தகவல் பதிவிறக்க (டேட்டா டவுன்லோட்) வேகத்தை அறிவது எப்படி?

தகவல் பதிவிறக்க (டேட்டா டவுன்லோட்) வேகத்தை அறிவது எப்படி?
தகவல் பதிவிறக்க (டேட்டா டவுன்லோட்) வேகத்தை அறிவது எப்படி?

அணுவின்றி அசையாது உலகு என்பார்கள். இன்று இணையம் இன்றி, அந்த அணுவும் கூட அசையாது போல. எந்த திசைக்குத் திரும்பினாலும் - நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இணையத் தொடர்பு... அதிலிருந்து தகவல் பதிவிறக்கம் தேவைப்படுகிறது. இதனாலேயே இந்த பதிவிறக்கம் வேகமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் ஏற்படுகிறது. ஆனால், இது நமது கட்டுப்பாட்டில் இல்லை. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டமைப்பு வலிமை மட்டுமின்றி, அந்தந்த பகுதிகளில் உள்ள அலைகற்றையின் வலிமை உள்ளிட்ட பல தொழில்நுட்ப விஷயங்களும் சார்ந்ததாக உள்ளன. எனினும், நம்மைப் பொறுத்தவரை, இருக்கும் இடத்தில் கிடைக்கும் பதிவிறக்க வேகம் என்ன என்பதுதான் முக்கியம். 

வீடு, அலுவலகம், தொழிற்சாலை, கல்விக் கூடம் போன்ற இடங்களில் தொடங்கி, பிற வணிக வளாகங்கள் என வேறு எங்கும் உள்ள நிரந்தர அகண்ட அலைக்கற்றை தடமான ஃபிக்ஸ்ட் பிராண்ட்பேண்ட் இணையத் தொடர்பு மூலமான பதிவிறக்கமோ.... எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கைப்பேசியின் வழியான பதிவிறக்கமோ... எதுவாக இருந்தாலும், அதன் வேகத்தைத் தெரிந்துகொள்ள இப்போது எளிதான வாய்ப்புகள் உள்ளன. 

ஓக்லாவின் "ஸ்பீட்டெஸ்ட்" இதைச் சாத்தியமாக்குகிறது. http://www.speedtest.net என்ற முகவரியில், இதற்கான இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த இணைய தளத்தில் பதிவு செய்துகொள்வதன் மூலம் நீங்கள் விரும்பிய எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும், எந்த மாதிரியான இணையத் தொடர்பின் வேகத்தையும் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். அதோடு, இந்த நிறுவனத்துக்கும் உங்களால் உதவ முடியும். இதுபோல, முயலும் பலரது நிகழ்விடத் தகவல் அடிப்படையில், உலகம் முழுக்க உள்ள பல்வேறு இடங்களில் எவ்வளவு பதிவிறக்கம் வேகம் உள்ளது என்பதைக் கணக்கிட்டு, இந்த நிறுவனம் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

பொதுவாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களைக் கேட்டால், "இந்த இடத்தில்.... இவ்வளவு வேகம் கிடைக்கும்" என பல தகவல்களைச் சொன்னாலும், அந்த வேகம் பெரும்பாலான நேரங்களில் சாத்தியமாவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.எனவே, ஒருதலைப்பட்சமாக இல்லாமல், நிஜ நடப்பு மற்றும் தகவல் அடிப்படையில் டேட்டா டவுன்லோடு வேகத்தைப் பெற விரும்பும் நபர்கள், Speedtest வசதியைப் பபயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இணையதளமுகவரியில் நுழைந்தவுடனே காணப்படும் பக்கத்தில் உள்ள GO என இடப்பெற்றுள்ள வாய்ப்பைச் சொடுக்குவதன் மூலமே, நேரடியாக நமது பதிவிறக்க வேகத்தை மதிப்பிடும் பணி தொடங்கி, அடுத்த ஓரிரு நிமிடங்களில் விடை கிடைத்துவிடுகிறது. இதைத்தான் ஸ்பீட் டெஸ்ட் (SPEED TEST)என குறிப்பிடுகிறார்கள். 

இந்தச் சோதனையை பல்வேறு கம்ப்யூட்டர் இயக்க மென்பொருளில் செய்வதும் சாத்தியம்தான். அதாவது, இந்த வலைதளத் தகவல்படி, தற்போதைக்கு ஆப்பிள் iOS, ஆண்ட்ராய்ட், மேக் OS, விண்டோஸ், ஆப்பிள் டிவி மற்றும் கூகுள் க்ரோம் போன்ற இயக்க மென்பொருட்களில் செய்ய முடியும். விரைவில் மேலும் சிலவும் இந்த பட்டியலில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓக்லாவின் இந்த ஸ்பீட்டெஸ்ட் முயற்சிகளுக்கு உதவும் வகையில், தற்போது 190 நாடுகளில் உள்ள 6000த்துக்கும் அதிகமான சர்வர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சோதனைகளுக்கு ஆட்டோமேஷன் எனப்படும் வகையில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மனிதர்களை சார்ந்தே தகவல்கள் திரட்டப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படுவதாக ஓக்லா வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

தொலைத் தொடர்பு துறை, இணைய சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட இந்த தொலைத் தொடர்பு துறையினர் பலரது தேவைகளுக்கு பயன்படுத்த இது உதவும் என்பதால், இந்த பதிவிறக்க வேகத் தகவல் திரட்டு ஒன்று மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. இதற்கு நம்பகமான சராசரி முடிவுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிராட்பேண்ட் இணைப்பைப் பொறுத்தவரை, குறைந்தது 3333 தனித்தனி சோதனைகளும், மொபைல் போன் இணைப்பைப் பொறுத்தவரை 670 தனித்தனி சோதனைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் இருந்து பெறப்படும் தகவல் அடிப்படையில் பதிவிறக்க வேகம் பற்றிய தகவல்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படுகிறதாம்.  

கடந்த இரண்டு ஆண்டு ஸ்பீட்டெஸ்ட் சோதனைகளின்படி, இந்தியாவில் அதிவேக மொபைல் டேட்டா பதிவிறக்கத்துக்கு துணைநின்ற தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் ஏர்டெல்தான் என கூறப்படுகிறது. 2016ம் ஆண்டு பதிவுகளின்படி, முதலிடத்தில் இருந்த ஏர்டெல் - (8.76 mbps)ஐத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ (7.47 mbps), வோடபோன் (7.17 mbps) மற்றும் ஐடியா (6.97 mbps) நிறுவனங்கள் இடம்பெற்றன. 2017 பதிவுகளின்படி, ஏர்டெல் (9.05 mbps), வோடபோன் (8.02 mbps), ஐடியா (7.52 mbps) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (7.34 mbps) என்ற வரிசையில் சேவை வேகம் இருப்பதாக தெரிய வருகிறது.  

இந்தியாவில் இணைய டவுன்லோடு பற்றிய தகவல் இது என்றால், சர்வதேச நிலையுடன் ஒப்பிடும்போது இன்னும் பல ஆச்சரியங்கள் உள்ளன. 

* மொபைல் போன்களில் தற்போதைய பதிவிறக்க வேகம் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு 109வது இடம்தான். 

* கடந்த பிப்ரவரியில் நடந்த சோதனைகளின்போது, இந்தியாவில் மொபைல் போன் டவுன்லோடு வேகம் 9.01 mbps, அதாவது ஒரு நொடிக்கு 9.01 மெகாபைட். இது கடந்த நவம்பரில் 8.80 mbps.

* கடந்த சில ஆண்டுகளில் மொபைல் போன்களின் இந்திய பயன்பாடு கணிசமாக, அதாவது 100 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், தற்போது இந்த வேகத்தை மட்டுமே எட்ட முடிகிறதாம்.

* தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடான அமெரிக்கா, மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா போன்ற நாடுகளைத் தாண்டி, டவுன்லோடு செய்யப்படும் மொத்த டேட்டா அளவு என பார்க்கையில் இந்தியாவுக்கே முதல் இடம்.

* அமெரிக்கா, சீனா என இரு நாடுகளிலும் சேர்ந்து, மொபைல் போன் மூலம் டவுன்லோடு செய்யப்படும் மொத்த டேட்டாவை விட, இந்தியாவில் மட்டும் டவுன்லோடு செய்யப்படும் அளவு அதிகம். நிதி ஆயுக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கடந்த டிசம்பரில் வெளியிட்ட தகவல்படி இது 150 கோடி கிஹாபைட் (Gigabyte).   

* மொபைல் டேட்டா டவுன்லோடைப் பொறுத்தவரை, உலக நாடுகளில் முன்னணியில் உள்ளது நார்வே. அங்கு இது 62.07 mbps அளவுக்கு வேகம் உள்ளதாம்.   

* வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஃபிக்ஸ்ட் பிராட்பேண்ட் தொலைத் தொடர்பு வசதி மூலம் பெறப்படும் டவுன்லோடு வேகத்தில் இந்தியா உலக நாடுகளிடையே 67வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 76வது இடத்தில் இருந்தது. 

* பிராட்பேண்ட் இணைப்பின் டவுன்லோடு வேகத்தில் உலக அளவில் முன்னிலையில் உள்ளது சிங்கப்பூர். அங்கு தற்போது 161.53 mbps வேகம் சாத்தியமாகியுள்ளது எனத் தெரிகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com