'ஆப்' இன்றி அமையா உலகு 20: ‘டிஜி லாக்கர்’ -முக்கிய ஆவணங்களை பாதுகாக்க உதவும் அப்ளிகேஷன்

'ஆப்' இன்றி அமையா உலகு 20: ‘டிஜி லாக்கர்’ -முக்கிய ஆவணங்களை பாதுகாக்க உதவும் அப்ளிகேஷன்
'ஆப்' இன்றி அமையா உலகு 20: ‘டிஜி லாக்கர்’ -முக்கிய ஆவணங்களை பாதுகாக்க உதவும் அப்ளிகேஷன்

'ஆப்' இன்றி அமையா உலகு தொடரில் அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய கைபேசி செயலிகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த அத்தியாயத்தில் ‘டிஜி லாக்கர்’ அப்ளிகேஷன் குறித்து பார்க்கலாம். 

எப்படி நம் வீடு, வங்கி மாதிரியான இடங்களில் உள்ள லாக்கர்களில் முக்கிய ஆவணங்களை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளோமோ அதே போல இந்த டிஜி லாக்கர் செயலியில் முக்கிய ஆவணங்களை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும். என்ன இதில் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் இருக்கும். இன்றைய டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ற அப்ளிகேஷன் இது. 

டிஜி லாக்கர்!

இந்திய அரசாங்கம் கடந்த 2015-இல் இந்த அப்ளிகேஷனை மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. காகித பயன்பாடில்லாத அரசு என்ற ஐடியாவை டார்கெட் செய்து வெளியிடப்பட்ட அப்ளிகேஷன் இது. பல்வேறு அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் டிஜிட்டல் முறையில் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதற்கும், அதனை சரிபார்ப்பதற்குமான தளம் இது. அதன் மூலம் பயனர்கள் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள், அடையாள அட்டைகள் என அனைத்தையும் பதிவிறக்கம் செய்யவும், பாதுகாத்து வைக்கவும் முடியும். 

‘டிஜி லாக்கர்’ சிறப்பம்சங்கள்!

>மத்திய மற்றும் மாநில அரசுகளின் துறைகள், கல்வி நிலையங்கள், வங்கி மற்றும் காப்பீடு, சுகாதாரம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இதரவை என பல்வேறு துறைகளின் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இதில் பெறலாம். 

>உதாரணமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் சார்பில் டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்று (RC), வாகன இன்சூரன்ஸ், ஃபிட்னெஸ் சான்று மற்றும் வரி தொடர்பான ரசீது மாதிரியானவற்றை பெறலாம். PAN வெரிஃபிகேஷன் கார்டு, ஆதார் கார்டு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள், அடையாள அட்டைகளை டிஜிட்டல் வடிவில் பெறலாம். 

>டிஜி லாக்கரில் தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் சென்னை பெருநகர மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கிறது. தற்போது 2016 - 2019 வரையிலான பத்தாம் வகுப்பு சான்றிதழும், 2016 - 2018 வரையிலான பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழும் கிடைப்பதாக இந்த அப்ளிகேஷனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றையும் பெறலாம். 

>கடந்த ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை டிஜி லாக்கர் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

>டிஜி லாக்கர் தளத்தின் மூலம் மாணவர்கள் சமர்ப்பிக்கும் பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உட்பட அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் கல்வி நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்தது பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி). டிஜி லாக்கரின் NAD போர்டலில் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறும் யு.ஜி.சி தனது சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

>முக்கிய ஆவணங்களை டிஜி லாக்கர் பயனர்கள் தங்களது பயனர் கணக்கின் டிரைவில் சேமித்து வைத்துக்கொள்ளவும் முடியும். இதற்கு அப்லோட் ஆப்ஷனை தேர்வு செய்து தங்களிடம் உள்ள டிஜிட்டல் டாக்குமென்ட்களை பத்திரப்படுத்தி வைக்கலாம். 

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?

>இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த புதிதாக இணையும் பயனர்கள் ‘Sign-up’ ஆப்ஷனை தேர்வு செய்து, அதில் தங்கள் பெயரை பதிவிட வேண்டும். ஆதார் அட்டையில் இருப்பதுபோல பெயரை உள்ளிட வேண்டும் என சொல்லப்படுகிறது. பின்னர் பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் மற்றும் கடவுச்சொல் கொடுத்து பயனராக பதிவு செய்து கொள்ளலாம். அப்ளிகேஷன் மட்டுமல்லாது www.digilocker.gov.in என்ற தளத்தின் மூலமாகவும் பயனர்கள் பதிவு செய்து கொள்ளலாம். 

>பின்னர் மொபைல் எண் அல்லது ஆதார் எண் அல்லது பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து லாக்-இன் செய்து பயன்படுத்த தொடங்கலாம். 

>ஆதார் கார்டு இணைப்பதன் மூலம் அரசு சார்பில் வழக்கப்படுகின்ற அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை Issued டாகுமென்ட்ஸ் பிரிவில் அக்செஸ் செய்யலாம்.

>உதாரணமாக ஓட்டுனர் உரிமத்தை இதில் பெற அதன் எண்ணை உள்ளிட்டு, பின்னர் 'Get Document' ஆப்ஷனை க்ளிக் செய்தால் அதனை Issued டாகுமென்ட்ஸ் பிரிவில் பெறலாம்.

>தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் படி இந்த அப்ளிகேஷனில் உள்ள சான்றுகள் மற்றும் ஆவணங்கள் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுப்பட்டுள்ள Issued டாகுமென்ட்ஸ் அசல் ஆவணங்களுக்கு இணையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன்களில் டவுன்லோட் செய்துள்ளனர். ஆப்பிள் போன் பயன்பாட்டாளர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com