கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?

கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் ஹரித்வார் நகரில் நடைபெற்றுவரும் கும்பமேளா காரணமாக வைரஸ் அதிவேகமாக பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பிற மாநிலங்களில் வேறு பல கட்டுப்பாடுகள் என்று விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று கங்கை நதியிலே பல லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடியிருப்பது கவலையை உண்டாக்கியுள்ளது.

கொரோனா பரவல் அதிதீவிரமாக இருப்பதால், ஹரித்வார் நகரம் முழுவதும் முகக்கவசங்களை அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்ற கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முழுவீச்சாக அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று கண்டறியும் பரிசோதனைகளை அதிக அளவில் நடத்தவும், தொற்று இருக்கிறது என்று தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபருடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கங்கை நதியின் கரையில் உள்ள பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கானோர் புனித நீராடல் நடத்துவதால், அந்தப் பகுதி முழுவதையும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் கொண்டு மாநில அரசு கண்காணித்து வருகிறது. அத்துடன் பொதுமக்கள் புனித நீராட தனி நேரம் மற்றும் சாதுக்கள் புனிதநீராட தனி நேரம் என்று தனித்தனியே நேர ஒதுக்கீடு செய்யவும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

பொதுவாக மூன்று மாதங்கள் வரை நடைபெறும் கும்பமேளா இந்த முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு மாதத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் கும்பமேளாவுக்கு மாநில அரசு அனுமதி அளித்திருந்தாலும், சென்ற மாதமே சிவராத்திரி நாளன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் புனித நீராடி தங்களுடைய விழா கொண்டாட்டத்தை தொடங்கியிருந்தார்கள்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களிலேயே கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக இருக்கும் சூழ்நிலையில், இன்று அமாவாசையை முன்னிட்டு புனித நீராடல் பெரிய அளவிலேயே நடைபெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களிலும் அதிக எண்ணிக்கையில் புனித நீராடல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக ஏப்ரல் 21ஆம் தேதியன்று ராமநவமி என்பதால் அன்றும் அதிக அளவில் பக்தர்கள் கங்கைக்கரையில் நீராட வருவார்கள் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.

இப்படி கொரோனா அச்சத்தையும் மீறி, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடி வருவதால், புனித நீராடலுக்குக்காக மக்களுக்கு 15 இடங்களில் நதிக்கரையில் ஏற்பாடுகளை செய்து பக்தர்களை பரவலாக இந்த இடங்களுக்கு அனுப்ப மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.

பொதுவாக ஹரி கி பவுரி, சீதா காட், தட்சினேஸ்வர் காட், கணேஷ் காட், மற்றும் சுபாஷ் காட் கரையோரப் பகுதிகளில் அதிகமாக மக்கள் குழுமுவார்கள். இந்நிலையில்தான் 15 இடங்களில் புனித நீராடலுக்கு ஏற்பாடுகளை செய்து நெரிசலைக் குறைக்க மாநில அரசு முயற்சி செய்துள்ளது.

கும்பமேளா சமயத்திலே மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் ஏற்கெனவே மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படியே தொற்று சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 400 பேருக்கு தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளிலும் தீவிரமாக கொரோனா சோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு, அதிக சிக்கலின்றி கும்பமேளா நடந்து முடிய வேண்டும் என மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் ஹரித்துவாரை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com