தித்திக்குதே… தித்திக்குதே.. எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்..?
பட்டாசும் பலகாரமும் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் முழுமை பெறாது. மண் மணம் மாறாத நம் ஊர் பலகாரங்கங்களின் தித்திக்கும் அணிவகுப்பு இதோ..
திருவையாறு அசோகா அல்வா
காணும்போதே நாவில் உமிழ்நீருற வைக்கும் இதன் பெயர் அசோகா. திருநெல்வேலியில் அல்வா எந்தளவுக்கு பிரசித்தமோ, அதேபோல், தஞ்சை மாவட்டம் திருவையாறில் அசோகா எனப்படும் ஒருவகை அல்வா வெகு பிரபலம். இதன் பிறப்பிடமும் திருவையாறுதான். சுண்டி ஈர்க்கும் இளஞ்சிவப்பு நிறம்; கமகமக்கும் நெய் வாசனை; இலையில் ஒட்டாமல் வழுக்கிக்கொண்டு வாய்க்குள் பாயும் பதம் என அசோகா அல்வாவை ருசித்தவர்களுக்கு தெரியும் அதன் அருமை. பாசிப்பயறு, கோதுமை மாவு சேர்த்துத் தயாரிப்பதால் உடலுக்கும் ஆரோக்கியமானது என்கிறார்கள் ருசியறிந்தவர்கள். திருவையாறு பக்கம் சென்றால் மறக்காமல் அசோகா அல்வாவையும் சுவைத்து விட்டுத் திரும்புங்கள்.
ஆற்காடு மக்கன் பேடா
காண்பதற்கு ‘குலோப்ஜாமூன்’ போன்று இருக்கும் இதற்குப் பெயர் மக்கன் பேடா. ஆற்காடு என்றதும் இனிப்புப் பிரியர்களின் நினைவுக்கு வருவதும் இந்த மக்கன் பேடா தான். ஆற்காட்டை ஆட்சி செய்த நவாப்புகள் காலத்தில் அறிமுகமான இந்த மக்கன் பேடா இன்றும் மக்களின் மனதில் மாறா ருசிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையன்று. வேலூர் மாவட்டத்தில் நடக்கும் வீட்டு விசேஷங்கள், திருவிழா, பண்டிகை நாட்களில் மக்கன் பேடா கட்டாயம் பரிமாறப்படும். பால்கோவா, மைதா, தயிர், நெய் மற்றும் பலவகையான உலர்பழங்களை பதமாக பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுத்து தயாரிக்கப்படுவது இதன் ருசியின் ரகசியம்.
தூத்துக்குடி மக்ரூன்
கூம்பு வடிவில் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த மக்ரூன், தூத்துக்குடியின் அடையாளங்களுள் ஒன்றாகவே மாறிவிட்டது. மிதமான இனிப்பும், திகட்டாத ருசியும்தான் மக்ரூனின் தனிச்சிறப்பு. மக்ரூன் என்பது ஒரு போர்ச்சுக்கீசிய சொல். தென் தமிழகத்திற்கு வாணிபம் மேற்கொள்ள வந்த ஐரோப்பியர்கள் தான் மக்ரூனை இங்கே அறிமுகப்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த மக்ரூன் தயாரிக்க மூன்றே மூன்று மூலப்பொருட்கள் மட்டுமே தேவை. முட்டையின் வெள்ளைக்கரு, முந்திரிப்பருப்பு, வெள்ளைச் சர்க்கரை ஆகிய கலவையே சுவைமிக்க மக்ரூனாக உருவாகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், கடல்-வான் கடந்தும் பயணிக்கிறது தூத்துக்குடி மக்ரூன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
குழந்தைகள் முதல் வயதானவர்கள் திகட்டத் திகட்ட உண்ணும் பால்கோவா பிரியர்களுக்கு மிகவும் பரிட்சயமான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். எத்தனையோ ஊர்களில் பால்கோவா தயாரிக்கப்பட்டாலும் அதன் பிரத்யேகச் சுவை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவில் மட்டுமே உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் மேய்ந்து வளர்க்கப்படும் மாடுகள் தரும் பாலுக்கு தனிச்சுவை உண்டாம். அந்த தனிச்சுவை இங்கு தயாரிக்கப்படும் பால்கோவாவுக்கு மேலும் சுவை கூட்டுகிறது என்கிறார்கள் பால்கோவா தயாரிப்பாளர்கள். பத்து லிட்டர் பாலை மூன்று லிட்டராக சுண்டக்காய்ச்சி, சர்க்கரை சேர்த்து பால் மணம் மாறாமல் பக்குவமாக தயாரிக்கப்படுகிறது பால்கோவா. இத்தனை ஆண்டுகளில் தரத்தில் எந்த சமரசமும் செய்யாததால்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இன்றும் உலகப்புகழ் பெற்று இனிக்கிறது.
ஊட்டி வர்க்கி
வசீகரமான ஊட்டி, ‘வர்க்கி’ எனும் நொறுக்குத்தீனிக்கும் வெகு பிரபலமானது. ‘வர்க்கி’ என்ற வார்த்தையின் பெயர்க்காரணத்துக்கு தெளிவான சான்றுகள் இல்லை. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேயர்கள் அதிக எண்ணிக்கையில் ஊட்டியில் வசித்தனர். உறைய வைக்கும் கடுங்குளிரில் இதமாக தேநீரோடு குக்கீஸ் பிஸ்கட்டுகளை தொட்டு உண்பது ஆங்கிலேயர்கள் வழக்கம். அவர்களிடம் பணியாற்றிய உள்ளூர் சமையல்காரர்கள் குக்கீஸ் பிஸ்கட்டை மாதிரியாக வைத்து தயாரித்தது தான் வர்க்கி. ‘மொறுமொறு'வென்று, டீ - காஃபியில் தொட்டுச் சாப்பிட ருசியாகவும், இதமாகவும், மிருதுவாகவும் இருந்ததால் உள்ளூர்வாசிகளின் நாவை கட்டிப்போட்டது. மைதா, சர்க்கரை, நெய், டால்டா, ஈஸ்ட் கொண்டு விறகடுப்பில் தயாரிக்கப்படும் வர்க்கி, இன்று ஊட்டியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. ஊட்டியின் குளிர்ந்த நீர் மற்றும் சீதோஷ்ணநிலை தான் வர்க்கியின் தனிச்சுவைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் நீலகிரிவாசிகள். அதனால்தான் மற்ற ஊர்களில் ஊட்டி வர்க்கி போன்ற சுவை எடுபடவில்லையாம். சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு டன் கணக்காக வர்க்கிகள் விற்பனை ஆகின்றன.
பாலவநத்தம் சீரணி மிட்டாய்
குதுப்மினார் கோபுரம் போல மூன்று அடி உயரத்திற்கு நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இதன் பெயர் சீரணி மிட்டாய். தென் மாவட்டங்களில் இந்த மிட்டாயை ருசி பார்த்திராதவர்கள் யாரும் இருக்கமுடியாது. விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் பகுதி சீரணி மிட்டாய் தயாரிப்புக்கும் விற்பனைக்கும் பேர்பெற்றது. ஊரெங்கும் கடைகளில் இனிப்புக் கோபுரங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சீரணி மிட்டாயை ருசி பார்க்காமல் நகர முடியாது. கிராமப்புற மக்களுக்கு இந்த சீரணி மிட்டாய்தான் பிடித்தமான ஸ்நாக்ஸ். லேசான மொறுமொறுப்புடன், தித்திப்பூட்டும் சுவையுடன் இருக்கும் அதன் ருசி நாள்முழுதும் நாவில் தங்கிவிடும். நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமலும் கெட்டுப்போகாமலும் இருப்பது இதன் விசேஷம். பச்சரிசி மாவு, உளுந்து, வெல்லம் கொண்டு தயாரிக்கப்படுவதால் உடலுக்கும் ஆரோக்கியம் சேர்க்கிறது.
சாத்தூர் சேவு
கரகர மொறுமொறுவென இருக்கும் கார சேவுக்கு புகழ் பெற்ற ஊர் சாத்தூர். விருதுநகர் மாவட்ட மக்கள் அன்பளிப்பாக வழங்கும் தீபாவளி பலகார பார்சல்களில் சாத்தூர் சேவு முக்கிய இடம்பிடித்திருக்கும். விருதுநகர் மாவட்டத்தில் விளையும் மிளகாய் வற்றலின் காரத்தன்மை, சேவு தயாரிப்பவர்களின் பாரம்பரிய கைவண்ணம், சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக கடலை எண்ணெய் பயன்படுத்துவதாலும் சாத்தூர் சேவுக்கு ருசி அதிகம். கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகாய்த் தூளுடன் மலைப் பூண்டு, பெருங்காயமும் சேர்த்து தயாரிக்கப்படுவதால் அருமையான காரச்சுவை தருவதுடன், உடலுக்கும் உபாதை உண்டு பண்ணுவதில்லை. சாத்தூரில் எல்லாக் கடைகளிலும் சேவுக்காக மக்கள் கூட்டம் எப்போதும் அலை மோதிக்கொண்டிருக்கும். காராச்சேவு மட்டுமல்ல, இனிப்புச் சேவு, மிளகுச் சேவு, சீரகச் சேவு, பட்டர் சேவு. நயம் சேவு என பல வகை இங்கு உண்டு.
கோவில்பட்டி கடலை மிட்டாய்
நமது பாரம்பரிய பலகாரங்களில் முதன்மையானது கடலை மிட்டாய். எல்லா ஊர்களிலும் கடலைமிட்டாய் விற்பனை செய்யப்பட்ட போதிலும், கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு என்றுமே ஒரு மவுசு உண்டு. விருதுநகர் மாவட்டத்தில் எங்கு சென்றாலும், ‘கோவில்பட்டி கடலைமிட்டாய்’ கோவில்பட்டி கடலைமிட்டாய் என ஒலிக்கும் வியாபாரிகள் சத்தம், கோவில்பட்டி கடலைமிட்டாயின் ருசிக்குச் சான்றாகும். கோவில்பட்டியை கடந்து செல்லும் பயணிகள் மறக்காமல் கடலை மிட்டாய் வாங்கிச் செல்வது இன்றைக்கும் மாறவில்லை. நிலக்கடலை, வெல்லம் கலந்து பக்குவமான கைவண்ணத்தில் தயாரிக்கப்படுவதால் சத்தான, சுவையான பண்டமாக கடலைமிட்டாய் திகழ்கிறது.
வெள்ளியணை அதிரசம்
அதிரசம் இல்லாமல் தீபாவளி பலகாரம் முழுமை பெறாது. கரூர் மாவட்டத்தில் இருக்கும் வெள்ளியணை, அதிரசம் தயாரிப்புக்கும் சுவைக்கும் முன்னோடி. கரூர் மாவட்ட வாசிகள் தீபாவளி பண்டிகையின்போது, வெள்ளியணை அதிரசத்தை ஆர்டர் செய்து வாங்கிச் செல்வார்கள். பச்சரிசி, அச்சு வெல்லம், ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்த கலவையில் அமராவதி ஆற்று நீரும் சேர்த்து தயாரிக்கப்படுவதே வெள்ளியணை அதிரசத்தின் தனிச்சுவைக்கான காரணம். வெள்ளியணை அதிரசம் 50 நாட்கள் வரை சுவை மாறாமல், கெடாமல் இருக்கிறது என்கிறார்கள் ருசி கண்டவர்கள்.