விஜய், ஷங்கர் படங்கள் தயாரிப்பது ரிஸ்கா? - தயாரிப்பாளர் தில் ராஜுவை வட்டமிடும் பேச்சுகள்!
தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் அடுத்தடுத்து மிகப் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் அறிவிப்பை வெளியிட்டு இந்திய சினிமாவில் பேசப்படும் நபராக மாறி வருகிறார் தில் ராஜு. விஜய் முதல் ஷங்கர் வரை நீளும் இவர் தயாரிப்புப் பட்டியல் மலைக்கத்தக்கவை.
தில் ராஜு... இந்தப் பெயர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலம். பிரபல தயாரிப்பாளரான இவர் தனது ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலமாக தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட தெலுங்கின் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த ஒரே தயாரிப்பாளர் இவர்தான். தனது படங்களில் பொருட்செலவில் பிரமாண்டம் காட்டும் தில் ராஜு, சமீப காலமாக தெலுங்கை தாண்டி தனது எல்லையை விரிவுபடுத்தி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய இன்டஸ்ட்ரீகளாக இருக்கும் இந்தி மற்றும் தமிழ் சினிமா துறையில் கால்பதிக்க முற்பட்டு வருகிறார்.
'ஜெர்ஸி' படத்தின் ரீமேக் மூலம் இந்தி சினிமா துறையில் நுழைந்துள்ளவர், அடுத்தடுத்து அங்கு படங்களை தயாரிக்க முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். குறிப்பாக பான் - இந்தியா திரைப்படங்களை தயாரிக்கும் வேளையில் இறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் 'ராம் சரண் 15' படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தை தயாரிப்பவரும் தில் ராஜுதான். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. சுமார் ரூ.170 கோடி செலவில் தயாராகவுள்ள இப்படம், அனைத்து மொழிகளையும் கவரும் விதமாக பான் - இந்தியா படமாக தயாராக இருக்கிறது.
'கேஜிஎஃப்' புகழ் இயக்குநர் நீல் பிரசாந்த் பிரபாஸ் உடன் இணைந்திருக்கும் படம் 'சலார்'. இதன் படப்பிடிப்புகள் நடந்து வரும்வேளையில், இதே ஜோடி மீண்டும் ஒரு முறை இணையவிருக்கிறது. இரண்டாம் முறையாக நீல் பிரசாந்த் - பிரபாஸ் இணையும் படத்தை தயாரிக்க போவதும் தில் ராஜுதான்.
தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் நாயகன் எனப்படும் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கவிருக்கும் படம் 'ஐகான்'. மிகப்பெரிய பொருட்செலவில் பான்-இந்தியா படமாக தயாராக இருக்கும் இந்தப் படத்தையும் தில் ராஜூவே தயாரிக்கிறார்.
'மாஸ்டர்' வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் தயாரிப்பாளரும் தில் ராஜுதான்.
இந்தப் படங்கள் மட்டுமல்ல, ஹிந்தி நடிகர்கள் ஷாகித் கபூரில் இருந்து பல்வேறு நடிகர்களின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் திட்டத்தில் தில் ராஜு இருக்கிறார்.
இந்தப் படங்கள் அத்தனையும் ரூ.150 கோடி பட்ஜெட்டுக்கும் அதிகமானவை. அனைத்தும் பான் - இந்தியா திரைப்படங்கள் என்பதால் இந்திய அளவில் பேசப்படும் ஒரு தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். ஆனால், ராம்சரண் மற்றும் விஜய் படங்களை தயாரிப்பதை குறிப்பிட்டு சில தெலுங்கு ஊடகங்கள் ''தில் ராஜு இந்தப் படங்களை தயாரித்து தேவையில்லாத ரிஸ்க் எடுக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கான காரணங்களாக தெலுங்கு ஊடகங்கள் முன்வைத்துள்ளது, 'கடந்த சில ஆண்டுகளாக இந்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் வம்சி பைடிப்பள்ளி ஆகியோர் இயக்கிய கடைசி மூன்று படங்கள் வசூல் ரீதியாக போகவில்லை' எனக் கூறப்பட்டுள்ளது.
ஷங்கரின் கடைசி 3 திரைப்படங்கள், விஜய்யின் 'நண்பன்', விக்ரமின் 'ஐ' மற்றும் ரஜினிகாந்தின் '2.0'. இந்தப் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக பெரிதாக பேசப்பட்டவை. தமிழ் சினிமாவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தவை. அதேபோல் வம்சி பைடிப்பள்ளியின் முந்தைய திரைப்படங்களான 'மகரிஷி', 'ஊபிரி' மற்றும் 'எவடு' போன்றவையும் பல விருதுகளுடன் வசூலில் பெரிதாகவும் பேசப்பட்டன. அப்படி இருக்கையில் இதுபோன்ற தகவல்கள் தெலுங்கு சினிமா உலகில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு தில் ராஜு தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை.
- மலையரசு
தகவல் உறுதுணை: Gulte