‘கோவாக்சின் பெறும் மக்கள் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்படுவர்’ டாக்டர் தகவல்

‘கோவாக்சின் பெறும் மக்கள் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்படுவர்’ டாக்டர் தகவல்
‘கோவாக்சின் பெறும் மக்கள் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்படுவர்’ டாக்டர் தகவல்

கோவாக்சின் தடுப்பூசியை பெறும் மக்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவர். ஏதேனும் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என அவர்கள் மருத்துவக்குழுவின் மேற்பார்வையில் இருப்பர்.

தற்போதைய கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்து அதன் மீதான ஆராய்ச்சிகளில் உள்ளனர். அப்படியாக, இந்திய அரசு இந்தியாவில் கோவிஷீல்ட் (Covishield), கோவாக்சின் (Covaxin) ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு முன்அனுமதி மற்றும் விநியோகம் செய்ய அனுமதி அளித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் குறித்து மருத்துவர் அரவிந்த ராஜ் கூறும்போது, ‘’ இதில் முதலாவதாக உள்ள Covishield தடுப்பூசி பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்டிராசெனிகா மருந்து நிறுவனத்துடன் சேர்ந்து கண்டறிந்த தடுப்பூசி. இதன் இந்திய பெயர் COVISHIELD.

பிரிட்டனில் இதன் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் நல்ல பலன்களை அளித்துள்ளமையால் அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக 70.42% பாதுகாப்பை தரவல்லது.

இரண்டாம் தடுப்பூசியான COVAXIN நமது இந்திய நாட்டு பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் கூட்டாக இணைந்து தயாரித்துள்ள ஒன்று. இது இரண்டாம் கட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளது. முடிவுகள் நல்ல விதத்தில் உள்ளமையால் இந்த தடுப்பூசிக்கும் அவசரகால முன்அனுமதி வழங்கி விநியோகம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த மருந்துக்கு தரப்பட்டுள்ள அனுமதியானது சற்றே வித்தியாசமானது. அதாவது, இந்த கோவாக்சின் தடுப்பூசியை பெறும் மக்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவர். ஏதேனும் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என அவர்கள் மருத்துவக்குழுவின் மேற்பார்வையில் இருப்பர். எனவே, இந்த பொது விநியோகம் என்பதை மூன்றாம் கட்ட பரிசோதனையின் நீட்சி என்றே கூறலாம். இதை ஆங்கிலத்தில் 'Restricted use in Emergency situation in Public Interest' என கூறலாம். இருப்பினும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் பொதுவெளிக்கு வரவில்லை என்ற காரணத்தால், இதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பக்கத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 தடுப்பூசிகள் குறித்து இதுவரை வெளிவந்த முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகளில் இந்த தடுப்பூசியை பெற்றவர்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகவில்லை என்றே தெரிகிறது. சிலருக்கு குளிர் ஜீரம் மட்டும் ஏற்பட்டது; அதுவும் பாராசிட்டமால் எடுக்கையில் குறைந்து விடுகிறது என ஆய்வறிக்கை செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் உள்ளுறுப்பு பாதிப்போ, மரணமோ நிகழவில்லை.

தடுப்பூசி வந்துகிட்டதென மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; இந்த தடுப்பூசிகள் ஒருவரை தீவிர தொற்று மற்றும் மரணம் இவை இரண்டிலிருந்து காக்குமே தவிர ஒருவருக்கு கொரோனா பரவாமல் இருக்கும் என நூறு சதவிகிதம் கூறமுடியாது.

தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிகள் முழுதும் நிறைவுபெற்று, அவற்றின் விநியோகம் பரவலாக்கம் செய்யப்பட்டு கொரோனா பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை நிச்சயம் பின்பற்ற வேண்டும்’’ என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com