மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட் - என்ன வித்தியாசம்? விளக்கும் மருத்துவர்

மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட் - என்ன வித்தியாசம்? விளக்கும் மருத்துவர்
மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட் - என்ன வித்தியாசம்? விளக்கும் மருத்துவர்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, நேற்று தொடங்கி தற்போது வரை இணையம் முழுக்க நிரம்பி வழிகின்றன இரங்கல்களும் அன்பும். காலம் உள்ளவரை அவர் தனது ரசிகர்களின் மனதில் வாழ்வார் எனும்போதிலும், அவரின் இந்த மறைவு சற்றும் ஏற்கமுடியாத ஒன்றாகவே உள்ளது. எல்லோர் மனதிலும் இருக்கும் விஷயம், ‘இவ்வளவு இளமையில் புனித் இறக்க வேண்டுமா?’ ‘இந்த வயதில் அவர் இறந்திருக்கவே கூடாது’ ‘அவர் இன்னும் பல வருடம் வாழத்தகுதியுள்ளவர்’ போன்றவைதான். பிரதமர் மோடியும்கூட, தனது இரங்கல் செய்தியில் ‘இந்த வயதில் புனித் இறந்திருக்கக்கூடாது. இது அவர் இறப்பதற்கான வயதல்ல’ எனக்குறிப்பிட்டிருந்தார்.

புனித்தின் மறைவுக்கு பின்னுள்ள மருத்துவக் காரணமாக, மருத்துவமனை தரப்பில் ‘மாரடைப்பு’ என சொல்லப்படுகிறது. மாரடைப்பு - கடந்த சில வருடங்களாகவே நாம் அதிகம் கேட்கும் ஒரு விஷயம். பொதுவாக இளம் வயது மரணங்கள் அதிகரிப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 17 மில்லியன் பேர் இதய பாதிப்பால் இறக்கிறார்கள் என்றும், 2030-ல் மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 23 மில்லியனாக உயரும் என்றும் கணிக்கப்படுகிறது. இந்தியாவில் 25% பேர் 40 வயதுக்குள் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள் என்கிறது மற்றொரு தகவல். மாரடைப்புக்கு அடிப்படை காரணமான இதய நோய்கள், 30 வயது இளைஞர்களை கூட விட்டுவைப்பதில்லை.

இதய நோய்க்கு அடிப்படையாக அதீத மன அழுத்தமும், உடலுழைப்பின்மை போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. ஆனால் இங்குதான் நமக்கு ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில், புனித் ராஜ்குமார் எவ்வித உடல் பாதிப்பும் இல்லாதவர். அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் எவ்வித தகவலும் இல்லை. அதேநேரம், உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனத்துடன் இருந்திருக்கிறார். அன்றாடம் உடற்பயிற்சியும் செய்து வந்திருக்கிறார். ‘இவ்வளவு ஆரோக்கியமாக இருந்தவருக்கும் மாரடைப்பா?’ என்பது போன்ற கேள்விகள், இந்த இடத்தில் நமக்கு எழாமல் இல்லை.

இந்தக் கேள்விகளையே இதய நோய் சிறப்பு நிபுணர் மருத்துவர் ராஜேஷிடம் கேட்டோம்.

மாரடைப்பின் அடிப்படை காரணம், ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு. ரத்தக்குழாயில் ஏற்படும் அந்த அடைப்பு, நாள்பட்டதாகவும் இருக்கலாம்; திடீரென சில மணி நேரத்தில் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். எப்படி ஏற்பட்டாலும், அதை எவ்வளவு விரைந்து நாம் கண்டறிகிறோம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை பொறுத்துதான் அதன் அடுத்தடுத்த வெளிப்பாடுகள் அமையும். நாள்பட்ட அடைப்பு என்றால், நெஞ்சுப்பகுதியில் அசௌகரியம், நெஞ்சுப்பிடிப்பு, திடீர் வலி, மூச்சுவாங்குதல் போன்றவையாவும் அடிக்கடி தெரியவரும். ஆனால் திடீரென ஏற்படும் அடைப்புக்கு, அப்படியான அறிகுறிகள் எதுவும் இருக்காது.

திடீரென இதய ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை கொரோனா ஆர்டரி எண்டோதீலியம் (Corona Artery Endothelium) என சொல்வதுண்டு. இதயச்சுவர்களில் ஃப்ராக்சர் / விரிசல் / உடைதல் போன்ற நிகழ்வுகள் திடீரென ஏற்படுவதால், இந்த மாதிரியான திடீர் ரத்த அடைப்பு ஏற்படுகிறது. அடைப்பு ஏற்பட்டவுடன், அந்நபருக்கு மயக்கம் வருவது - மூச்சுப்பிடிப்பது என ஏதாவதொரு அறிகுறி தெரியக்கூடும். அப்படி தெரிந்தவுடன் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். ஒருசிலருக்கு, அறிகுறிகளேதும் தெரியாமல் நேரடியாக ‘கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் இதயம் செயலிழக்கும் நிலைமையும் ஏற்படலாம். இதயம் அப்படி சில விநாடிகளில் செயலிழக்கையில், அவர்களுக்கு இறப்பு அபாயம் உருவாகிறது. யாருக்கு இப்படி கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுமென மருத்துவத்திலேயே விளக்கமில்லை. எனவே எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது? இதயம் செயலிழக்கையில், முதலில் கார்டியாக் அரெஸ்ட் நிகழும். அதாவது, இதயத்துக்கு போகும் ரத்தம் தடைபடும். அதனால் இதயம் மட்டும் செயலிழந்து இருக்கும். பிற உடல் பகுதிகள் செயல்பாட்டில்தான் இருக்கும். இருந்தாலும், இதயமே செயலிழக்கும்போது உயிர் அபாயம் எழுகிறது. இப்படி போகும்போது அந்நபர்களுக்கு முதலுதவியாக சி.பி.ஆர். அடுத்த நிமிடத்திலேயே செய்யப்படவேண்டும். இதயம், உரிய மூச்சை பெறுகையில், அதன் செயல்பாடு சீராகும். அவரை உயிர் அபாயத்திலிருந்தும் காக்கலாம்.

அப்படி உடனடி முதலுதவி செய்யப்படாமல் போகையில், விரைவான கார்டியாக் மரணம் ஏற்பட்டு, அந்நபர் உயிரிழக்கிறார். புனித் ராஜ்குமார் விஷயத்திலும் இதுவே நடந்திருக்குமென கணிக்கப்படுகிறது. ஆனால் அவருடைய முழுமையான மருத்துவ அறிக்கை நம்மிடம் இல்லாததால், அதுபற்றி நாம் கருத்து கூறுவது சரியாக இருக்காது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, ஒரு விஷயம்தான். அது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு - கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் இதய செயலிழப்பு நிகழ்கையில், அவரை காப்பாற்ற முடியுமா? முடியுமெனில் அதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலுதவி. அதை செய்தால், நிச்சயம் காப்பாற்றலாம். முதலுதவியில் என்ன செய்ய வேண்டும்?

அந்நபருக்கு சுவாசம் உள்ளதா என்பதை உறுதிசெய்ய, நாடித்துடிப்பை பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு, அவரை நேரடியாக படுக்க வைக்க வேண்டும். படுக்க வைத்து, கழுத்தை மட்டும் இடதுபுறமாக சாய்த்து, அவரின் தாடையை சற்று மேலெழுப்ப வேண்டும். தொடர்ந்து வாய் வழியாக அவருக்கு மூச்சுக்கொடுக்க வேண்டும். பின் அவரின் இதயமுள்ள பகுதியை நன்கு அழுத்திவிடவேண்டும். மீண்டும் மூச்சுக்கொடுக்க வேண்டும். இதை செய்யும்போது, அந்நபரை காக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். இவை அனைத்துக்கும் முதலாக, அருகிலிருக்கும் மற்றொருவரை வைத்து ஆம்புலன்ஸூக்கு ஃபோன் செய்வது அவசியம்.

இப்படி திடீரென மாரடைப்பு ஏற்பட என்ன காரணம், சில மணி நேரத்தில் இதயம் செயலிழக்க என்ன காரணமென எல்லோருமே யோசிக்கிறோம். மாரடைப்புக்கு, இதய நோய்கள்தான் காரணம். ஆனால் மாரடைப்பின் வெளிப்பாடாய் உருவாகும் இதய செயலிழப்பு / இதயம் சீரற்று துடிப்பது போன்றவற்றுக்கு இதய நோய்கள் மட்டுமே காரணமல்ல. இதய செயலிழப்பென்பது, எல்லா இறப்பிலும் ஏற்படும் விஷயம்.

ஆக, அது எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் இறப்புக்கு முந்தைய சில நிமிடங்களில் ஏற்படும். அதற்கு உடல் சார்ந்த என்ன காரணம் வேண்டுமானால் இருக்கலாம். ஆக, இதய செயலிழப்பு (எ) கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் ஒரு நபருக்கு, இதயப் பிரச்னை இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை. அவருக்கு இதயம் ஆரோக்கியமாக இருந்து, வேறு ஏதேனும் அவருக்கு உடல் சார்ந்த அசௌகரியங்கள்கூட இருந்திருக்கலாம். ஆகவே கார்டியாக் அரெஸ்ட்டின் காரணத்தை நம்மால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. மாறாக, அது ஏற்பட்டுவிட்டால் சி.பி.ஆர். உடனடியாக அருகிலிருப்பவர் செய்ய வேண்டும். அதற்கு நாம் அதுசார்ந்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். அதுமட்டுமே நம் கைகளில் உள்ளது.

மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட் - என்ன வித்தியாசம்?

மாரடைப்பு - இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது. இது ஏற்பட்டால் நெஞ்சு வலி - உடல் வியர்க்கும் - தாங்கமுடியாத அளவுக்கு நெஞ்சுப்பகுதி வலி போன்றவை ஏற்படும். மாரடைப்பின் அடுத்தடுத்த நிலையில், கார்டியாக் அரெஸ்ட் உருவாகும்.

கார்டியாக் அரெஸ்ட் - இதயம் செயலற்று போவது (துடிக்காமலேயே இருப்பது) / அதீதமாக துடிப்பது. இதனால் இதயத்துடிப்பில் சீரற்ற தன்மை உருவானால் ஏற்படுவதுதான் கார்டியாக் அரெஸ்ட். இப்படி இதயம் செயலற்று போக, ரத்தக்குழாய் அடைப்பு - வேறு உடல் உபாதைகள் - போதைப்பொருள் உபயோகம் - மரபணு என எந்தக் காரணமாகவும் வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுக்கு உடனடி முதலுதவி செய்யப்பட வேண்டும்.

இரண்டுமே ஆபத்துதான் என்பதால், மருத்துவ அனுமதி கட்டாயம். இல்லையெனில் உயிர் அபாயம் உள்ளது” என்கிறார் மருத்துவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com