மறுவிசாரணைக்கு தடைகோரிய மனு தள்ளுபடி – வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு: முழு அலசல்

மறுவிசாரணைக்கு தடைகோரிய மனு தள்ளுபடி – வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு: முழு அலசல்

மறுவிசாரணைக்கு தடைகோரிய மனு தள்ளுபடி – வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு: முழு அலசல்
Published on

கோடநாடு வழக்கில் மறுவிசாரணைக்கு தடைகோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

கோடநாடு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர், உச்சநீதிமன்றத்தில், ‘அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த வழக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு விட்டது. ஏற்கெனவே நான் இந்த வழக்கில் நிறைய தகவல் வழங்கிவிட்டேன். மேற்கொண்டு எனக்கு சொல்ல எதுவுமில்லை. தொடர்ந்து இந்த விஷயத்தில் விசாரணை நடத்தினால், அது நேர விரயத்தை மட்டுமே ஏற்படுத்தும். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்என்று கூறியிருந்தார்.

மேலும் இன்றைய தினம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை நடைபெறும் உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கான பழைய அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் வழக்கை விசாரித்து வரும் தனிப்படையினருடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தது. ஆலோசனைக்கு வந்திருந்தபோது தனது வாகனத்தில் வராமல், ஆய்வாளர் வாகனத்தில் ஐஜி வந்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் மனுதள்ளுபடி குறித்த அறிவிப்பும் உச்சநீதிமன்றம் சார்பில் வெளியானது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த கோடநாடு பங்களாவில், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி கொல்லப்பட்ட நிலையில், கொள்ளைச் சம்பவமும் நடந்தது. இந்த வழக்கை ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். அதில் ஏற்கெனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட கார்கள் குறித்து விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் சம்பவத்தன்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தப்பியதாக கூறப்படும் கார்களை மறித்த அதிகாரிகளிடமும் விசாரணை செய்யப்படுமென சொல்லப்பட்டுள்ளது. கூடலூரில் காவல் ஆய்வாளராக இருந்த மீனாகுமாரி, ஓய்வுபெற்ற போக்குவரத்து காவலரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இப்படியாக இவ்விவகாரம் கடந்த தினங்களில் பரபரப்புக்கு உள்ளாகிய வண்ணம் இருந்து வருகிறது. இதன் பின்னணி குறித்தும், இவ்வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம். அவர்கள் இதுபற்றி நம்மிடையே பகிர்ந்த தகவல்களின் தொகுப்பு இங்கே....

பத்திரிகையாளர் துரைகருணா கூறுகையில், “திமுக தேர்தல் அறிக்கையிலேயே, கோடநாடு விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் என தெளிவாக குறிப்பிட்டனர். இப்போதும்கூட பேரவையில் இதுபற்றி தெரிவிக்கையில், நீதிமன்ற உத்தரவுடனேயே இதை நடத்துகிறோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது, இவ்விவகாரத்தில் திமுகவின் இந்த தெளிவின் வெளிப்பாடாகவே இந்த உத்தரவை பார்க்க வேண்டியுள்ளது.

நீதிமன்றமும்கூட இந்த தீர்ப்பை வழங்கும் முன்னர், கீழமை நீதிமன்ற தீர்ப்பின் தன்மை, இவ்விசாரணையை தடைசெய்ய வேண்டுமென்று வாதிட்டவர்களின் மனு மற்றும் இவ்வழக்கில் கூடுதல் விசாரணை தேவை என வாதிட்டவர்களின் மனு என அனைவரின் நோக்கத்தையும் ஆராய்ந்திருக்கும். அனைத்தையும் பார்த்தபிறகும், நீதிமன்றத்துக்கு இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே தோன்றியுள்ளது. அதன்விளைவே, இந்த மனு தள்ளுபடி. இந்த விஷயத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களும் இதை நீதிமன்றத்தின் வழியே கொண்டு செல்வதே சரியாக இருக்கும்.

இப்போதைக்கு குற்றம்சாட்டப்பட்டு விசாரணையில் சாட்சி அளித்திருக்கும் ஒரு நபர்தான், உச்சநீதிமன்றத்தில் மேற்கட்ட விசாரணையை வேண்டாமெனக்கூறி முறையிட்டுள்ளார். அவர்கூறும் விஷயம், ‘கீழமை நீதிமன்றத்திலேயே நான் போதுமான சாட்சியை அளித்துவிட்டேன். அதனால் இன்னும் மேலும் மேலும் என்னை விசாரணை செய்யவேண்டிய அவசியமில்லை. இந்த விசாரணையே போதுமானதுஎன்கிறார். உச்சநீதிமன்றத்தை அதற்காகவே அவர் நாடியுள்ளார். அவர் இந்த மேல்முறையீட்டை தொடர வேறு ஏதும் முகாந்திரம் இருக்கிறதா என்றோ, அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்றோ நாம் கணிக்க முடியாது.

தற்போது மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து மேற்கொண்டு கோடநாடு மேலாளர், பொறியாளர், மின்வாரியத்தை சேர்ந்தவர்கள் ஆகியோரிடமும் விசாரணை செய்யப்படும். அதன்மூலம் ஆவணங்கள், தகவல்கள், சாட்சியங்கள் என்ன கிடைக்கும் என்பதை பொறுத்தே அடுத்தடுத்தகட்ட விசாரணைகள் யாவும் அமையும்.என்றார்.

தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பேசுகையில், “சட்ட விதிகளின்படி, ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலானாலும்கூட, இறுதிகட்டத்தில் காவல்துறைக்கு ஏதாவது புதிய தகவல் கிடைத்தால், அவர்கள் மறுவிசாரணை செய்து அதை கூடுதல் சார்ஜ் ஷீட் என்ற பெயரில் சமர்ப்பிக்க முடியும் என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள். அப்படியிருக்கும்போது, ‘நான் ஏற்கெனவே முழுமையாக சொல்லிவிட்டேன்எனக்கூறி அதை தடை செய்வது ஏற்புடையதாக இருக்காது. இந்த அடிப்படையில் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்யுமென நாங்கள் முன்பே கணித்திருந்தோம். ஆகவே புதிதாக இதில் எதுமில்லை.

கோடநாடு விவகாரத்தில், குறிப்பிட்ட இந்த வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் நாம் கவனம் செலுத்தவதைவிடவும், உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மற்றொரு வழக்கு விசாரணைக்கு கவனம் செலுத்துவதே சிறந்த முடிவாக இருக்குமென நான் நினைக்கிறேன். அந்த வழக்கில் சொல்லப்படுவது என்னவெனில், கோடநாடு சம்பவம் தொடர்பாக அந்த இடத்தின் உரிமையாளர் வி.கே.சசிகலாவிடமும், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்பது. இந்த வழக்கில் தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் இந்த மனுவை தொடர்ந்திருக்கிறார்கள். இதற்கு வரும் முடிவை பொறுத்துதான் வழக்கின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் அமையும். உதாரணத்துக்கு, சசிகலா கோடநாடு பங்களாவின் உரிமையாளர் என்ற முறையில் பார்க்கும்போது இவ்விவகாரத்தில் பங்களாவில் என்னென்ன பொருள்கள் கொள்ளை போனது, இதற்கு முன் என்ன இருந்தது என்பது பற்றியெல்லாம் அவர்தான் கூறமுடியும். அப்படி சொல்லும்போது புதிதாக தகவல் எதுவும் காவல்துறைக்கு தெரியவர வாய்ப்புள்ளது. தெரியவந்தால், வழக்கு மிகமுக்கிய மற்றொரு திருப்புமுனையை சந்திக்கும்என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com