பணமதிப்பு நீக்கம்: கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்டார்?

பணமதிப்பு நீக்கம்: கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்டார்?

பணமதிப்பு நீக்கம்: கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்டார்?
Published on

பணமதிப்பு நீக்கத்துக்கு துவக்க காலத்தில் ஆதரவு கொடுத்து வந்தவர்களில் பலர் பின்வந்த நாட்களில் பின்வாங்கிவிட்டார்கள். பணமதிப்பு நீக்க ஆதரவாளராக இருந்த நடிகர் கமல் சிலவாரங்கள் முன்பு ஒரு வாரப்பத்திரிகையில் அதற்காக பகிரங்க மன்னிப்பே கேட்டார், அதில் 
‘பணமதிப்பு நீக்கத்தினால் கறுப்புப் பணம் ஒழியும் என்றால், அதனையும் அதனால் வரும் இடைஞ்சல்களையும் ஏற்கத்தான் வேண்டும் என முதலில் எண்ணினேன். பின்னர் பணமதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது ஆனால் நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். தற்போது ‘யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்திற்கு பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க கடமைப்பட்டு இருக்கிறேன்’ - .என்று நடிகர் கமல் கூறியுள்ள வரிகள் மிக முக்கியமானவை. நாம் இன்னும் விரிவாக அலச வேண்டியவை.

பணமதிப்பு நீக்கத்தின் போது அதற்குச் சொல்லப்பட்ட இரண்டு பிரதான காரணங்கள் கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ளப்பண ஒழிப்பு. பணமதிப்பு நீக்கத்தினால் இந்த இரண்டுமே நிறைவேறவில்லை என்பதையும் தாண்டி, இவற்றை பணமதிப்பு நீக்கத்துக்குக் காரணங்களாகக் கூறியதே பொருத்தமற்றது என்பதுதான் பிரதான சிக்கல்.

ஏனெனில் கறுப்புப் பணம் அப்படியே  பணமாகவே இருக்கும் என்ற கருத்து முதலில் தவறானது. அது டாலருக்கு மாறி இருக்கலாம், சுவிஸ் பிராங்குகளாக இருக்கலாம். தவிர உள்நாட்டில் சொத்துகளாக, பங்குப் பத்திரங்களாக, நகைகளாக - எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்கு முன்பு பணமதிப்பு நீக்கமே வராத நாடுகள் அல்லது போதிய பொருளாதார புரிதல் இல்லாத நாடுகளில்தான் கறுப்புப் பணம் பணமாகவே பிடிபடும், இந்தியா அப்படி அல்ல. இதனால் புதிய பணம் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்ற எதிர்பார்பே முதலில் தவறானது.

இன்னொரு பக்கம் இந்திய அரசு உண்மையாகவே கறுப்புப் பண ஒழிப்பில் ஆர்வம் காட்டியதா? – என்பது மிகப்பெரிய கேள்வி. பணமதிப்பு நீக்கம் வந்த பின்னர் 2017 ஜனவரியில் இந்தியா வந்த பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் இது குறித்து மத்திய அரசிடம் எழுப்பிய சில கேள்விகள் மிக நியாயமானவை.

“ஆட்சியில் இருக்கும் பாஜக ’நான் ஊழலின் விரோதி’ என்று பெருமை கொள்கிறது என்றால் முதலில் தங்கள் கட்சிப்பணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே?. 

உண்மையில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் லோக்பால் சட்டம், ஊழல் தகவல் அளிப்போர் பாதுகாப்பு சட்டம், குறைதீர்ப்பு மசோதா ஆகியவற்றை அரசு மீட்க வேண்டும்” - என்றார் ட்ரீஸ்.

கறுப்புப் பணம் ஊழலால் உருவாகிறது என்றால், அந்த ஊழலைக் கட்டுப்படுத்திய பின்னர்தான் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும். ’நோய்நாடி நோய் முதல் நாடி’ என்று வள்ளுவர் கூறுவது அதனைத்தான். ஆனால் அரசு அதைச் செய்யவேயில்லை.

நாட்டில் உள்ள 1% மக்கள்தான் 90% கறுப்புப் பணத்துக்குக் காரணமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எவரும் பணமதிப்பு நீக்கத்தின் போது வங்கிகளின் வாசலில் நிற்கவில்லை. ஆனால் அவர்களும் பழைய பணத்தை மாற்றிவிட்டார்கள் என்றால், வங்கிகள் அவர்களில் வாசல்களின் நின்றன என்பதே அதற்கு அர்த்தம். இது பணமதிப்பு நீக்கத்தின் மிகப்பெரிய ஓட்டைகளில் ஒன்று. இதுவும் அறிவிப்புக்கு முன்னரே அடைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இந்திய பொதுத்துறை வங்கிகளில் 2015 டிசம்பர் வரையிலான காலகட்டங்களில் வசூலாகாமல் இருந்த முதல் 50 வாராக்கடன்களின் மதிப்பு 1.21 லட்சம் கோடி என 2016ஆம் ஆண்டு மே மாதத்தில்  மாநிலங்களவையில் மத்திய அரசு ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தது. 

தவிர வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும், திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 5,554-ல் இருந்து 7,686-ஆக அதிகரித்துள்ளது என்றும், இவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய தொகை ரூ.27,749 கோடியில் இருந்து 66,190 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்றும் மத்திய அரசு கூறியது. 
வரிகட்டாத பணமெல்லாம் கறுப்புப் பணம் என்றால் இவையும் கறுப்புப் பணம்தான். இவர்களிடம் மட்டும் பணத்தை வசூலித்து இருந்தாலேயே இந்தியப் பொருளாதாரம் நிமிர்ந்து இருக்கும், ஆனால் அதற்கான திறனோ துணிவோ மத்திய அரசுக்கு இல்லை.

பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர், மக்களின் உழைப்பும், வாழ்வும் பெருமளவில் பாழான பிறகு 99% பணம் வங்கிக்குத் திரும்பியது. இதன் அர்த்தம் அதன் நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்பட்ட ‘கறுப்புப் பண ஒழிப்பு’ படுதோல்வி என்பதைத் தவிர ஒன்றுமல்ல. ஆனால் இந்தத் தோல்வியின் பலனை அரசுக்கு பதிலாக மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வாட்ஸாப்பில் எனக்கு வந்த ஒரு கதை பணமதிப்பு நீக்கம் என்ன செய்தது என்பதை எளிமையாக விளக்கியது. அந்தக் கதை இதுதான்,

‘ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு கோடி மீன்கள் இருந்தன. ஒரு முதலையும் இருந்தது. குளத்தின் உரிமையாளர் அச்சுறுத்தும் முதலையைக் கொல்ல விரும்பினார். அதனால் குளத்தின் நீரை எல்லாம் இறைத்து அதனை வற்றிப் போகும்படிச் செய்தார். அந்தக் குளம் வற்றிய பின்னர்தான் அவர் கண்டு கொண்டார், மீன்கள்தான் நீர் இல்லை என்றால் சாகும், முதலை தரையிலும் தப்பித்துப்போய் வாழும்’.

அடுத்து கள்ளப் பணத்தின் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம் ரிசர்வ் வங்கியின் கணிப்பின் படியே பணமதிப்பு நீக்கத்திற்கு முன்னர் இந்தியாவில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளப்பணம்தான் இருந்தது. ஏற்கனவே 2015க்கு முந்தைய நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றதால் இது இன்னும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரிசர்வ் வங்கி மதிப்பீட்டை அப்படியே எடுத்துக் கொண்டாலும் கருப்புப் பணமான 400 கோடி என்பது மொத்தமாக பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட 17 லட்சம் கோடியில் 0.0235%தான், அதற்காகப் பண மதிப்பு நீக்கம் செய்தது சுண்டெலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்தியதைப் போன்றதுதான்.

சரி, கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு ஆகியவை உயர்ந்த லட்சியங்கள் அவற்றை அடைவதற்காக பணமதிப்பு நீக்கத்தின் அதன் ஆழம் தெரியாமல், பாதிப்புகள் தெரியாமல் அரசு அவற்றை நிறைவேற்றிவிட்டது, அனைவருக்கும்தனே இதனால் பாதிப்பு - என்று யாராவது சொன்னால் அதுவும் ஏற்புடையது அல்ல. இதில் அனைவரும் பாதிக்கப்படவில்லை. டாடாவும் அம்பானியும் பணமதிப்பு நீக்கத்தை வரவேற்கவே செய்தார்கள், இப்போதும் அவர்களின் கருத்துகளில் மாற்றமில்லை. அவர்களைப் போலவே நாட்டின் முதல்நிலைப் பணக்காரர்களில் யாரும் பாதிக்கப்படவில்லை, அவர்களின் நிறுவன ஊழியர்களுக்கும்கூட அதிக பாதிப்புகள் இல்லை. பெருநிறுவனங்கள் பணமதிப்பு நீக்கத்தை எந்த அதிர்ச்சியும் இல்லாமல் எதிர் கொண்டன. 

இவர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், வரி ஏய்ப்புக்குப் பேர் போன நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் எல்லோரும் பணமதிப்பு நீக்கத்தை எந்த பெரிய சலனமும் இல்லாமல் லாவகமாகக் கையாண்டார்கள். அவர்களின் பதுங்குக் குழிகள் எப்போதோ தயாராக இருந்தன என்பதையே இவையெல்லாம் காட்டின.

இன்னொரு பக்கம் பணமதிப்பு நீக்கத்தின் பின்னான நாட்களில் புதிய நோட்டுகள் கட்டுக்கட்டாக பிடிபட்டபோது, வங்கி ஊழியர்களுக்கே இதெல்லாம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. சில வங்கி ஊழியர் அமைப்புகள் ‘பணம் வங்கிகளுக்கு வரும் முன்பே, அச்சகத்தில் இருந்து நேரடியாகப் பலருக்குச் சென்றிருக்கலாம்’ என்று வெளிப்படையாகவே புகார் கூறினார்கள். 

மேலும் ‘ எப்போதிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன, அவை எங்கு சென்றன, பெற்றுக்கொண்டதற்கான ரசீது வந்ததா என்ற தகவல்களை நாள் வாரியாகத் தெரிவிக்க வேண்டும்’ என வங்கி அதிகாரிகள் சங்கம் கேட்டது. ஆனால் அதற்கு ரிசர்வ் வங்கி பதில் கூறவில்லை.

தமிழகத்தில் 2016, டிசம்பர் 21 அன்று கைதான அரசு ஒப்பந்ததாரரும், அரசியல் வட்டாரத்தில் பெரிய தொடர்புகள் உள்ளவருமான சேகர் ரெட்டி என்பவரிடமிருந்து 178 கிலோ தங்கத்தையும், 170 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தையும் வருமான வரித்துறை கைப்பற்றியது. இதில் 33.6 கோடி மதிப்புடையவை புதிய 2000 ரூபாய் பணத்தாள்கள். கட்டாயம் இவற்றை சட்டவிரோதமாக மட்டுமே மாற்றி இருக்க முடியும்.  ஆனால் அந்தப் பணத்தாள்களை யார் மாற்றிக் கொடுத்தார்கள் என்பதையோ, அவை எங்கே அச்சடிக்கப்பட்டவை என்பதையோ சி.பி.ஐ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை. சி.பி.ஐ.யின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கொடுக்க ரிசர்வ் வங்கியாலும் முடியவில்லை. பணமதிப்பு நீக்கம் எப்படித் தோல்வி அடைந்தது என்பதற்கான பல்வேறு அடையாளங்களில் ஒன்று சேகர் ரெட்டி.

மொத்தத்தில் கறுப்புப் பணத்தின் பெயராலும், கள்ளப் பணத்தின் பெயராலும் இந்தியா சிதைக்கப்பட்ட ஒரு நிகழ்வாக பணமதிப்பு நீக்கம் இருந்தது. கொசுக்கடிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைதான் அது. இனியும் ’பணமதிப்பு நீக்கம் வெற்றி’ – என்று அரசு சொல்லுமானால் அவர்களின் வேறு சில திட்டங்கள் இதனால் வெற்றி பெற்றன என்றே நாம் புரிந்துகொள்ள முடியும். 

’கண்ணாடியத் திருப்புனா ஆட்டோ எப்படி ஸ்டார்ட் ஆகும் ஜீவா?’ என்று அஜித்திடம் கருணாஸ் ஒரு படத்தில் கேட்பார். அதைத்தான் இப்போது மக்கள் மோடியிடம் கேட்கிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com