நான் தனி ஆள் இல்ல - 'தல' தோனி கேப்டனான கதை !

நான் தனி ஆள் இல்ல - 'தல' தோனி கேப்டனான கதை !

நான் தனி ஆள் இல்ல - 'தல' தோனி கேப்டனான கதை !
Published on

2007 ஆம் ஆண்டு தொடக்கம் அது. அப்போதுதான் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் சென்று மரண அடி வாங்கி லீக் சுற்றோடு வெளியேறி நாடு திரும்பியது. அப்போதைய இந்திய அணியிலும் மகேந்திர சிங் தோனியும் இருந்தார். ஒட்டுமொத்த டீமும் சொதப்பிக் கொண்டிருந்த போது, அவராலும் அந்தத் தொடரில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் சச்சின், சேவாக், கங்குலி என ஜாம்பவான்கள் அந்த அணியில் நிறைந்து இருந்தனர்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் பெரும் கோவத்துடன் இருந்த காலக்கட்டம் அது. அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சாப்பல்தான், இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் கைகழுவியது. இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இன்னொரு சிக்கல் முளைத்தது. ஐசிசி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைரபெறவுள்ளதாக அறிவித்தது. அப்போது இந்திய டி20 அணியை சச்சின் தலைமையில் அனுப்பு தீர்மானிக்கப்பட்டு, சச்சினிடம் கேட்டது.

சச்சின் அதற்கு "டி20 போட்டிகள் இளைஞர்களுக்கானது, தேசிய அணியை இளைஞரின் தலைமையில் கீழ் அனுப்புங்கள்" என கூறி மறுத்துவிட்டார். அந்நேரத்தில் இந்திய அணிக்கு தோனி புதியவர். எனினும், தனது அதிரடி ஆட்டம் மூலம் ஏற்கெனவே தனி கவனம் பெற்றிருந்தார். இந்நிலையில், டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானது என்று கூறி போட்டியிலிருந்து விலகிய சச்சின், அணித் தலைமை பிரச்னையில் பிசிசிஐ குழம்பியபோது தோனியை கைகாட்டினார்.

இதனையடுத்து தோனி தலைமையிலான இளம் அணியை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியது பிசிசிஐ. அப்போதுதான் தோனி தான் விளையாடுவதில் மட்டுமல்ல தலைமையிலும் கில்லி என நிரூபித்து. முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வாங்கிக் கொடுத்தார். இதன் பின்பு டெஸ்ட் போட்டிகளுக்கு அனில் கும்புளே கேப்டனாகவும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தோனி கேப்டனாக செயல்பட்டார். அப்போது இந்தியா - ஆஸி - இலங்கை இடையிலான நடைபெற்ற விபி சீரிஸையும் வென்றார். இந்தத் தொடர் நடந்தது ஆஸ்திரேலியாவில்.

பின்பு, ஆஸி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி தோற்றது. அந்தத் தொடருக்கு கேப்டனாக இருந்த கும்புளே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனானார் தோனி. 2007-ஆம் ஆண்டு தொடங்கி ஏறக்குறைய 9 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த தோனி அதிலும் தனித்தன்மை கொண்டவராக இருந்தார்.

மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக விளங்கினார் என்றால் மிகையில்லை. கபில் தேவ், அஸாருதீன், செளரவ் கங்குலி ஆகியோருடன் ஒப்பிட்டால் தோனியே சிறந்த கேப்டனாக இருந்தார். ஐசிசி நடத்திய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்த பெருமை தோனியின் தலைமைக்கு மட்டுமே சேரும். 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என தோனி தொட்டதெல்லாம் பொன்னான காலம் இந்திய அணியின் பொற்காலம்.

தோனி கேப்டனாக பொறுப்பேற்ற சில ஆண்டுகளிலேயே தனக்கென விதிமுறைகளை வகுத்துக்கொண்டார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அணியில் இருந்து தூக்கப்படுவர். அதில் தயவுதாட்சன்யம் காட்டவே இல்லை. அவருக்கு பதில் வேறு வீரர், அவரும் இல்லையென்றால் மற்றொருவர் என தோனி சென்றுகொண்டிருந்தார். அதன் பலனாகத்தான் அஸ்வின், கோலி, ரோகித், ரஹானே, பூம்ரா, சமி போன்ற வீரர்கள் கிடைத்தார்கள்.

தோனியின் தலைமையிலான இந்திய அணி 2015 உலகக் கோப்பை வரை வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அதன்பிறகு பெரிய அளவில் சோபிக்கவில்லை. 2016-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில், சொந்த மண்ணிலேயே மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. கேப்டன் தோனி முன்புபோல வேகமான முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார், அவரால் துடிப்பாக செயல்பட முடியவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை தோனியே கேப்டனாக தொடருவார் என பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், திடீரென கேப்டன் பதவியை துறந்தார் தோனி. எப்போது என்ன முடிவு எடுப்பார் என தெரியாது ! அதுதான் தோனி !
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com