பெண்கள் முன்னேற்றத்தில் அண்ணாவின் தம்பி..

பெண்கள் முன்னேற்றத்தில் அண்ணாவின் தம்பி..

பெண்கள் முன்னேற்றத்தில் அண்ணாவின் தம்பி..
Published on

பெண்களை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவும் சாதி அமைப்பினை கட்டிக்காப்பவராகவும் இருந்த சமூகத்தில் தி.மு.கழகம் சமூகத்தில் தொடங்கிவைத்த மாற்றங்களும் கலைஞர் அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய திட்டங்கள் வழியேவும் சட்டங்கள் வழியேவும் நிகழ்த்திக்காட்டிய மாற்றங்கள் தீவிரமாக ஆராயப்படவேண்டியவை. 

நம் சமூகத்தில் பெண்களை படிக்க வைப்பது வீண் செலவாக பார்க்கப்பட்டது, காரணம் பெண்களைப் பெற்றவர்கள் சம்பாதிப்பதே அவர்கள் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதற்கு தான் என்ற நிதர்சனம். இந்நிதர்சனத்தினை உணர்ந்து தொடங்கப்பட்டது தான் மூவாலூர் ராமாமிர்த அம்மையார் திருமண உதவித்திட்டம். 

இத்திட்டத்தின் பலனை அனுபவிக்க குறைந்த பட்சம் 8ஆவது வரை படித்திருக்க வேண்டும் என்பதால் அப்பெண் பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். பின்னர் இத்திட்டத்தின் பலனை அடைய குறைந்த பட்சம் 12ஆவது வரை படித்திருக்கவேண்டும் என்று உருமாற்றப்பட்டது. இத்திட்டத்தின் வழி பயன்பற்றோர் பலர். இத்திட்டம் பெண்களின் கல்வியை மட்டும் உறுதிசெய்யவில்லை மாறாக அவர்களின் உயிரையும் காப்பாற்றியது. காரணம், பள்ளிப்படிப்பிற்கு பின் தான் திருமணம் என்று திட்டத்தின் வரையறை இருந்ததால் குறைவயது திருமணம் வெகுவாக குறைக்கப்பட்டது. குறைவயதுத் திருமணம் மட்டுப்பட்டதால் இளவயது கர்ப்பம் என்பது மட்டுப்பட்டது. 

பெண்களின் கல்வி மேம்பட மேம்பட, குழந்தையை பேணிப்பாதுகாத்தல் மேம்பட ஆரம்பித்தது. இதனால் பச்சிளம் குழந்தைகள் இறப்பதும் வெகுவாக குறைந்தது. ஆக, ஒரு திட்டத்தின் வழியே, குறைவயது திருமணம், இளவயது கர்ப்பம், இளவயது கர்ப்பம் காரணமாய் ஏற்படும் இறப்பு, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு என அனைத்தும் குறைவதற்கான சாத்தியங்கள் உருவாகின. 

ஊட்டச்சத்துக் குறைப்பாடு கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தலைவிரித்தாடிய பொழுது அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தினை ஒரு திட்டம் சற்று உயர்த்தியது என்றால், அது சத்துணவுத் திட்டத்தில் புரதம் நிறைந்த முட்டையினை சேர்த்தது. 

உயர்நிலைப்பள்ளியும் கல்லூரியும் நகர் புறத்தில் இருப்பதால் கிராமத்தில் இருக்கும் பெண்கள் பத்தாவதோடு நின்ற காலம் என்று ஒன்று இருந்தது. அதனை மாற்றியது இரண்டு திட்டங்கள். ஒன்று மினிபஸ் இன்னொன்று பஸ் பாஸ் திட்டம். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பதற்கு நுழைவுத்தேர்வு எழுதவேண்டிய நிலை ஒன்று இருந்தது. அந்நுழைவுத் தேர்வினிற்கு படிப்பதற்கே அத்தனை செலவு செய்யவேண்டியிருந்தது. 

அதனை ஒரே கையெழுத்தில் மாற்றி, அனைவரும் கல்லூரிப்படிப்பினை கனவு காண வழிவகை செய்தது நுழைவுத்தேர்வு ரத்து என்ற கலைஞரின் முடிவு. கல்லூரியில் படிக்க செலவு அதிகம் என்ற காரணத்தால் பெண்களை படிக்க வைக்க இயலாது என்று இருந்தவர்களின் வயிற்றில் பால் வார்த்தது முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி உதவித்திட்டம். 

கலைஞரின் அண்ணா சாதி தாண்டிய திருமணத்திற்கு பரிசு என்றார், அண்ணாவின் தம்பியோ பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை என்று சட்டமியற்றினார். வரும் காலங்களில், மாறி வரும் உலகிற்கு ஏற்ப பெண்களுக்கான சட்டங்களையும் திட்டங்களையும் திராவிட அரசியல் இயக்கம் அண்ணாவின் வழியில், கலைஞர் வழியில் செயல்படுத்தும் என்ற நம்பிக்கையில், உதிக்கும் சூரியனை எதிர்நோக்குகிறேன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com