தீபாவளி பழக்கங்களும் சில வழக்கங்களும்

தீபாவளி பழக்கங்களும் சில வழக்கங்களும்

தீபாவளி பழக்கங்களும் சில வழக்கங்களும்
Published on

 தீபாவளி எண்ணெய்க் குளியல் ஏன்?

தீபாவளியன்று அதிகாலையில் எழ வேண்டும். வீட்டிலுள்ள ஒவ்வொரு பெரியவர்கள் காலிலும் நலங்கிட்டு மகிழ வேண்டும். தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துத்தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெய்யில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். 

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் என்று தீர்க்கதமஸ் என்ற முனிவர் சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார். அதற்கு அவர், புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமாதேவியும்; மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருக்கிறார்கள் என்று கூறினாராம். எனவே நாம் எண்ணெய் தேய்த்து சிகைக்காய் வைத்து குளிக்கிறோம். சந்தனம் குங்குமத்தை வைத்துக் கொள்கிறோம். 

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள் என்பதால், எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுவதாகவும் கூறப்படுகிறது. அவன் இறந்த நாளை புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுகிறோம். பழங்காலத்தில் இலை மற்றும் சாணங்களை கொண்டு வெடிமருந்து தயாரித்துள்ளனர். அதில் இருந்து அந்தக் காலத்தில் பண்டிகைக் காலங்களில் வெடி வெடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

தீபாவளியில் சகோதரிகளுக்கு பரிசு வழங்கும் வழக்கம் ஏன்? 

வட மாநிலங்களில் தீபாவளியை வெகு விமர்சையாகக் கொண்டாடுவார்கள். பெரும்பாலானவர்கள் தங்களின் வியாபரத்திற்கு ஆண்டுப் புதுக்கணக்கை அன்றுதான் தொடங்குவார்கள். 

தீபாவளி அன்று அவர்கள் சகோதரிகளுக்கு பரிசு வழங்கும் பழக்கத்தை அவர்கள் வைத்திருக்கின்றனர். தீபாவளியை அவர்கள் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். அதற்கு அவர்கள் ஒரு கதை வைத்திருக்கின்றர். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான் எமன். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இதை நினைவு படுத்தும் விதமாக இன்றும் சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசுப் பொருள் வழங்கி வருகின்றனர்.
பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள். 

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே மக்கள் விரும்புகின்றனர். பெண்கள் புடவையும் ஆண்கள் வேட்டியும் உடுத்துவார்கள். தீபாவளிக்கு முக்கிய பலகாரம் இனிப்பு. முறுக்கு, அதிரசம், சீடை, ரவா லட்டு, பணியாரம், வடை, பணியாரம். பாயாசம், அல்வா, எள் உருண்டை என இனிப்புக்கள் நிறைய செய்வது வழக்கம். ஒருவீட்டு இனிப்புகள் மறுவீட்டுக்கு கொடுத்து அன்பை பரிமாறுவது தவறாமல் நடக்கும். இதில் மிக முக்கியம் தீபாவளி இலேகியம். இது செரிமானத்திற்கு உகந்த மருந்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com