நிறைவேறியதா‘டாக்டர்’அனிதா கனவு....?

நிறைவேறியதா‘டாக்டர்’அனிதா கனவு....?

நிறைவேறியதா‘டாக்டர்’அனிதா கனவு....?
Published on

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உச்சநீதிமன்றத்தின் படியேறியும் நீதிக் கிடைக்காததால் இறுதியில் தன்னையே மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பிறந்த நாள் இன்று.

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா. தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்டத்தில் சரியான அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் பிறந்தவர். வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் தனது அயராத முயற்சியால் பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றார். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அவரை மேல்நிலை வகுப்புகளில் தான் நினைத்த பிரிவில் சேர்த்தது. மருத்துவம் படிக்கவேண்டும் என்ற கனவோடு தனது மேல்நிலை வகுப்பை தொடர்ந்தார்.தான் நினைத்த படியே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றார். +2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றார். மதிப்பெண் அடிப்படையில் 196.5 கட் ஆஃப் இருந்ததால் நிச்சயம் மருத்துவ இடம் கிடைக்கும் என்று நம்பினார். 

அனிதாவின் கனவிற்கு வில்லனாக வந்தது நீட் தேர்வு. நீட் எனும் நுழைவுத் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றால்தான் மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் மேல்நிலை வகுப்புகளில் அனிதா பெற்ற மதிப்பெண்ணின் மதிப்பு கேள்விக்குறியானது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் படி ஏறினார். நான் பின் தங்கிய ஒரு கிராமத்தில் இருந்து விடாமுயற்சியுடன் படித்து மேல்நிலை வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நீட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவம் பயில முடியும் என்றால் எப்படி என்று தன் நிலை குறித்து முறையிட்டார்.மாநில பாடத்திட்டத்தில் படித்த ஒரு மாணவியால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடத்தும் தேர்வில் எப்படி தேர்வு எழுத முடியும்.  நீட் தேர்வை ரத்து வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மாணவியின் நியாயமான  கோரிக்கைக்கு வெற்றி கிடைக்கவில்லை.  மத்திய அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. விரக்தியில் இருந்த மாணவி அனிதா கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவ மாணவியாக பிறந்த நாள் கொண்டாட வேண்டிய அனிதா இன்று நம்மிடையே இல்லை.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com