மறக்க முடியுமா? கருணாநிதியின் பராசக்தி வசனம்!

மறக்க முடியுமா? கருணாநிதியின் பராசக்தி வசனம்!

மறக்க முடியுமா? கருணாநிதியின் பராசக்தி வசனம்!
Published on

அந்த காலகட்டத்தில் கருணாநிதியின் வசனத்துக்காவே பல படங்கள் ஓடியதுண்டு. அதில் ஒன்று, ’பராசக்தி’. 1952-ல் வெளியான இந்தப் படத்தில் அறிமுகமான சிவாஜி கலைஞரின் வசனத்தை நடிப்பால் மெருகேற்றியிருப்பார். இப்போதும் உயிர்த்துடிப்போடு இருக்கும் அந்த வசனம் இங்கே:

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை, நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி, பகல்வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை? என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்!.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக. தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர், அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.

கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான், பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர் அவரே, நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகைவாசியின் மடியிலே ஒரு நாள்,  இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? 

பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com