பாஜகவின் ’கொங்கு நாடு’ கோஷத்தை நகைச்சுவையாகப் பார்க்கிறோம்: டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

பாஜகவின் ’கொங்கு நாடு’ கோஷத்தை நகைச்சுவையாகப் பார்க்கிறோம்: டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
பாஜகவின் ’கொங்கு நாடு’ கோஷத்தை நகைச்சுவையாகப் பார்க்கிறோம்: டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

"பாஜகவின் ’கொங்கு நாடு’  கோஷத்தை நகைச்சுவையாகப் பார்க்கிறோம்” என்று திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி வகித்து வந்த எல்.முருகன் சமீபத்தில் மத்திய இணையமைச்சராக பதவியேற்றபோது வெளியிடப்பட்ட அவரது பயோ-டேட்டாவில் 'கொங்குநாடு' என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக, பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனின் 'கொங்கு நாடு' ஆதரவு ட்வீட்டும் கவனத்தை ஈர்த்தது.

மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று திமுக அழைத்து வருவதால், தமிழ்நாட்டிலிருந்து 'கொங்கு நாடு' என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக மேற்கு மண்டலம் பிரிக்கப்பட பாஜக திட்டமிட்டு வருகிறது என உறுதிபடுத்தப்படாத ஒரு செய்தியைப் பகிர்ந்த வானதி ஸ்ரீனிவாசன், "கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப்பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு. 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருக்கிறது. நாயக்கர்களின் காலத்திலும் கொங்கு பகுதிக்கான வரி நடைமுறைகள் பிற பகுதிகளை விட தனியாகத்தான் இருந்திருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

இதனிடையே, ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #கொங்குநாடு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது. அதேசமயம், அந்த ஹேஷ்டேகுக்கு எதிராகவும் சில ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன. சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள், விமர்சனங்கள் ஒருபக்கமும், மீம்கள் மறுபக்கமுமாக 'கொங்கு நாடு' சர்ச்சை ஆக்கிரமித்தது. அதேவேளையில், 'கொங்கு நாடு' என்ற பெயரில் தமிழ்நாட்டை பிளவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி வரும் செய்திகள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த சர்ச்சை குறித்து திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவனிடம் கேட்டபோது, ”கொங்கு மண்டலத்தில் பாஜகவினர்  இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால் உடனே தனி மாநிலம் ஆக்கிவிடுவார்களா? அவ்வளவுப் பெரிய  உத்திரபிரதேசத்தை இரண்டாக பிரிக்கவேண்டியதுதானே?. மக்கள் தனி மாநிலம் கேட்டு போராடும் இடங்களில் எல்லாம் இவர்கள் தனி மாநிலம் கேட்கவில்லை. அசாமில் போடோலாந்து  கேட்கிறார்கள். மேற்குவங்கத்தில் கூர்க்காலாந்து கேட்கிறார்கள். அங்கெல்லாம் தனிமாநிலம் கொடுக்காமல் விட்டுவிட்டு அதிமுகவும் பாஜகவும் ஜெயித்தக் காரணத்தால் தனி மாநிலமாகக் கேட்பது வேடிக்கையாக உள்ளது, அப்போ, ஜாதிக்கு ஒரு நாடு வைத்துவிடலாமா?  ’கொங்கு நாடு’என்று வருவதால் தனி மாநிலம் கேட்பார்களா? ஒரத்தநாடு எங்க ஊர் என்று வைத்திலிங்கம் தனி நாடு கேட்டால், மாநிலம் ஆக்கிவிடுவார்களா? இவர்கள் கேட்பது அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல அரசியல் தெரியாதவர்கள்தான் இப்படி பேசுவார்கள்.

தனி மாநிலம், யூனியன் பிரதேம் என்றெல்லாம் தமிழ்நாட்டை பிரிக்க முடியாது. ஏனென்றால், மக்கள் யாரும் இங்கு கோரிக்கை வைக்கவில்லை. கொங்கு மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசியலில் குழப்பம் ஏற்படுத்தவே பாஜக இப்படி சொல்கிறது. அதனால், கொங்கு நாடு என்று பாஜக கேட்பதை நாங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறோம். வேடிக்கை விளையாட்டாகத்தான் பார்க்கிறோம். மக்கள் விரும்பாததை அரசியல் கட்சிகள் கேட்பது இதுதான் முதல்முறையாக இருக்கிறது. பாஜகவுக்கு கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இருக்கிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், இவர்கள் சொந்த செல்வாக்கில்ஜெயிக்கவில்லை. அதிமுகவில் சேர்ந்துதான் ஜெயித்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

அசாமில் தனி மாநிலம் கேட்பதற்கே ’போடோலாந்து பீப்பிள்ஸ் பார்ட்டிஎன்ற ஒரு அரசியல் கட்சி உருவானது. அந்த மாதிரி இங்கு எந்தக் கோரிக்கையும் கிடையாது. ’தமிழ்நாடு ஒரு நாடா?’ என்று கேட்பவர்கள், கொங்கு நாடு ஒரு மாநிலமாக ஒத்துக்கொண்டுப் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மத்தியில் ஆளும் கட்சி என்பதால் எதையாவது பேசவேண்டும் என்று பேசுகிறார்கள். அரசியல் தெளிவில்லை. ஏற்கனவே, ராமதாஸ் வடமாநிலத்தை இரண்டாக பிரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பார். இப்போ, அவரும் கேட்பாரே? ஜாதிவாரியாக மாநிலம் அமைத்தால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான மாநிலம் அமைக்கணும்” என்கிறார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com