“ரேஷன் இருக்கு ஆனா இல்லை”

“ரேஷன் இருக்கு ஆனா இல்லை”

“ரேஷன் இருக்கு ஆனா இல்லை”
Published on

நியாய விலைக் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்திய கசப்பு தீர்வதற்குள், உளுந்தம்பருப்பு இனி இல்லை என்ற அறிவிப்பை சொல்லாமல் சொல்லியிருக்கிறது தமிழக அரசு.

ரேஷன் கார்டு ஒன்றிற்கு ஒரு கிலோ பருப்பு என உறுதி செய்யப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவிக்கிறார். அதில் உளுந்தம்பருப்பு இருக்கிறதா என்ற கேட்டால் மழுப்பலான பதிலை தந்து பருப்படை சுடுகிறார். ஆக, நேரடியாக உளுந்தம்பருப்பு இனி இல்லை என சொல்லாமல் “இருக்கு ஆனா இல்லை” என்ற பாணியில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

சர்க்கரை விலையை கூட்டியாயிற்று, உளுந்தும் இல்லை என்று சொல்லியாயிற்று அடுத்து அரிசி, பாமாயில், கோதுமை போன்றவைகளின் அளவும் குறைக்கப்படலாம் அல்லது முற்றாக நிறுத்தப்படலாம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

‘தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் 2013’-ஐ அமல்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகள் 2017 என்பதை வகுத்த தமிழக அரசு, இதன்படி செயல்படத் தொடங்கி தன்னை கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாக மாற்றிக்கொள்ள முற்பட்டுக்கொண்டிருக்கிறது. முழு சந்திரமுகியாக மாறும் அன்று ரேஷன் கடைகளே தமிழகத்தில் இருக்காது. மதுவில்லா தமிழகம் என்ற முழக்கத்திற்கு மாற்றாக நியாய விலைக் கடைகள் இல்லா தமிழகம் என்ற இலக்கை எட்டி பிடிப்பதற்காக வேலைகளை தமிழக அரசு தொடங்கிவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தினாலோ, குளிர்சாதன பெட்டி வைத்திருந்தாலோ ரேஷன் பொருட்கள் இனி கட்… என சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானதை மறுத்த உணவுத்துறை அமைச்சர் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் இதுபோன்ற விதிகள் இருந்தாலும் தமிழகத்தில் இவை அமல்படுத்தப்படாது, வழக்கம்போல அனைவருக்கும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்திருந்தார். சில நாட்களிலேயே அந்த உறுதியை ஊறுகாய்போட்டு தொக்காக இப்போது உளுந்தம்பருப்பை நிறுத்தியிருக்கிறார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் சரி, நரேந்திரமோடி பிரதமர் பொறுப்பேற்றபோதும் சரி முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்து, அதில் உள்ள சிரமங்களை சுட்டிக்காட்டி கடிதங்களை மத்திய அரசிற்கு எழுதியிருந்தார். ஆனால் அவர் நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே அவர் பெயரை தாங்கி ஆட்சி செய்கிறோம் என்று கூறிய தமிழக அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டது. அதன் விளைவு இன்று அத்திட்டத்தின் விதிகளை தமிழகத்தில் மெல்ல மெல்ல அமல்படுத்த தொடங்கியிருக்கிறது.

போதிய வாழ்வாதாரம் இன்றி ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை நம்பியே பல லட்சம் குடும்பங்கள் தமிழகத்தில் வாழ்ந்துவரும்போது, பொருட்களின் அளவை குறைப்பதும், விலையை கூட்டுவதும், முற்றாக நிறுத்துவதும் அவர்களை நிச்சயம் அவதிக்குள்ளாக்குமே தவிர அகமகிழ்ச்சியுறவைக்காது என்பதை ஏன் இவர்கள் உணர மறுக்கிறார்கள்?

நியாயமற்ற விலையில் பொருட்கள் வெளியில் விற்கப்படுவதால் அதனை வாங்குவதற்கு ஏழைகள் சிரமப்படுவார்கள் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட நியாவிலைக் கடைகளே நியாயமின்றி செயல்படுவது நியாயமா?

அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும்போது கூட, பதுக்கல்காரர்களால் பல நேரங்களில் பொருட்கள் இருப்பில்லை என்ற போர்ட்டைதான் நியாயவிலைக் கடைகள் தாங்கி நின்றிருந்திருக்கின்றன. இனி இவை தாங்கி நிற்க ஏதுவுமே அங்கு இருக்கப்போவதில்லை என்ற நிலையை உருவாக்கி விடாமல், வழக்கம்போல பொருட்களை தட்டுபாடின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன் பொருட்களை வாங்க வெயில், மழை என்று பாராது வரிசையில் நிற்கும் ஜனங்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்…  செல்வ செழிப்பில் இருப்பவர்களா இவர்கள்? வளம்கொழிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களா அவர்கள்? இல்லையே, சரியான வாழ்வாதாரம் கூட இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள்தானே. இவர்களின் உணவுக்கும் உயிருக்கும் உத்தரவாதம் அளித்துக் கொண்டிருப்பது இது போன்ற ரேஷன் கடைகளும் அதில் வழங்கப்படும் பொருட்களும்தானே. இவற்றை குறைத்தால், விலையேற்றினால், இல்லை என்று சொன்னால் என்ன செய்வார்கள்? என்ன செய்ய முடியும் இவர்களால் அடுத்த தேர்தல் வந்தால் வாக்களிக்கலாம் அவ்வளவுதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com