“அவர் மஞ்சள் துண்டுக்கு நான்தான் இஸ்திரி போடுவேன்” - கண்கலங்கிய பலராமன்
காவேரி மருத்துவமனைக்கு முன்பாக திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க இரவு பகல் எனப் பார்க்காமல் ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர் எப்போது வெளியே வந்து கையசைப்பார் தலைவர் எனக் காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது கோபாலபுரம். இன்று நாம் அங்கே அவரது தெருவிற்குள் நுழைந்தபோது பெரிய அமைதி. ஆள் நடமாட்டமே இல்லாமல் மெளனமாக இருந்தது. பேச்சுக் கொடுக்கக்கூட ஒருவர் தென்படவில்லை.
சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி 5வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. ஆனாலும் அவரது “என் உயிரிலும் மேலான உடன்பிறப்புக்களே” என்ற கரகர குரலை மீண்டும் எப்போது கேட்போம் என்று அவரது தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்து நிற்கிறார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரம் பார்த்து திமுக தலைவராக அவர் பொறுப்பேற்று பொன்விழா வேலை வரை வந்துவிட்டது. உற்சாகமாக கொண்டாடிக் களிக்க வேண்டிய உடன் பிறப்புக்கள், கதி கலங்கிப்போய் இருக்கிறார்கள். சுபவேளையில் இப்படி ஒரு சங்கடம் அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘வா தலைவா..எழுந்து வா தலைவா’ என குரல் நரம்புகள் புடைக்க அவர்கள் கோஷமிடுவதை நம்மால் கேட்க முடிகிறது.
இதுவரை திமுக தலைவர் கருணாதியை தேசிய தலைவர்கள் முதல் தமிழக தலைவர்கள், நடிகர்கள் வரை எத்தனையோ பேர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்துவிட்டனர். அவரது குடும்பத்தினர் எத்தனையோ நம்பிக்கை வார்த்தைகளை கூறிவிட்டனர். ஆனாலும் தொண்டர்களின் மனம் ஆறுதல் அடையவில்லை. மருத்துவமனை முன்பே அடைப்பட்டுப் போய் கிடந்தார்கள். கருணாநிதியின் முதல் புகைப்படம் வெளியானபோது அவரது தொண்டர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் அதில் திமுக தலைவரின் முகம் தெளிவாக தெரியவில்லை. ஆகவே கொஞ்சம் அவர்களுக்கு சந்தேகம் இருந்தது. இரண்டாம் முறையாக வெளியான புகைப்படத்தில் கருணாநிதியை முகம் தெளிவாக தெரிந்தது. அதன் பிறகுதான் அவரது தொண்டர்களுக்கு நிம்மதி பிறந்தது. கொட்டும் மழையிலும் காத்திருந்த தொண்டர்கள் மெல்ல மெல்ல வீடு சேரத் தொடங்கியுள்ளனர்.
காவிரி மருத்துவமனையில் குவிந்திருந்த தொண்டர்களின் கண்ணீர் கதறலை பலரும் படம் பிடித்துக் காட்டிவிட்டனர். ஆனால் அதே அளவுக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு தீவிர தொண்டர் ஒருவர் இருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அவரது கையசைப்பை பார்த்துவிட்டுதான் விடிகிறது இவரது பகல் பொழுது. இவரது பெயர், பலராமன். கோபாலபுரம் கருணாநிதியின் வீட்டிற்கு அருகிலேயே 30 வருடங்களாக இஸ்திரி கடை நடத்தி வருபவர். இந்திய அரசியலில் மூத்த அரசியல்வாதிகாக திகழும் கலைஞர் கருணாநிதியை காலை, மாலை என கணக்கு வழக்கு இல்லாமல் சந்தித்து வருபவர் இவர். கோபாலபுர தெருவில் நடக்கும் அரசியல் அசைவுகளை அங்குலம் அங்குலமாக கவனித்து வருபவர் இவர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த வதந்திகளால் தமிழகமே ஸ்தம்பித்து நிற்கும் இந்த வேளையில் இவர் மனப்பதிவு என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ள விரும்பினோம். அவரிடம் புதிய தலைமுறை இணையதளத்தில் இருந்து வருகிறோம் என்றோம். ‘திமுக தலைவரை பார்க்காமல் இருக்கிறீர்களே? எப்படி உள்ளது உங்கள் மனநிலை?’ என்றோம். அவர் ஒவ்வொரு வார்த்தைகளாக கூட்டிக் கூட்டி பேசினார். அவருக்கு சரளமாக விஷயங்களை சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் அவரது அன்பை நாம் கண்களில் உணர்ந்தோம். “நான் 30 வருஷமா இஸ்திரி கடை வச்சிருக்கேன். ஆரம்ப காலத்தில் என் கடைக்கு எப்போதாவதுதான் கலைஞரின் துணிகள் வரும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அவரது துணிகளை நான்தான் இஸ்திரி பண்ணுறேன். அவரது குடும்பத்தினர் துணிகளையும் நான்தான் இஸ்திரி பண்ணுறேன். அவர் பெரிய மனிதரா இருந்தாலும், அவரை சுத்தி இருக்குறவங்களை சரியா கவனிப்பார். எந்த நேரத்துல, எவ்வளவு அவசரத்துல போனாலும், என் கடையத் தாண்டி போகும் போது என்னைப் பாத்து லேசா சிரிப்பாரு. நா வணக்கம் சொல்லுவேன். அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லிட்டு போவாரு”என்றார் பலராமன். அவரது குடும்பத்தை பற்றி விசாரித்தோம்.
“எனக்கு இரண்டு பசங்க. நான் கலைஞர் வீட்டிற்குள் போய் அவர பார்த்ததில்ல. என் பசங்க சின்ன வயசுல அவர் வீட்டுக்கு போவாங்க. அவர் வீட்டில் வேலை பாக்குறவங்கதான் துணிகளை எடுத்து வந்து கொடுப்பாங்க. கடைசியா அவர் துணிய 15 நாளுக்கு முன்னாடிதான் இஸ்திரி செஞ்சு கொடுத்தேன். அவருக்கு இப்ப உடல்நிலை சரியில்லை. நான் ரொம்ப கவலைப்பட்டுட்டேன். அவர் கண்டிப்பா திரும்ப வருவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. இப்போ அவரு உடல்நிலை சரியாகிட்டாரு. அவர் வீட்டுல இருக்கும்போது, நாங்க ஒரு பாதுகாப்பு கவசத்துக்குள்ள இருக்குறது போல உணர்ந்தோம். தீபாவளி, பொங்கல் வந்தா தலைவர் வீட்டுல இருந்து எங்களுக்கு ஸ்வீட், புது துணி எல்லாம் வரும். ஆயிரம் ரூபாய் கொடுப்பார். செலவுக்கும் அவங்க வீட்டுல இருந்து பணம் தருவாங்க. நான் கலைஞருக்காக என் கையில உதய சூரியன் சின்னத்த பச்சை குத்தியிருக்கேன். இங்க பாருங்க” எனக் கையை காண்பிக்கும் இந்தப் பலராமனின் பலமே..! கலைஞர்தான்.