அதிகம் முடி கொட்டுகிறது என்று உணர்கிறீர்களா? - இந்த 60 நொடி டெஸ்ட் போதும்!

அதிகம் முடி கொட்டுகிறது என்று உணர்கிறீர்களா? - இந்த 60 நொடி டெஸ்ட் போதும்!
அதிகம் முடி கொட்டுகிறது என்று உணர்கிறீர்களா? - இந்த 60 நொடி டெஸ்ட் போதும்!

முடி கொட்டுதல் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்று. உலகளவில் முடி கொட்டுதலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், வயது, மரபணு மற்று வாழ்க்கைமுறை போன்றவை இந்த பிரச்னைக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. நாம் தினசரி சந்திப்பவர்களில் மூன்றில் 2 பேர் முடி கொட்டுதல் குறித்து பேசுவதுண்டு. முடி கொட்டுதலை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டாலும் பலருக்கும் சரியான பலன் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். எப்படியாயினும், சரிவிகித உணவு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைமுறைகள் முடி மற்றும் வேர்க்கால்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

எவ்வளவு முடி கொட்டுதல் சாதாரணமானது?

ஒரு நாளில் 100 மயிரிழைகள் கொட்டுவது சாதாரணமானது என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும் முடியின் ஆரோக்கியம் தான், அடர்த்தி, பளபளப்பு மற்றும் முடியின் அசைவு ஆகியவற்றை தீர்மானிக்கின்றன. தலைக்கு குளிக்கும்போதோ அல்லது தலைக்கு குளித்த பிறகோ முடி உதிர்தல் என்பது பொதுவாக நடப்பதுதான். அதேபோல் ஆண்களை விட பெண்களுக்கு முடி உதிர்தல் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும், முடியின் ஆரோக்கியம் மற்றும் அதனை பராமரித்தலை பொறுத்து அதன் அடர்த்தியும் இருக்கும். இதுதவிர, பெண்களுக்கு கர்ப்பகாலம், மாதவிடாய், பிசிஓஎஸ் போன்ற பல்வேறு காரணங்களாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.

முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்

ஒருநாளில் எவ்வளவு முடி உதிர்கிறது என்பதை அறிந்துகொள்ள விருப்பப்பட்டால் இந்த சிம்பிளான டிப்ஸை முயற்சி செய்துபாருங்கள். தலையின் வேர்க்கால்களிலிருந்து நுனி முடிவரை விரல்களால் கோதுங்கள். பிறகு உங்கள் கைகளில் எவ்வளவு முடி இருக்கிறது என்பதை கவனியுங்கள். ஒருமுறை கோதும்போதே பத்துக்கும் மேற்பட்ட மயிரிழைகள் கைகளில் இருந்தால் உடனடியாக நிபுணரை அணுகி முடி கொட்டுதலுக்கான காரணத்தை கண்டறிவது அவசியம். இதுதவிர சில அறிகுறிகள் உங்களுக்கு அதிக முடி கொட்டுகிறது என்பதை காட்டும்.

முடி சூழ்ந்த தலையணை

பொதுவாக தூங்கிவிட்டு எழுந்திருக்கும்போது தலையணைகளில் மயிரிழைகள் காணப்படுவது சகஜம்தான். ஆனால் மற்ற நாட்களைவிட அதிகளவில் முடி காணப்பட்டால் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

60 நொடி டெஸ்ட்

JAMA Dermatology-இல் வெளியான கட்டுரையில் 60 நொடி டெஸ்ட் மூலம் முடி கொட்டுதலை எப்படி கண்டறியலாம் என விளக்கப்பட்டுள்ளது. தலைகீழாக குனிந்து பின்னாலிருந்து முடியை முன்னாக சீவவேண்டும். இப்படி ஒரு நிமிடம் தொடர்ந்து சீவும்போது எவ்வளவு முடி உதிர்ந்திருக்கிறது என்பதை வைத்து முடி கொட்டுதல் பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டறியமுடியும் என விளக்கப்பட்டுள்ளது. ஒருசில மயிரிழைகள் காணப்பட்டால் அது சாதாரணமானது என்று அர்த்தம். அதுவே அளவுக்கு அதிகமாக முடி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் என்று கூறுகிறது அந்த கட்டுரை.

உச்சந்தலை தென்படுதல்

முடிகளுக்கு நடுவே தலைப்பகுதி தென்படுவது சகஜம்தான் என்றாலும், தலையின் வகிடு பகுதியில் அதிக இடைவெளி தென்படுவது அதீத முடி உதிர்தலின் அறிகுறியாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஹேர்ஸ்டைலில் வித்தியாசம்

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல முடியின் அடர்த்திதான் அதன் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. மேலும் ஒருவருடைய தோற்றத்தையும் மேம்படுத்தி காட்டுகிறது. எப்போதும் செய்கிற ஹேர்ஸ்டைலில் வித்தியாசம் காணப்பட்டால் முடி மெலிந்து வருகிறது அல்லது முடி கொட்டுகிறது என்பதின் அடையாளமாக இருக்கலாம்.

தரையில் முடி

முடியை சிக்கெடுக்கும்போது எவ்வளவு முடி சீப்பில் வருகிறது மற்றும் தரையில் கொட்டுகிறது என்பதை கவனிக்கவேண்டும். தரை மற்றும் சீப்பில் அளவுக்கு அதிகமாக முடி இருந்தால், எப்போதும்விட அதிகமாக முடி கொட்டுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com