கலைஞர் இல்லையே என்கிற ஏக்கம் இல்லாத அளவுக்கு அரவணைத்துச் செல்கிறார் ஸ்டாலின் - துரைமுருகன்
கடந்த 2018 ஆம் ஆண்டு தி.மு.க தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின் , ஆகஸ்ட் 28 ஆம் தேதி இதே நாளில்தான் தி.மு.கவின் அடுத்த தலைவராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க ஸ்டாலின். இந்த இரண்டு ஆண்டுகளில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள், மாநில சுயாட்சி உரிமைக்கான எதிர்ப்புக்குரல் போன்ற பல்வேறு போராட்டங்களையும் பாராளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் என்று தேர்தல்களையும் சந்தித்துள்ள மு.க ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்நிலையில், கலைஞர் தலைவராக இருந்தபோதும், தற்போது ஸ்டாலின் தலைவராக இருக்கும்போதும் தி.மு.க தலைமைகளிடம் நெருக்கமாக இருப்பவர் தி.மு.க பொருளாளர் துரைமுருகன். அவரிடம், தலைவராக மு.க ஸ்டாலினின் இரண்டாண்டு செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்று கேட்டோம்,
“கலைஞர் இல்லாத குறையை ஸ்டாலின் நிரப்பி இருக்கிறார். கட்சியை ஆட்சிக்கு வருகின்ற அளவுக்கு தயார் செய்திருக்கிறார். பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களின் மூலமும் தமிழக மக்களுக்காக உழைப்பதன் மூலமும் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். கலைஞருக்குப் பிறகு ஒரு இளம் தலைவராக வந்து, கட்சியிலுள்ள பல முதிய தலைவர்களோடுப் பழகி அவர்களுடைய மதிப்பையும் அன்பையும் வென்றிருக்கிறார்; பெற்றிருக்கிறார்;
எங்களுக்கு எதிர்ப்பு கட்சியாக இருந்தால்கூட பிரதமர் மோடி நேரடியாக போனில் அழைத்துப் பேசும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றிருக்கிறார். கட்சித் தோழர்கள் மத்தியில் தலைவர் கலைஞர் இல்லையே என்கின்ற ஏக்கம் இல்லாமல், அவர்களை தலைமைப்பண்புடன் அரவணைத்து செல்கிறார். எனவே, ஒரு மாநிலத்தை ஆள்கின்ற அத்தனை தகுதிகளையும் ஸ்டாலின் பெற்றிருக்கிறார்”