"நெருங்கும் 3-வது அலை: தடுப்பூசி போடாதவர்கள் கவனத்துக்கு..." - எச்சரிக்கும் மருத்துவர்

"நெருங்கும் 3-வது அலை: தடுப்பூசி போடாதவர்கள் கவனத்துக்கு..." - எச்சரிக்கும் மருத்துவர்
"நெருங்கும் 3-வது அலை: தடுப்பூசி போடாதவர்கள் கவனத்துக்கு..." - எச்சரிக்கும் மருத்துவர்
'கொரோனா தடுப்பூசி போடாத மக்களிடையே டெல்டா ப்ளஸ் வைரஸ் வேகமாக பரவி சமூகப் பரவலை ஏற்படுத்தக்கூடும். அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே டெல்டா பரவலை கட்டுப்படுத்த முடியும்' என எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. எனில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு டெல்டா ப்ளஸ் வைரசால் ஆபத்தா என்பது குறித்து தெளிவுபடுத்துகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
‘’மூன்றாவது அலை டெல்டா ப்ளஸ் வைரசால் மட்டுமே ஏற்படும் என்றில்லை. இந்த இடைப்பட்டக் காலத்தில் உருமாற்றம் அடைந்த வேறொரு கொரோனா வைரஸ் கூட கண்டறியப்படலாம். எனவே, எதுவாக இருந்தாலும் மூன்றாவது அலை உருவாகுவதற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக நல்லது.
பிரிட்டனில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது கடந்த வருடத்தைப் போலவே தற்போதும் சற்று அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. ஆனால் அங்கே 65% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் பலனாக, மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் அளவு தொற்று தீவிரமடையாமல் இருக்கிறது.
டெல்டா வேரியன்ட்டுக்கு எதிராகவும் தீவிர நோய் நிலையை மட்டுப்படுத்துவதிலும் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதையே நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்தியா 20% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியை வழங்கியிருக்கிறது. நிச்சயம் நம்மாலும் மூன்றாம் அலையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.
 
சுகாதாரத்துறை தகவலின்படி, டெல்டா ப்ளஸ் மூன்று குணநலன்களுடன் இருக்கிறது. 1. கூடுதல் வேகத்துடன் பரவும் தன்மை, 2. நுரையீரல் சுவாசப்பாதை செல்களில் அதிகமான ஈர்ப்புடன் பற்றுதல் தன்மை, 3. ஆண்ட்டிபாடி மருந்துகளின் திறன் இந்த வேரியண்ட்டுக்கு எதிராக குன்றுவது...
இந்த வேரியண்ட்டுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் நோய் தடுப்பு திறனை ஐ.சி.எம்.ஆர். ஆய்வைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலையில் டெல்ட்டா வேரியண்ட் முக்கியப் பங்காற்றியது. இந்த இரண்டாவது அலையில் கோவேக்சின்/ கோவிஷீல்டு போடப்பட்ட மக்கள் தீவிர தொற்றில் இருந்து காக்கப்பட்டனர். அதே போன்று நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையே மூன்றாவது அலையில் மருத்துவமனை அட்மிசன்கள், ஆக்சிஜன் தேவைப்படும் நோய் நிலை, ஐசியூ அட்மிசன்கள், மரணங்கள் மிகவும் குறைந்தும் அரிதாகவும் காணப்படும் வாய்ப்பே இருக்கிறது.
K417N எனும் மரபணு மாற்றத்தின் தன்மையால் தடுப்பூசி பெற்றவர்கள் இடையேயும், நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்கள் இடையேயும் மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆயினும் ஆக்சிஜன் தேவைப்படும் குறை தீவிர நோய் நிலை, ஐசியூ படுக்கைகள் தேவைப்படும் தீவிர நோய் நிலையையும் கட்டாயம் தடுக்கும் என்றே நம்புகிறேன். எனவே தடுப்பூசி பெற்றவர்கள் நிச்சயம் அலட்சியமாக இருக்கக்கூடாது. முகக்கவசம், தனிமனித இடைவெளி, சமூக இடைவெளியை தொடர்ந்து பேணுதல் வேண்டும். இன்னும் நான்கு முதல் எட்டு வாரங்களில் நிலைமையை இன்னும் சிறப்பாக கணிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.
நம் நாட்டுக்கான மூன்றாம் அலை இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களில் நிகழக்கூடும். இந்தியாவில் உருவாகியிருக்கும் B.1617 வகை டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வேரியண்ட்களின் தாக்கம் மூன்றாம் அலையில் அதிகம் இருக்கலாம். மூன்றாம் அலை தீவிரம் இந்த இரண்டாம் அலையின் தீவிரத்தை ஒட்டியோ அல்லது அதை விட குறைவாகவோ இருக்கவே வாய்ப்பு உண்டு.
இருப்பினும் மூன்றாம் அலையைக் கண்ட முக்கிய நாடான அமெரிக்காவில் மூன்றாம் அலைதான் மிக மோசமான பாதகங்களை உருவாக்கியது என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கு மூன்றாம் அலையை அவர்கள் சந்திக்கும் போது தடுப்பூசி வெளிவரவில்லை. ஆனால் நமக்கு தடுப்பூசி எனும் பேராயுதம் நம் கையில் இருக்கிறது
மூன்றாம் அலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்பதே இந்திய சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பாக இருக்கிறது. ஆனால் அந்த அலையின் தாக்கத்தை குறைக்க இயலும். இந்த வருடத்தின் இறுதி மாதங்களை எட்டுவதற்குள் தடுப்பூசியை 45+ வயதுக்கு மேல் உள்ள மக்கள் அனைவரும் பெற்றிருக்க வேண்டும். காரணம் 90% மரணங்கள் இந்த வயதினரிடையே தான் நடந்து கொண்டிருக்கிறது.
தொற்று பெற்றிருந்தாலும் கண்டிப்பாக மூன்று மாதம் கழித்து தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசிகளை விரைவாக பெற்று எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் விரைவாக பரிசோதனை முடிந்து கிடைக்க வேண்டும். மூன்றாம் அலை நிச்சயம் குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்ற அச்சம் தேவையற்றது.
தமிழ்நாடு அரசு மூன்றாம் அலை வருவதற்கு முன்பு 5 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்று சிறப்பான இலக்கை நோக்கி முன்னேறுகிறது. வீடுகளுக்கு சென்று தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பமாகின்றது. இது போன்ற இலக்கை நாம் அடைந்தால் சிறப்பாக இருக்கும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது’’ என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com