அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை

அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை

தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தங்களுடைய கூட்டணி கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு குறித்து பேச ஆரம்பித்துவிட்டன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தற்போதையச் சூழலில் தனியாக நிற்கின்றன. கடந்த முறை அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்த சமத்துவ மக்கள் கட்சியும், திமுகவுடன் கூட்டணியில் இருந்த ஐஜேகேவும் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி, மக்கள் நீதி மய்யத்துடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அது ஒப்புவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுக தலைமையில் கூட்டணியா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியா, எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா? அதிமுகவுக்கான முதல்வர் வேட்பாளரா என்கிற சர்ச்சைகளெல்லாம் முன்பு எழுந்தன. ஏனென்றால் நாடாளுமன்றத்தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றுதான் தேர்தலை சந்தித்தது அதிமுக - பாஜக கூட்டணி. இந்த சர்ச்சையெல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. அதன் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்திப்போம் என்றும், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் கூட்டணிக் கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், எந்த கட்சி யாரோடு கூட்டணியில் இருக்கிறார்கள்? எவ்வளவு சீட் கேட்கிறார்கள்? கூட்டணி தலைமைகள் எந்தக் கட்சிக்கு, எவ்வளவு சீட் ஒதுக்க திட்டமிடுகிறார்கள்? - இப்போது வரைக்கும் எவ்விதமாக பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

முதலில், தற்போது ஆளுங்கட்சியான அதிமுகவோடு எந்தக் கட்சியெல்லாம் கூட்டணியில் இருக்கிறது என்று பார்ப்போம். அதாவது பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவோடு கூட்டணியில் இருக்கிறார்கள். இதில் பாமகவுக்கு தொகுதிப் பங்கீடு உறுதியாகிவிட்டது. அந்தக் கட்சிக்கு அதிமுக 23 சீட்டுகளை ஒதுக்கியுள்ளது. பாமகவும் அதை ஏற்றுக்கொண்டது. காரணம், வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு அளிக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என ராமதாஸ் ஏற்கெனவே சொல்லியிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10.5% உள் ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டு, பாமகவை கூட்டணியில் தக்கவைத்துக்கொண்டார்.

இது ஒருபுறமிருக்க, பாஜக தங்களுக்கு 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கேட்டு வருவதாகவும், குறைந்தது 35 தொகுதிகளாவது ஒதுக்கவேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் 21 தொகுதிகள் தர முடிவு செய்திப்பதாக தெரிகிறது. அமித் ஷா தமிழகம் வந்தபோதுகூட கூட்டணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்துடனும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து மட்டுமல்லாமல்; சசிகலா இணைப்பு குறித்தும் அமித் ஷா பேசியிருப்பதாக தகவல். அதில் ஓபிஎஸ் சம்மதித்தாகவும், இபிஎஸ் உடன்பாடு இல்லை எனவும் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அமித் ஷா ஒருமித்த கருத்து இல்லையே என்று அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து பாஜக தரப்பில் கேட்டபோது 'அது அவங்களோட உட்கட்சி விவகாரம்... அதுல நாங்க ஏன் கருத்து சொல்லணும்' என்கிற ரீதியில் கேட்கிறார்கள்.

அடுத்து தேமுதிக. அதிமுக மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிப்பதற்கு முன்பிருந்தே கூட்டணி பேச்சுவார்த்தைய தொடங்க வேண்டும் என்று அதிமுகவை தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா வலியுறுத்தி வந்தார். காரணம், பாமகவோடு அதிமுக மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், பிரேமலதா வலியுறுத்தலை அதிமுக கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த தேமுதிகவுக்கு 12 சீட்தான் என அதிமுக கூறியது, அடுத்த அதிருப்தியை ஏற்படுத்த, பேச்சுவார்த்தைக்கே செல்லாமல் அதிமுகவுக்கு ஆட்டம் காட்டி வருகிறது தேமுதிக. இன்றுகூட எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை.

த.மா.காவுடனான பேச்சுவார்த்தையும் இன்று நடைபெறுகிறது. அதிமுகவிடம் 12 தொகுதிகளை தமாகா கேட்டு வருகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 5 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் மனித நேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை.

திமுக-வும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் ஒதுக்கீடு பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மதிமுக மற்றும் வி.சி.க கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மதிமுக கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, திமுகவிடம் 30 தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால், திமுக தரப்பில் 21 இடங்கள் தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கங்களை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் என்ற முறையில் முடிவு செய்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

சிபிஎம் அவசர ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது என தெரிவித்துள்ளது. இன்றைக்குள் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com