"எல்லோரும் எங்கே சென்றார்கள்?" - 2 முறை பிளாஸ்மா தானம் தந்தவர் தாயை இழந்த பெருந்துயரம்!

"எல்லோரும் எங்கே சென்றார்கள்?" - 2 முறை பிளாஸ்மா தானம் தந்தவர் தாயை இழந்த பெருந்துயரம்!
"எல்லோரும் எங்கே சென்றார்கள்?" - 2 முறை பிளாஸ்மா தானம் தந்தவர் தாயை இழந்த பெருந்துயரம்!

ஒரு கையில் தாயின் கொரோனா பாசிட்டிவ் ரிப்போர்ட்; கூடவே தனது சொந்த பிளாஸ்மா நன்கொடை சான்றிதழ்கள்... மருத்துவமனை தோறும் அலைந்து பரிதவித்த சையத் யூசுப், ஆக்சிஜன் பற்றாக்குறை - படுக்கைத் தட்டுப்பாட்டின் காரணமாக உரிய சிகிச்சை கிடைக்கததால் தன்னுடைய தாயை இழந்த சம்பவம் தலைநகரை உலுக்கியிருக்கிறது.

கிழக்கு டெல்லியின் தில்ஷாத் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சையத் யூசுப். இரண்டு நாட்களில் இவர் பல மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நடையாய் நடந்து சென்று, கொரோனா பாதித்த தனது தாய்க்கு சிகிச்சைக்காக ஒரு படுக்கை கிடைக்க போராடி வந்துள்ளார். ஆனால், அவருக்கு நடந்தவை எல்லாம் சோகத்தின் உச்சம்தான்.

42 வயதான சையத் யூசுப் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு வந்தவர், அக்டோபரிலும் பின்னர் கடந்த ஆண்டு நவம்பரிலும் என இரண்டு முறை பிளாஸ்மா தானம் வழங்கினார். இந்த நிலையில்தான் கடந்த வாரம் இவரின் 70 வயதான தாய் சிஃபாலி பேகமுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. யூசுப் அருகிலுள்ள மருந்தகத்தில் இருந்து ஒரு ஆக்சிமீட்டரை வாங்கி தாயின் உடல்நிலையை சோதித்தார். இதில் அவரது ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பது தெரியவந்தது.

இதன்பின், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கச் சென்றார். ஆனால், எந்த மருத்துவமனையிலும் அவரை அனுமதிக்க போதுமான அளவுக்கு படுக்கை வசதிகளும், வெண்டிலேட்டர் வசதியும் இல்லை என்று கைவிரித்துள்ளனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை, பேகம் ஒரு ஆட்டோவிலேயே காத்திருந்துள்ளார். மேலும் பயணிக்க அவரது தாயார் மிகவும் பலவீனமாக இருந்ததால் மீண்டும் வீட்டை அடைந்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர் தனியாக வாங்கி சிகிச்சை அளிக்கலாம் என்ற முடிவில் இதனை செய்துள்ளார்.

அதன்படி தனியார் நிறுவனம் மூலம் ஆக்சிஜன் ஆலைக்கு சென்றபோது 'ஆக்சிஜன் இருக்கிறது; அதை அடைக்க சிலிண்டர் இல்லை. எனவே, சிலிண்டர் கொண்டுவந்தால் ஆக்சிஜன் தருகிறோம்' எனக் கூறியிருக்கின்றனர்.

இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு தாயை அழைத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் யூசுப். பின்னர் யூசுப் தனது தாயை ஜீவன் ஜோதி மருத்துவமனைக்கும், ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றார். அந்தத் தருணத்தில் அந்த இரண்டு மருத்துவமனைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மருத்துவமனை கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை 500-ல் இருந்து 350 ஆக குறைத்திருந்துள்ளது. அதனால், எந்த முயற்சியும் கடைசி வரை கொடுக்கவில்லை.

இறுதியாக, சனிக்கிழமை பிற்பகுதியில், ஆக்ஸிஜன் சிலிண்டரை ரூ.6,000-க்கு வாங்கி வந்துள்ளார். ஆனால் அது மிகவும் தாமதமான செயல். ஏனென்றால் அப்போது பேகமின் ஆக்ஸிஜன் அளவு 32 ஆக குறைந்தது. இறுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை, யூசுப்பின் தாய் பேகம் இந்த உலகை விட்டு சென்றுவிட்டார்.

தாய் இறந்த வேதனையில் இருந்த யூசுப், ``அரசாங்க ஆம்புலன்ஸ் வேண்டி முயற்சித்தேன். அதற்கான அழைப்பு விடுத்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. தனியார் ஆம்புலன்ஸ்களை அழைக்கும் அளவுக்கு நான் வசதியாக இல்லை. எனவே நாங்கள் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து முதலில் தில்ஷாத் கார்டனில் உள்ள சுவாமி தயானந்த் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு படுக்கைகள் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் வென்டிலேட்டர்கள் எதுவும் இல்லை. என் அம்மாவுக்கு வென்டிலேட்டர் தேவை என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். ஆனால் குறைந்தபட்சம் எங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரை வழங்குமாறு அவர்களிடம் கெஞ்சினேன்.

எந்த மருத்துவமனையிலும் படுக்கைகள், வெண்டிலேட்டர் கிடைக்கவில்லை. இறுதியாக என் தாயின் ஆக்ஸிஜன் அளவு 32 ஆக குறைந்தது. அவர் நேற்று அதிகாலை காலமானார். நாங்கள் உடைந்து போயுள்ளோம். மற்றவர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது, நான் அவர்களுக்காக சென்றேன்… நான் இரண்டு முறை பிளாஸ்மாவை நன்கொடையாக அளித்தேன். ஆனால், எனக்கு உதவி தேவைப்பட்டபோது, எல்லோரும் எங்கே சென்றார்கள்?" என்று தனது மனக்குமுறலை கொட்டி இருக்கிறார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள பல மருத்துவமனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை தட்டுப்பாடு இருக்கின்ற நிலைக்கு யூசுப்புக்கு ஏற்பட்ட பெருந்துயரம்தான் உச்சபட்ச சாட்சியாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com