12 மணிநேர வேலையில் திமுகவின் நிலைப்பாடு அன்றும்.. இன்றும்! கூட்டணி கட்சிகளே தீவிரமாக எதிர்ப்பது ஏன்?

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 12 மணி நேர சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அதன் சாதக, பாதங்கள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசுfile image

ஒரு காலத்தில் 12 முதல் 18 மணி நேரம் வரை தொழிலாளர் வேலை செய்யும் மோசமான சூழல் இருந்து வந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பின்னரே 8 மணி நேர வேலை என்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது, 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம்.. இந்த அடிப்படையே மனித சமுதாயத்திற்கு ஏற்றது என்ற முடிவுக்கு உலகம் வந்தது. இப்படியான சூழ்நிலையில் தமிழக அரசு நேற்று நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 21) தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மசோதாவின்படி, தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறை கொண்டு வரப்படும். இந்த புதிய சட்ட திருத்த மசோதா தொழிலாளர்களின் விருப்ப தேர்வாக இருக்கும் எனவும், இது கட்டாயம் அல்ல எனவும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சிவி கணேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. என்றாலும், இந்த சட்ட மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியவண்ணம் உள்ளது.

உலகையே அச்சுறுத்தத் தொடங்கிய கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள், வேலைவாய்ப்பின்றி, உரிய வருமானமின்றி கடும் சிரமத்துக்குள்ளாகினர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்ட மத்திய அரசு, கடந்த 2020 செப்டம்பர் மாதம் தொழிலாளர் உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்று தொழிலாளர் மசோதாக்களை நிறைவேற்றியது. தகவல் தொழில்நுட்ப துறைகளிலெல்லாம் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாலும், உரிய சம்பளம் தராமல் இருப்பதாலும் பணியாளர்களின் உரிமையை நிலைநாட்ட இந்தச் சட்டம் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில அரசும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டன.

மேலும், ‘இது தொழிலாளர்களை எளிதில் வேலைக்கு அமர்த்தவும், பணிநீக்கம் செய்யவும் முதலாளிகளை அனுமதிக்கும்’ என்று அவைகள் வலியுறுத்தின. ஆயினும், தொழிலாளர் நலன் என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரே நேரத்தில் இந்தச் சட்டங்களை அமல்படுத்த விரும்புதாகக் கூறியிருந்தது. இதையடுத்தே இந்த சட்ட மசோதாவுக்கு பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தன. ஏன், தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசே ஆதரவளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப் பார்க்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிfile image

இதுகுறித்து தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைப்போல் மத்திய அரசுக்குத் தலையாட்டாமல் தமிழகத்தில் இந்தச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும்” என தமக்கு ஸ்டாலின் கெடு விதித்ததாகவும் கூறியிருக்கும் அவர், “அன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப் பார்க்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார். பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதற்கு திமுகவே எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது.
கமல்ஹாசன்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ள 12 மணி நேரச் சட்டம் என்பது உழைக்கும் வர்க்கத்திற்கு கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட உடல் மற்றும் மனநலன் சார்ந்த பாதிப்புகளை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். மொத்தத்தில் இந்த சட்டம் தொழிலாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்file image

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. ஏற்கெனவே தனி மனித மகிழ்ச்சிக்கான அளவீட்டில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பின்தங்கியுள்ள நிலையில், 12 மணி நேரம் இயந்திரம்போல உழைப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசே செயல்படுத்தாத இந்த சட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கு எந்தத் தேவையும் இல்லை. மேலும், இச்சட்டத்தால் தொழிலாளர் சமூகம் கூடுதலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.
தொல்.திருமாவளவன்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்.பி. தொல்.திருமாவளவன், ”2020ஆம் ஆண்டு தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு (மையச் சட்டம்) சட்டமானது, நாடாளுமன்றத்தில் இந்திய ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட போது திமுக, விசிக, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். அந்த எதிர்ப்பின் காரணமாக இன்னும் கூட அந்த சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முன்வரவில்லை. பாஜக அரசே செயல்படுத்தாத இந்த சட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கு எந்தத் தேவையும் இல்லை. மேலும், இச்சட்டத்தால் தொழிலாளர் சமூகம் கூடுதலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் தமிழ்நாடு அரசின் மீதான நம்பகத்தன்மைக்குப் பாதிப்பு உண்டாகும். எனவே, இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Thol Thirumavalavan
Thol ThirumavalavanThol.Thirumavalavan | Facebook

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ”150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்ற ஒன்றைச்சொல்லி, அதை இல்லாமல் செய்வது தவறான நடவடிக்கை. இந்தியாவிலேயே இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில அரசு கொண்டுவந்திருப்பது தமிழ்நாடு அரசுதான். தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது. எனவே, இந்த மசோதா சட்டமாகாமல் கைவிடப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஒன்றிய அரசின் பரிந்துரையைச் செயல்படுத்தும் முயற்சியாக சட்டமன்றத்தில் 65ஏ சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அமைப்புச்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே ஒட்டுமொத்த தொழிலாளர் நலனுக்கு எதிரான 65ஏ சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வைகோ
வைகோfile image
இவர்களைத் தவிர தொழிற்சங்கத்தினரும், தொழில் முனைவோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய தொழில்முனைவோர் சங்கத்தைச் சேர்ந்த ரகுநாதன், “இந்தச் சட்டம அமலானால் 4 நாட்கள் வேலை பார்த்துவிட்டு, மீதி 3 நாட்களுக்கு வேறு வேலை தேடினால் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழலுக்கு தள்ளப்படுவர். அப்படியென்றால், அவர்களுடைய வாழ்நாள், உடல்நலம், குடும்ப வாழ்க்கை ஆகியன கேள்விக்குறியாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

சிஐடியூ மாநிலத் தலைவரான செளந்தரராஜன், ”75 ஆண்டுகளில் எந்த அரசும் சிந்திக்காத, மிக மோசமான, தவறான மசோதா இது. இதற்கு முன்பு எந்த ஆட்சியும் செய்ய விரும்பாத செயலை திமுக அரசு செய்வது வேதனை. 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது; சிறப்புச் சூழலில் 9 மணி நேரம் வேலை வாங்கலாம். எப்படியிருந்தாலும் அது வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய காலத்தில் ஐடி மற்றும் பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற விதிமுறைகளில் தீவிரம் காட்டுகின்றன. குறிப்பாக, பல வளர்ந்துவரும் நாடுகளில் முதலீடு செய்யவரும் மின்னணு நிறுவனங்கள் நிபந்தனையாகவே இதனை வைக்கின்றன. இந்தியாவில்கூட, சில மாநில அரசுகளிடம் இதுபோன்ற நிறுவனங்கள் கடந்த காலங்களில் அழுத்தம் கொடுத்ததாகவும், அதனாலேயே அந்த மாநிலங்களில் இதுபோன்ற சட்ட மசோதாக்கள் உடனடியாக நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்தே, முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்கள்தான் அதற்கு ஒப்புக்கொண்டு வேலைகளில் சேருகின்றனர்.

காரணம், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைச் சமாளிப்பதற்காகவே இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். அதேநேரத்தில் இந்த விதிமுறைகள் மற்ற ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேலை நேரம் அதிகரிப்பதால் மனநல பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

குறிப்பாக, பெண்களுக்கு அதிக சுமை ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். அதிகமாய் வேலை பார்ப்பதால் பெண்களுக்கு குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் மனக் கசப்புகள் ஏற்படலாம்; குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் எனப் பல வகை காரனங்கள் கூறப்படுகின்றன. மேலும், வேலை நேரத்தை அதிகரிப்பதால் உற்பத்தியும், வேலைத் திறனும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதுமே இதுபோன்ற சூழல் தற்போது உருவாகி வருவதற்கும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 4 நாட்கள் வேலைபோக, மற்ற 3 விடுமுறை நாட்களில் மின்சார சேமிப்பு, வாகன பயன்பாடு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை குறைக்க வழி மேற்கொள்ளலாம் என நிறுவனங்கள் தரப்பில் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அதேநேரத்தில், ஐரோப்பிய நாடுகளில் 8 மணி நேர வேலைக்குப் பதிலாக 6 மணி நேரத்திற்காகப் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இது தேவையில்லை என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது.

போதிய அளவில் வேலைவாய்ப்புகளே உருவாக்கப்படாத நிலையில், ஊழியர்களுக்கு 12 மணி நேரம் என்பது சாத்தியப்படாத ஒன்று என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. மேலும், இந்த சட்டமசோதாவால், மே தினம் உருவாக்கப்பட்டதற்கே அர்த்தமில்லை என்கிறார்கள், தமிழக உழைப்பாளிகள்.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால், தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 மணி நேர வேலை.. கடந்த வந்த பாதை!

உலகம் முழுவதும் நாளொன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அதற்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதில் ஒருபகுதியாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தின்போது முதல்முறையாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின், 1886ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டம் பேசுபொருளானது.

தொடர்ந்து, 1889ஆம் ஆண்டு பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்ற கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அன்று உலகளாவிய தொழிலாளர்கள் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. அதன் விளைவாக ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக 1923ஆம் ஆண்டு தமிழகத்தில்தான் மே தினம் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com