மகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்!

மகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்!
மகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்!

ருத்தம்மா படத்தில் கிழவி ஒருவர் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் காட்சிக்காக நிறையவே பிராய்ச்சித்தம் தேடியிருக்கிறது தமிழ்சினிமா. உண்மையில் மகள்களை கொண்டாடித்தீர்த்திருக்கிறார்கள் கோலிவுட் இயக்குநர்களும், பாடலாசியர்களும்!

ஆனந்த யாழை எனும் அற்புதம்!

மகள்களைப்பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் 'ஆனந்த யாழை' பாடல் அழிக்கமுடியாத காவியம் என்று. இந்த பாடலை டிகோட் செய்ய நிறையவே இருக்கிறது. 'இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை' என்கிறார் நா.முத்துகுமார். உண்மையில் மொழிகள் என்பது வெறும் சொற்கள்தானே. பெருக்கெடுத்துவரும் வெள்ளம் போல, நமக்குள் தோன்றும் எல்லாவற்றையும் மொழிவழியாக உணர்த்திவிட முடியாது. அப்படித்தான் தந்தை மகளுக்கிடையிலான உறவும். அது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. 'உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி' என பாடல் முழுவதுமே மகள்களுக்கான சிலாகிப்புகள்தான். 'இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி' என உணர்வுகளை வரிகளாக கோர்த்திருப்பார் முத்துகுமார்.

வா வா என் தேவதையே - அபியும் நானும்!

பெரிய கனவுகள் எதுவுமில்லாமல், மழலையைக்கொண்டாடும் தந்தையின் மனநிலையை வாரியிறைத்திருக்கும் பாடல்தான் அபியும் நானும் படத்தின் வா வா என் தேவதையே பாடல். 'மார்புதைக்கும்… கால்களுக்கு…மணி கொலுசு நான் இடவா' 'செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை' என பிறந்த மகளின் ஒவ்வொரு அசைவுகளையும் அழகியலுடன் பதிவு செய்திருப்பார் வைரமுத்து. பெண் பிள்ளை தனியறை புகும் வரையிலான காலக்கட்டத்தை பாடலுக்கு அடக்கியிருக்கிறார்கள். 'பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்' என இறுதியில் தந்தைகளை ஒரு நிமிடம் உறையவைத்து படத்தின் திகில் கிளைமாக்ஸூக்கு இணையாக எழுதியிருக்கிறார்கள்.

கண்ணான கண்ணே - விஸ்வாசம்!

'எல்லோரும் தூங்கும் நேரம் நானும் நீயும் மௌனத்தில் பேசணும்' மீண்டும் மீண்டும் மௌனமே பாஷையாகிறது. தந்தையும் மகளுக்குமான உறவு அதீத வார்த்தைகளால் வார்த்தெடுக்கப்படுவதில்லை. அது மௌனங்களால் அலங்கரிக்கப்படும் உலகம். அந்த உலகத்தில் யாருக்கும் இடமில்லை. தந்தையும் மகளும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உருவாக்கியிருக்கும் உலகம் என்கிறார்கள். தந்தைக்கான உணர்வை பெண் ஒருவர் கவிதையாக்கி வடிப்பது இருப்பதிலே அழகானது. அதை கவிஞர் தாமரை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஆரிரோ ஆராரிரோ - தெய்வதிருமகள்

'வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே.. பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே' படத்தின் சாரம்சத்தை உணர்த்தும் வரிகள். இந்த சூழலே அழகானதுதான். குழந்தை மனநிலைகொண்ட தந்தை தன் மகளின் மீது கொண்ட அன்பை ஆர்பரிப்பது முன்னெப்போதும் காணாத ஒன்று. 'இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே' மீண்டும் அதே மௌனத்தையே பயன்படுத்தியிருக்கிறார் நா.முத்துகுமார். மௌனத்திற்கு இருக்கும் அடர்த்தியைக்கண்டு வியப்பாகத்தான் இருக்கிறது. அதேபோல, 'பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே' என ஓராயிரம் அர்த்தங்களை ஒருவரியில் அழகாக அடக்கியிருப்பார் முத்துக்குமார்.

ஆராரோ ஆரிரரோ - சிறுத்தை

சிறுத்தை படத்தில் வரும் ஆராரோ ஆரிரரோ தாயின் பாடலைக்கேட்டுக்கொண்டு தந்தை மார்பில் துயிலும் மகளுக்கு 'தாயான தாய் இவரோ' என்ற வரிகள் தாய்க்குமான பங்கை தந்தையிடமே இட்டு நிரப்பியிருக்கும்.

உனக்கென்ன வேணும் சொல்லு - உன்னை அறிந்தால்

மீண்டும் தாமரை. 'நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்;உன் மதி மேதை மேல் மடங்கிக்கொள்கின்றேன்' என மகளுக்காக தங்களை மாற்றிக்கொள்ளும் தந்தைகள் அழகு. தன் மகளை அழைத்துக்கொண்டு சுற்றும் தந்தையின் பயணமாக விரியும் பாடல் மகள்களுக்கும் கூட நெருக்கமானது.

வாயாடி பெத்த புள்ள - கனா

ஒரு ஜாலியான பாடல் தான் வாயாடி பெத்த புள்ள, வரப்போறா நெல்லப் போல யார் இவ பாடல். 'ஆச மக என்ன செஞ்சாலும் அதட்ட கூட ஆச படமாட்டேன்' என்ற வரிகளாக மகள்களை கொண்டாடிக்கொண்டிருக்கிறது தமிழ்திரையுலகம். தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு எப்போதும் அலாதியானது. அது பொதுவானதும் கூட. ஆனால், பெண் பிள்ளைகள் வெறுக்கப்படும் சமூகத்தில்தான் தந்தைக்கும் மகளுக்குமான உறவு முக்கியத்துவம் பெறுகிறது. அப்படியான முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடல்கள்தான் மேற்கண்டவை.

-கலிலுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com