கொரோனா போரில் திருப்பு முனையா டெக்ஸாமெதாசோன் மருந்து - நிபுணர்கள் கருத்து என்ன?
உலகம் முழுவதும் பல நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க பல்வேறு முயற்சிகள் மருத்துவ ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை நேரடியான மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ கண்டுப்பிடிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு டெக்ஸாமெத்தசோன் என்ற மருந்தை பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது. முன்னதாக இந்தியாவில் மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்து கொரோனா சிகிச்சையில் நல்ல பலனை அளிப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுவின் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதியும் செய்தது.
ஆனாலும், ஹைட்ராக்சிகுளோரோகுவின் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தீர்வாக அமையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனால் நோயை குணப்படுத்தும் விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த மருந்தை அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவும் கொரோனா சிகிச்சை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த ஆய்வில் டெக்ஸாமெத்தசோன் என்ற மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்தபோது நல்ல பலன் கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இந்த மருந்து கொடுத்த போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெறும் மூன்றில் ஒருவர் உயிர் பிழைத்தாகவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து டெக்ஸாமெத்தசோன் மருந்தை உடனடியாக கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இதை இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாமா என்ற கேள்வியை மருத்துவர் சுமந்த் சி ராமனிடம் முன்வைத்தோம். அதற்கு அவர் "தாராளமாக டெக்ஸாமெத்தசோன் மருந்தை பயன்படுத்தலாம். கடந்த 30 வருடமாக இந்த மருந்து பயன்பாட்டில்தான் இருக்கிறது. இதன் விலை ரூ.10 இருக்கலாம். இது ஸ்டெராய்ட் ஊசிதான்.
கொரோனா வைரஸ் தொடக்கத்தில் இருந்தபோதே இந்த DEXAMETHASONE மருந்தினை பயன்படுத்தி இருந்தால், 5ஆயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், மருத்துவமனையில் இருந்த சுமார் 2 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை கொடுத்து பரிசோதித்துள்ளனர். அதாவது இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளாத 4 ஆயிரம் நோயாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். இறப்பு விகிதத்தை குறைத்து காட்டிய முதல் மருந்து இதுதான் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போது இங்கிலாந்து டெக்ஸாமெத்தசோன் மருந்தினை ஆராய்ச்சி ரீதியாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இம்மருந்து கொரோனா பாதித்தவர்களுக்கு எத்தகைய பலனை தரும் என்பது பயன்படுத்தியப் பின்னரே தெரிய வரும். கொரோனா பாதிப்பில் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கு டெக்ஸாமெத்தசோன் மருந்தை பயன்படுத்தலாம்" என கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலையைச் சேர்ந்த மருத்துவர் சஃபி, “டெக்ஸாமெதாசோன் புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை. பல நோய்களுக்கு மருந்தாக டெக்ஸாமெதாசோன் பயன்பட்டு வருகிறது. டெக்ஸாமெதாசோன் முற்றிலும் கொரோனாவை அழிக்கும் என நிரூபிக்கவில்லை. மருத்துவரின் பரிந்துரையின்றி டெக்ஸாமெதாசோனை உட்கொள்வது ஆபத்து” என்று கூறியுள்ளார்.