யார் முதல்வர் வேட்பாளர்? ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே வாக்குவாதம்: காரணம் என்ன?

யார் முதல்வர் வேட்பாளர்? ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே வாக்குவாதம்: காரணம் என்ன?

யார் முதல்வர் வேட்பாளர்? ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே வாக்குவாதம்: காரணம் என்ன?
Published on

ஏற்கெனவே முதலமைச்சராக ஓபிஎஸ் 3 முறை பதவி வகித்துள்ளார். ஆனால் ஜெயலலிதா உயிரிழப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு துணை முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நிறைவு பெறுவதையொட்டி மீண்டும் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிமுக செயற்குழுக் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், செயற்குழுக் கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதில் முக்கியமான தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதாவது துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், “தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன். என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா; ஆனால் உங்களை(ஈபிஎஸ்) முதல்வர் ஆக்கியது சசிகலா” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஈபிஎஸ் “இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான். ஒரு முதலமைச்சராக நான் என்ன சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமரே எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளார். கொரோனா காலத்திலும் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறுகையில், “செயற்குழுவும் பொதுக்குழுவும் ஒன்றாகத்தான் வைப்பார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்றே சொல்லியிருக்கலாம். ஆனால் காலதாமத்தத்தை நீட்டிப்பது ஏன்? வழக்கமாக செயற்குழுவில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு பொதுக்குழுவில் சம்மதம் வாங்குவார்கள். பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியதில் சசிகலாவின் பங்கு கண்டிப்பாக இருந்திருக்கும். அதை பன்னீர்செல்வம் மறுக்க முடியாது. அதைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பார்.

அதிமுக கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7 ஆம் தேதி முடிவு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என அவர்கள் அடிகோடிட்டு சொல்வதால் கூட்டணி கட்சியின் முடிவுக்காக காத்துள்ளார்கள் என்பது தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் ரமேஷ் கூறுகையில், “ஒரு கூட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடையே வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. பல முரண்பாடான கருத்துகளை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இது அக்கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது. சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என செய்தித் தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றின் மூலம் கட்சி இன்னும் கட்டுக்கோப்பான கட்சியாக மாறவில்லை என்பதை காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com