவு சளி பிடிக்காதவாறு பார்த்துக்கொள்வது நல்லது. ஒருவேளை சளி, காய்ச்சல் தொடங்கிய உடனே அதற்கு அடிப்படை மருந்துகள் எடுத்து, ஆரம்பத்திலேயே சரி செய்துகொள்வது நல்லது.

சில இடங்களில் டெங்கு இருப்பதைக் காண முடிகிறது. நோய்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. எனவே, காய்ச்சல் என்பது எந்த வகையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

உடலின் எந்த நோய் தாக்கினாலும், அதனை வெளிப்புறத்தில் சின்ன அறிகுறியோடாவது வெளிப்படுத்திவிடும். அதனைக் கண்டுக்கொள்வதும், அலட்சியம் காட்டாமல் இருப்பதும் இந்த நோய் பேரிடர் காலத்தில் மிகவும் அவசியம். 

ஒரு நண்பர், காய்ச்சல் ஒரு வாரம் இருந்தும், கொரோனாவாக இருக்குமோ என்ற பயத்திலேயே மருத்துவமனை செல்லவில்லை. அதன் அழுத்தம் மாரடைப்பாக வந்து, இன்று அவர் இல்லை. எனவே, தாமதம் என்பது எந்த வகையிலும் செய்யக்கூடாத ஒன்று என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். 

மருத்துவமனைக்குச் செல்வதில் தயக்கமா?

நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனை செல்வதில் தயக்கம் காட்டாதீர்கள். ஏனெனில், வீட்டை விடவும் நோயைக் குணமாக்க மருத்துவமனையே சரியான இடம். மருத்துவமனை செல்லும்போது குறைவான ஆட்களை அழைத்துச் செல்வது, மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவது என்பதை மறக்க வேண்டாம். 

 தீபாவளி பர்சேஸிங் கவனிக்க...

இது பண்டிகை காலம். 'கொரோனா இரண்டாம் அலையாகப் பரவுமா... அதற்கு வாய்ப்பிருக்கிறதா?' என்பதை இப்போதைக்கு கணிக்க முடியவில்லை. ஆனால், நாம் எச்சரிக்கையாக இருப்பதே நம்மைக் காத்துக்கொள்வதற்கான முதல் படி. அதில் அலட்சியம் காட்டக்கூடாது.

தீபாவளி பர்சேஸ்க்குச் செல்லும்போது பத்து வேலைகளைத் திட்டமிட்டு, அங்கும் இங்குமாகச் சென்றுகொண்டிருக்காமல், ஓரிடத்திற்குச் சென்றோம்; நேராக வீட்டுக்கு வந்தோம்; துணிகளைத் துவைத்தோம்; சோப் போட்டுக் குளித்தோம் என்று பாதுகாப்பாக இருப்பதே நல்லது. 

இறுதியாக மூன்று விஷயங்கள்:

பலமுறை சொன்னாலும் உடலைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது. இந்த மூன்றில் மட்டும் சமரசம் செய்துகொள்ளவேண்டாம். குறைந்த பட்சம் இந்த நோய்ப் பேரிடர் காலம் முடியும் மட்டுமாவது. 

- தமிழினி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com