அண்ணாத்த to இட்டர்னல்ஸ் - தீபாவளி ரிலீஸில் கவனம் ஈர்க்கும் 6 படங்கள்!

அண்ணாத்த to இட்டர்னல்ஸ் - தீபாவளி ரிலீஸில் கவனம் ஈர்க்கும் 6 படங்கள்!
அண்ணாத்த to இட்டர்னல்ஸ் - தீபாவளி ரிலீஸில் கவனம் ஈர்க்கும் 6 படங்கள்!

கொரோனா இரண்டாம் அலைக்குப் பின், இந்திய அளவில் தீபாவளி ரீலீஸ் படங்கள் இம்முறை ஓரளவு கவனம் ஈர்த்துள்ளன. பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு ரசிகர்கள் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்புவர் எதிர்பார்க்கப்படும் வேளையில், கவனத்துக்கு தீபாவளி ரிலீஸ் படங்களின் பட்டியல் இது...

அண்ணாத்த: கொரோனா காலத்தில் மாஸான திரைப்படங்களை பார்த்தே வருடக்கணக்கில் ஆகியுள்ள நிலையில், அந்தக் குறையை போக்க மாஸ் ஹீரோ ரஜினிகாந்த் நடிப்பில் வரப்போகும் திரைப்படமே 'அண்ணாத்த'. நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்க சிவா இயக்கியுள்ளார். அதற்கேற்ப மாஸான டீசர் வெளியாகி ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தீபாவளிக்கு ரஜினிக்கு நிகரான எந்தப் பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகவில்லை என்பதால் மிகப் பெரிய படமாக 'சோலோ'வாக தமிழ், தெலுங்கு மொழிகளில் 'அண்ணாத்த' களமிறங்குகிறது.

சூர்யவன்ஷி: கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் பட்ஜெட் மற்றும் நடிகர்கள் அளவில் மிகப்பெரிய படம் என்றால், 'சூர்யவன்ஷி'யை குறிப்பிடலாம். அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் என பாலிவுட்டின் மூன்று சூப்பர் ஸ்டார்கள் இந்தப் படத்தில் நடிக்க, பாலிவுட் 'கமர்ஷியல் கிங்' என அழைக்கப்படும் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளியாகவில்லை. மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு ஒருவழியாக தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் இந்தப் படத்துக்கு கிடைக்கப்போகும் வசூல் காரணமாக, இந்தியத் திரையுலகின் வியாபார வர்த்தகம் ஏற்றம் காணலாம் என்று கணித்துள்ளனர். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இட்டர்னல்ஸ்: மார்வெர்ல் காஸ்மிக்ஸ் ரேஸை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமெரிக்க சூப்பர் ஹீரோ படமே 'இட்டர்னல்ஸ்'. உலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்க, ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமயில் நன்ஜியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பாரி கியோகன், டான் லீ, ஹரிஷ் பட்டேல், கிட் ஹரிங்டன், சல்மா ஹயக் மற்றும் ஏஞ்சலினா ஜோலி என்று ஹாலிவுட்டின் நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் மார்வெல் திரைப்பட ரசிகர்களை கணக்கில் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவான தீபாவளி அன்று இந்தியாவின் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படுகின்றது.

எனிமி: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இதில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. மேலும், ஆயுதபூஜைக்கு திரைப் படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், சில காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. இப்போது தீபாவளி வெளியீடாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக படம் வெளியாகிறது. சிம்புவின் நடிப்பில் உருவாகி உள்ள 'மாநாடு' திரைப்படம் 'அண்ணாத்த' திரைப்படத்துடன் மோதவிருந்த நிலையில், அது தள்ளிப்போனது. இப்போது அந்த இடத்துக்கு 'எனிமி' வந்துள்ளது.

இந்திய அளவில் தீபாவளிக்கு பெரிதாக எதிர்பார்க்கப்படும் படங்கள் இவை. இந்திய சினிமாவில் முக்கிய அங்கங்களாக இருக்கும் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகம் இந்தமுறை தீபாவளிக்கு பெரிதாக படங்களை ரிலீஸ் செய்யவில்லை. அதற்கு 'அண்ணாத்த', 'எனிமி' போன்ற மற்ற மொழி படங்கள் நேரடியாக அந்த மொழிகளில் வெளியாவதும், தியேட்டர்கள் திறப்பும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. இதேபோல் ஆந்திராவில் பெரிய விழாவாக கொண்டாடப்படும் சங்கராந்திக்கு பெரிய நடிகர்கள் தங்களின் படங்களை ரிலீஸ் செய்ய இருப்பதால், அங்கும் பெரிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகவில்லை. என்றாலும் ஓரிரு சிறு பட்ஜெட் படங்கள் அன்று வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தமிழில் அருண் விஜய் நீண்ட காலத்துக்கு முன்பு கார்த்திகாவுடன் இணைந்து நடித்த 'வா டீல்' படம் தீபாவளி அன்று வெளியாகலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒடிடி வெளியீடுகள்:

ஜெய் பீம்: 'சூரரைப் போற்று' படத்துக்கு பிறகு தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நடிகர் சூர்யாவின் படம்தான் 'ஜெய் பீம்'. அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். ’ஜெய் பீம்’ படத்தை தயாரிப்பதோடு வழக்கறிஞராகவும் நடிக்கிறார் சூர்யா. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் முதலானோர் நடித்துள்ளனர்.

எம்ஜிஆர் மகன்: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. சசிக்குமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்க, சத்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டே வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனாவால் தள்ளிப்போனது. இந்த நிலையில், வரும் தீபாவளியையொட்டி, நவம்பர் 4 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

- மலையரசு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com