தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்புமுகநூல்

தொகுதி மறுசீரமைப்பு | என்னதான் பிரச்னை? தீர்வு என்ன? - மூத்த பத்திரிக்கையாளர் தரும் முழு விளக்கம்!

தொகுதி மறுசீரமைப்பு: தென்னிந்திய மாநிலங்களுக்கு என்ன விளைவுகள்?.. விரிவாக பார்க்கலாம்.
Published on

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டுமென இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது. இப்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய Delimitaion Commission என்கிற குழுவை அமைக்க வேண்டுமென்று 1952ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் கூறியது.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Census) அடிப்படையில் தொகுதி மறுவரை செய்யப்பட வேண்டுமென்றது சட்டம். இதற்குப் பிறகு இந்தியாவில் மூன்று முறை 1951, 1961 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது. மேற்கூறிய கணக்கெடுப்புகளின் படி இந்தியாவின் மக்கள் தொகை முறையே 36 கோடி, 43.9 கோடி, மற்றும் 54.8 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கைகளின் அடிப்படையில் 1952இல் நடந்த முதல் தேர்தலில் 494 தொகுதிள் அமைக்கப்பட்டன. அடுத்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 522 மற்றும் 543 என்று உயர்ந்தது.

இதன்படி, இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால், அப்படி அபாயம் ஏதும் இல்லை என்கிறது பா.ஜ.க.

இந்தநிலையில்,

1. தமிழகம்  இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் எந்த அளவிற்கு சாத்தியப்படும்?

2. இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு தென் இந்தியாவை சேர்ந்த சேர்ந்த வேறு மாநிலங்களின் ஆதரவு கிடைக்குமா?

3. இந்த பிரச்னைக்கான தீர்வு என்ன?

என்கிற கேள்விகளை ஃபிரண்ட்லைன் இதழின் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கரிடம் வைத்தோம். அவர் தெரிவித்த பதில்களை  பார்க்கலாம்.

 ஃபிரண்ட்லைன் இதழின் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர்
ஃபிரண்ட்லைன் இதழின் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர்

1937 ல் தொடங்கிய இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம்...

” இப்போது தமிழ்நாடு முன்னெடுக்கும் போராட்டங்கள்போல, முன்பு செய்த போராட்டங்கள் அனைத்தும் சாத்தியமாகி  வெற்றி கண்டிருக்கின்றன. அதற்கு உதாரணம்தான் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம். எதிர்ப்பு தெரிவிக்காமலே இருந்தால், அவர்கள் நினைத்ததை சாதித்து விடுவார்கள்.

1937ல் அப்போதைய மெட் ராஸ் மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ராஜாஜி பள்ளிப்பாடத்தில் இந்திப் பாடம் கட்டாயம் என்று ஒரு கூட்டதில் பேசினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் போராட்டம் வெடித்தது. அதை முன்னெடுத்தவர்கள் திராவிட இயக்கத்தின் கூறுகளான சுயமரியாதை இயக்கம், நீதி கட்சி, தனித்தமிழ் இயக்கமும்தான். ஏற்கெனவெ கூறியபடி 1938ல் ராஜாஜி இந்தியை கட்டாயமாக்கினார். தமிழகம் முழுவதும் நடந்த எழுச்சியின் முடிவில் சென்னை மெரினாவில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாநாடு நடைபெற்றது. முதன்முதலில் திராவிட நாடு என்ற கோரிக்கையும் சரி, திராவிட அரசியலின் முதல் பெரும் போராட்டமும் சரி இங்குதான் தொடங்குகிறது. 1938 - 40 வரை நடந்தது.

இப்போராட்டம் காரணமாகவும், ராஜாஜி அமைச்சரவை வேறு சில காரணங்களுக்காக ராஜினாமா செய்த நிலையிலும் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 1948இல் முதல்வர் ஓமாந்தூர் ராமசாமி மீண்டும் ஹிந்தியை கட்டாயப்பாடமாக்குகிறார். ஆனால், 1938 -40 ல் நடந்த போராட்டத்தை பார்த்துவிட்டு, கன்னடம், மலையாளம், தெலுங்கு பேசக்கூடிய இடங்களில் மட்டும் அமல்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், தமிழ் பேசக்கூடிய இடங்களில் அமல்படுத்தப்படாததால் தேசியவாதிகளும், தேசிய பத்திரிக்கைகளும் அவர் மிரட்டலுக்கு பயப்படுவதாக கூற ஆரம்பித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு
குஜராத் | ”பாஜகவால் குறிவைக்கப்படுகிறேன்” - குற்றஞ்சாட்டும் ஒரே இஸ்லாமிய எம்.எல்.ஏ.!

இதானல், தமிழ் பேசக்கூடிய இடங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்துகிறார். ஆனால், மீண்டும் போராட்டம் வெடித்தது. அப்போதையை கல்வி அமைச்சர் அவினாசி லிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ய இந்த திட்டமும் தோல்வியை தழுவுகிறது. இதன்பிறகு அரசியலமைப்பு சட்டம் இயற்றப்படும்பொழுது இந்தியை ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஆங்கிலம், இந்தி இரண்டையும் ஆட்சிமொழியாக அறிவிக்கிறார்கள். 1965 வரை இது நடைமுறை இருக்க, அதே காலக்கட்டத்தில் மீண்டும் போராட்டம் வெடிக்கிறது. காரணம் , இராணுவம், ரயில்வே என எல்லா இடங்களிலும் இந்தி திணிக்கும் முயற்சிகள் நடக்கிறது. இப்படி பல போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரதமர் நேரு 1959இல் ஒரு உறுதிமொழியை கொடுக்கிறார். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரும்.

ஆட்சிமொழியாக ஆங்கிலமும் தொடரும்..

அதுவரை ஆங்கிலமே தொடரும் என்று கூறுகிறார். ஆனால், 1965ல் இந்தியை ஆட்சி மொழியாக கொண்டு வர நினைப்பவர்கள், நேருவின் உறுதிமொழியை சட்டத்தின் பகுதியாக்க மறுக்கின்றனர். இப்படி, ஒவ்வொரு காலக்கட்டத்திலிருந்தும் மத்திய அரசிடமிருந்தும் இந்தி திணிப்பு தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒன்றாகவே இருந்தது..

1964இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சி மொழி சட்டதிருத்த மசோதாவில் , குடியரசு தலைவரே இந்தி மொழியை பரப்புவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். அதேசமயம், அவர் மற்றமொழிகளை குறித்து வலுவாக எதையும் கூறவில்லை. இதனால் தமிழ்நாடு தவிர கேரளா , தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போராட்டம் வெடிக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டதட்ட 100 பேருக்கு மேல் உயிரை தியாகம் செய்கிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பு
இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்.. காரணம் என்ன?

இந்தநிலையில்தான், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் தொடரும் என்று முடிவு எடுக்கப்படுகிறது. முக்கியமாக, இந்தித் திணிப்பிற்கு எதிரான உக்கிரமான போராட்டம் நடந்த இதே காலகட்டத்தில்தான், இந்தி பாடல்களும், இந்தி சினிமாக்களும் அவற்றில் நடித்தவர்களும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தனர். இதன்மூலம், இந்திக்கு யாரும் எதிரானவர்கள் இல்லை. இந்தி திணிப்புக்குதான் தமிழர்கள் எதிரானவர்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். இப்படி, நடைபெற்ற எல்லா போராட்டங்களிலும் நாம் வெற்றிபெற்றதை பார்க்கமுடிகிறது. இந்தவகையில்,  தற்போது  மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டம் வெற்று பெறுமா? இல்லையா என்பதை காலம்தான் முடிவு செய்யவேண்டும்.

நிதியை கொடுக்க முடியாது என்பது அடக்குமுறை!

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்

கல்வி என்பது பொதுபட்டியலில் உள்ள ஒன்று. ஆனால், மும்மொழித் திட்டத்தினை வலியுறுத்தும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டடால்,  நிதியை கொடுக்க முடியாது என்று கூறுவது அடக்குமுறை, கூட்டாட்சிக்கு எதிரானது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை சட்டமாக இயற்றில் அதனால் பெரும் பயனையும் அடைந்திருக்கிறது. தென்னிந்திய முதல்வர்கள் அனைவரும் இணைந்து போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிச்சயம் போராட்டத்தின் மூலம்  நீதி கிடைக்கும் என்பதுதான் வரலாற்று உண்மை.

உத்தரவை கடைபிடித்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனையா இது?

தொகுதி மறுசீரமைப்பை பொறுத்தவரை, மக்கள் தொகை அதிகமாகி கொண்டே இருக்கிறது என்றால் , தொகுதிகளை அதிகரித்து கொண்டே இருக்க கூடாது. 1971 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை என்பது 4.11 கோடி. உத்தரப்பிரதேசத்தில் 8 கோடிக்கு மேல்.

ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணம் காட்டி தொகுதிகளை அதிகரித்துக் கொண்டே சென்றால் அதிக மக்கள்தொகையுள்ள மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்து நாடாளுமன்றத்தின் சமநிலை பாதிக்கப்படும் என்று நினைத்த இந்திரா காந்தி அரசு தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும் வகையில் Delimitaion Actஐத் திருத்தியது. 1976ஆம் அவசரநிலைக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 42ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2001 வரை தொகுதி மறுசீரப்பை நிறுத்தி வைத்தது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை சரியாகச் செயல்படுத்திய மாநிலங்கள் இதனால் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

2001இல் இந்த 25 ஆண்டு என்கிற காலவரம்பு முடிவுக்கு வந்தது. இதனால் 2002இல் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டது. இதன்படி, 2026க்குள் இந்தியாவின் அனைத்துப்பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் என கருதப்பட்டது. ஆகவேதான், இப்போது தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை உருவெடுத்துள்ளது.

BIMARU மாநிலங்கள்

இப்படியிருக்க, திட்டமிட்டபடி, மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டதா?  என்று கேட்டால், 1971 ல் 4.11கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள் தொகை 2011 ல் 7.21கோடி . ஏறக்குறைய 40 வருடத்தில் 3 கோடி மட்டும்தான் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இது மிகவும் சிறிய அளவுதான்.

அதே நேரத்தில் 8 கோடிக்கு மேல் இருந்த உத்தரப்பிரதேசம் 2011ல் 19 கோடி என்ற அளவில் வந்து நின்றது. தமிழ்நாடு போன்ற தென் இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், BIMARU (Bihar, Madhya Pradesh, Rajasthan, Uttar Pradesh என்பதன் சுருக்கமான BIMARU என்கிற சொல் நோயுற்ற என்பதைக் குறிக்கும்) எனப்படும் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்கள் 1990களில் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின் தங்கிய மாநிலங்களாக அறியப்பட்டன.

இவை மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்தன அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கான, கர்னாடகம் ஆகிய மாநிலங்கள் அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னணியில் இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் குடும்ப கட்டுபாடு திட்டம் மட்டும் கிடையாது. மருத்துவ வசதி. கல்வி அறிவு, பகுத்தறிவு சிந்தனைகளும் கூட. வளர்ச்சி அதிகம் ஏற்படும்போது குழந்தை பெறும் விகிதம் (Fertility rate) குறைகிறது என்பது உலகளாவிய அனுபவம். ஆனால் மறுசீரமைப்பில் இந்த மாநிலங்களின் தொகுதிகளைக் குறைப்பது அவற்றைத் தண்டிக்கும் அநீதியாகும்

சமூக நீதி, பகுத்தறிவு, மக்கள்நலத் திட்டங்கள்

1920களில் சமூக நீதி கொள்கை தமிழ்நாட்டில் வந்தது. பொதுவாக, குழந்தை பிறப்பு விகிதம் என்பது 2.1 என்கிற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவை தமிழ்நாடு எப்பொழுதோ அடைந்துவிட்டது. இதற்கான முக்கிய காரணம் இங்கு முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்கள், கல்விதிட்டங்கள், மருத்துவ வசதிகள். ஆனால், இந்த மாதிரியான கட்டமைப்பு மேற்குறிப்பிட்ட  BIMARU மாநிலங்களில் இருக்காது.

அதேப்போல, குழந்தை இறப்பு ,  MMR எனப்படும் தாய் இறப்பு விகிதம் போன்றவை தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. ஆனால், BIMARU மாநிலங்களில் இதன் விகிதம் தமிழ்நாட்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. ராஜஸ்தானில் மட்டும் சில மாற்றங்கள் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் என்ற அமைப்பு வெளியிட்ட சுகாதார நிலை குறித்த அறிக்கையின் பட்டியலில் 19 பெரிய மாநிலங்கள் இருந்தன. பட்டியலின் முதல் சில இடங்களில் தமிழ்நாடு, கேரளா உட்பட தென்னிந்திய மாநிலங்கள் இருந்தன.

ஆனால்,  கடைசி 4 இடங்களில்  BIMARU மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, 1971 வகுக்கப்பட்ட கொள்கையின்படி, மக்கள்தொகையை கட்டுப்படுத்தி, இந்தியாவிற்கு வளர்ச்சியை ஏற்படுத்திய தென் மாநிலங்கள்  மறுசீரமைக்கு உள்ளாக்கப்படும்போது இம்மாநிலங்கள் அவர்களது மக்களவை தொகுதிகளை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. கூடுதலாக , எதன் அடிப்படையில் இந்த மறுசீரமைப்பை செய்ய இருக்கிறார்கள் என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை.

தெளிவு இல்லை

2023- ல் மறுசீர்மைப்பு குறித்து மோடி தெரிவிக்கும்போது, தென் இந்திய மாநிலங்களுக்கு மறுசீரமைப்பு செய்தால் 100 சீட்டுகள் குறையும் என்கிறார். ஆனால், அண்ணாமலை pro-rata அடிப்படையில் என்கிறார். என்கிறார். தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷாவோ எந்த சீட்டும் குறையாது என்கிறார்.

இரண்டு வகையிலான மறுசீரமைப்பு சாத்தியங்கள்

தொகுதி மறுசீரமைப்பு
ஒடிசா| ஒரு மாத குழந்தைக்கு 40 முறை வைக்கப்பட்ட சூடு.. நோயை குணப்படுத்த செய்த செயல்!

ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட கணக்கின் படி இப்பொதிருக்கும் 545 தொகுதிகளை அதிகரிக்காமல் மறுசீரமைப்பு செய்யப்படும்போது ஒரு தொகுதியில் இருக்கும் வாக்களர்களின் எண்ணிக்கை அதிகமாகும். தற்போது உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 174 தொகுதிகள் இருக்கின்றன. இது 205 அதிகரிக்கும். அதாவது அவற்றிற்கு 31 தொகுதிகள் அதிகமாகும்.

அதேசமயம், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நடகாவில் இப்பொழுது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 129 . இது 103 ஆகக் குறையும் . இதனால் 26 சீட்டுகள் இழப்பு. தமிழ்நாட்டின் தொகுதி எண்ணிக்கை 39இலிருந்து 31ஆகக் குறையும். சூத்திரம் இரண்டின்படி  பார்த்தால், தொகுதியை அதிகரிப்பது. 848 மக்களவை என்று பார்த்தால், BIMARU மாநிலங்களின் தொகுதிகள் 174இலிருந்து 324 ஆக அதிகரித்து, தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகள் 129இலிருந்து 164 ஆகும். 35 தொகுதிகள் மட்டுமே அதிகரிக்கும். தமிழ்நாட்டிற்கு 49 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். இதன்படி, BIMARU மாநிலங்களுக்கு மட்டுமே 324 சீட்டுகள் வரும் பட்சத்தில், மீதமிருக்கும் 28 மாநிலங்களில் ஒரு கட்சி குறைந்த அளவு இடங்களை வென்றால் கூட பெரும்பான்மை கிடைத்துவிடும். அதாவது இந்த 4 மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் அசுர பலம் பெற்றுவிடும்.

தென் இந்திய மாநிலங்களின் பிரச்னை இது:

இதனால், தென் இந்திய மாநிலங்களின் துணை தேவைப்படாது. வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகமாகும். எனவே, இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாநிலங்களாக இந்த நான்கு மாநிலங்கள் இருக்கும். எனவே, இதே நிலை தமிழகத்திற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான் தொடர்ந்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது திமுகவின் பிரச்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பிரச்னை. தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல தென்னிந்தியாவின் பிரச்சினை.

என்ன தீர்வு?

தற்போதிருக்கும் மக்கள்தொகை/தொகுதி விகிதாச்சாரப்படி மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளில் 7.2% தொகுதிகள் தமிழ்நாட்டிற்கு இருக்கின்றன. மறுசீரமைப்பு நடந்தால் இது 5%ஆகக் குறையுமென்றும், வட இந்தியமாநிங்களின் தொகுதிகள் 15%இலிருந்து 24% ஆகுமென அமைச்சர் பி.டி. பழனிவேல்ராஜன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

எனவே பழைய விகிதாச்சாரப்படி தொகுதிகள் கிடைப்பது மட்டுமே நியாயமாக இருக்க முடியும். இந்த பிரச்னையை தீர்க்க அமெரிக்க மாடல் இருக்கிறது. இதே 1911ல் அமெரிக்காவில் 9.1 கோடியாக மக்கள் தொகை இருந்தது. தற்போது 32 கோடி வரை வந்துள்ளது. அவர்களும் 2023 ல் மறுசீரமைப்பு செய்த போது முன்பிருந்த 435 தொகுதிகளே தொடர்ந்து இருக்கின்றன. ஆனால், அவர்களது தொகுதிகள் மாறாமல் அப்படியே இருக்கிறது. எனவே, இந்த சிக்கலை சீர்திருத்துவதற்கான சூத்திரத்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள். எனவே, எல்லா மாநிலக் கட்சிகளையும் அழைத்து இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.  எடுக்கப்படும் முடிவு யாருக்கும் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் முடிகிறதென்றால், மனமிருந்தால்  இங்கும் அதற்கான தீர்வை கண்டுபிடிக்க முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com