தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுகிறார்களா? - சர்ச்சைகளும் விளக்கமும்! - ஓர் தொகுப்பு

தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுகிறார்களா? - சர்ச்சைகளும் விளக்கமும்! - ஓர் தொகுப்பு
தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுகிறார்களா? - சர்ச்சைகளும் விளக்கமும்! - ஓர் தொகுப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வெளியாகிவரும் செய்திகள் மற்றும் வீடியோக்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் வெறும் வதந்தி என தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் விளக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அச்சத்தால் வட மாநிலத்தவர் பலரும் தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் பல்வேறு தொழில்களை செய்துவரும் நிலையில் தற்போது திடீரென இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது சர்ச்சையாகி வருகிறது. இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு...

ரயிலில் இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்களை ஒரு தனிநபர் மோசமாக பேசி, தாக்கிய வீடியோ ஒன்று இணையங்களில் பரவி வைரலானது. புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலையின்றி திண்டாடி வருவதாக அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வைரலாகிய சில நாட்களில் ரயில்வே போலீஸ் அந்த நபர் விழுப்புரத்தைச் சேர்ந்த மகிமைதாஸ்(38) என கண்டறிந்து அவரை கைதுசெய்தது.

வைரலான வீடியோக்கள்

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. முகமது தன்விர் என்ற ப்ளூ டிக் ட்விட்டர்வாசி ஒருவர் 3 வன்முறை வீடியோக்களை பகிர்ந்து, “தமிழகத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுகின்றனர். இந்திபேசுபவரக்ள் தாக்கப்படும்போதிலும் பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் மௌனமாக இருக்கின்றன. இதற்குமுன்பு இந்தியாவில் இந்தி பேசுபவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையானது இதுபோல் நடந்ததில்லை. கத்திகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என இந்தியில் எழுதியிருந்தார்.

இதனையடுத்து, சஞ்சீவ் குமார் என்ற பீகார் தொழிலாளர், இரவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டதாக பரவிய வதந்தியால் திருப்பூர் ரயில்வே காவல்நிலையம் முன்பாக வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

வதந்திகளும், காவல்துறை விளக்கமும்

இதுபோன்ற தகவல்களால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதி கடந்த சில நாட்களாக வட மாநிலத்தவர்கள் அவரவர் ஊர்களுக்கு படையெடுத்தனர். இந்நிலையில் வட மாநிலத்தவர்மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகள் வதந்தி என அரசு சார்பிலும், வடமாநில தொழிலாளர்கள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை, இங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும், இந்த வீடியோக்கள் போலியானவை என தமிழக காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பின்னலாடை நிறுவனங்களில், அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மை அல்ல என்றும், திருப்பூர் மாவட்டத்தில் அப்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்றும், மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக்குத்தான் செல்கிறார்களா?

இதேபோல், கோவை மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் பாதுகாப்புடன் வேலை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டார். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்திற்கு செல்ல ஏராளமான தொழிலாளர்கள் குவிந்தனர். ஹோலி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உதவி எண் அறிவித்த டிஜிபி சைலேந்திரபாபு

இதனையடுத்து, வெளிமாநில தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் உதவி அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம் என தமிழக டி. ஜி.பி சைலேந்திரபாபு வீடியோ மூலம் கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது வெளிமாநில தொழிலாளர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் கணேசன் விளக்கம்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. மேம்பால கட்டுமானம், மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் மற்ற மாநில தொழிலாளர்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக அமைச்சர் கணேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பீகார் ஏடிஜிபி பேட்டி

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பீகார் ஏடிஜிபி தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக தமிழக காவல்துறையை தொடர்பு கொண்டு வருவதாக கூறியிருக்கிறார். சமூக ஊடகங்களில் பலவித செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு காவல்துறையை தொடர்பு கொண்டு பேசினோம். எங்கள் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை என்று தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாங்கள் தொடர்ந்து தமிழக காவல்துறையினருடன் தொடர்பில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

காவல்நிலையம் முற்றுகையும் ஆணையர் ஆய்வும்

திருப்பூரில் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பலர் சொந்த ஊருக்கு செல்ல துவங்கி உள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சந்தேகமடைந்த வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் காண்பித்த பின்னர் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் திரும்பி சென்றனர்.

மேலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ரயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆணையர் பிரவீன் குமார் ஆய்வு செய்தார்.

தமிழகத்துக்கு வரும் பீகார் குழு

தமிழகத்தில் பீகார் மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் வெளியான நிலையில் பீகார் சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆளும் அரசுக்கு எதிராக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதில் , சிஐடி பிரிவில் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணன், தொழிலாளர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஆலோக் குமார் உள்ளிட்டோர் இன்று மாலை தமிழகம வருவார்கள் என பிகார் முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பீகார் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், தமிழகத்தில் வேலை செய்யும் பீகார் மக்களை இக்குழு சந்தித்து தமிழகத்தின் பாதுகாப்பு சூழல் குறித்து கருத்து கேட்கப்படும் எனவும் அக்கருத்துக்கள் அறிக்கைகளாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதனை அரசு வெளியிடும் என பீகார் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே 2 நாள் தமிழக ஆய்வுக்கு பிறகு அமைச்சர்களைக் கொண்ட தமிழக அரசு குழுவுடன் பீகார் மாநில குழு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com