மதவாதிகளை கிலி பிடிக்க வைத்த டார்வின் கோட்பாடு

மதவாதிகளை கிலி பிடிக்க வைத்த டார்வின் கோட்பாடு
மதவாதிகளை கிலி பிடிக்க வைத்த டார்வின் கோட்பாடு

19-ம் நூற்றாண்டில் ஐரோப்பியாவை மட்டுமல்ல, உலகையே சார்லஸ் டார்வின் கோட்பாடு அதிரவைத்தது. 

அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் கோட்பாடு குறித்த சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. டார்வின் கோட்பாடு தவறு என்று கூறியுள்ள  மத்திய அமைச்சர் சத்யபால் சிங், கல்லூரி பாடத்திட்டத்தில் இருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நம்முடைய மூதாதையர்கள் யாரும் இந்தக் கருத்தை எழுதவும் இல்லை, வாய்வழி வார்த்தையாகக் கூட சொன்னது இல்லை என்று டார்வின் கோட்பாட்டிற்கு எதிராக சத்யபால் சிங் தனது கருத்துகை தெரிவித்துள்ளார். 

அறிவியல் கருத்துக்கள் கடுமையான எதிர்ப்புகளை சந்திப்பது புதிதல்ல. அறிவியல் உலகவை புராட்டி போட்ட, சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற புரட்சிகரமான கோட்பாடுகள் அந்தந்த காலத்தில் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது. தாங்கள் தெரிவித்த உண்மைக்காக கொல்லப்பட்ட அறிவியல் அறிஞர்களும் உள்ளனர். அப்படி கடும் எதிர்ப்புகளை சந்தித்த இரண்டு முக்கிய கோட்பாடுகளில் ஒன்று டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு. மற்றொன்று கோபர்னிக்கஸ், கலீலியோ உருவாக்கி நிரூபித்த சூரிய மையக் கோட்பாடு.  மற்ற அறிவியல் கோட்பாடுகளை விட இந்த இரண்டு கோட்பாடுகளும் அதிக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஏனெனில் இவை  இரண்டும் நேரடியாக அப்போதையை மதக்கருத்துக்களில் இருந்து மாறுபட்டது.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரிஸ்டாட்டிலும், தாலமியும் உருவாக்கிய, ‘பிரபஞ்சத்தில் பூமிதான் மையத்தில் உள்ளது. பூமியை சுற்றி சூரியன் உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகிறது என்ற பூமி மையக் கோட்பாடு பல நூற்றாண்டுகள் நம்பப்பட்டு வந்தது. இந்த கருத்துக்களுக்கு ஏன் மாற்றுக் கருத்து உருவாகவில்லை என்றால், அரிஸ்டாட்டில், தாலமியின் இந்த கருத்துக்களை கிறிஸ்தவ மத நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு இருந்தது. இதனால், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை இருந்தது.

கிட்டத்தட்ட 15 நூற்றாண்டுகளுக்கு பிறகு சூரியனைத்தான் பூமி உள்ளிட்ட மற்ற கோள்கள் சுற்றி வருகிறது என்ற சூரியன் மையக்கோட்பாட்டை 15-16-ம் நூற்றாண்டில் நிக்கோலஸ் கோபர்னிக்கஸ் முன் வைத்தார். ஆனால், சமயவாதிகள் இந்த கருத்தினை மறுத்து வந்தனர். கலீலியோ தொலைநோக்கி மூலம் பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன என்பதை நிரூபித்த பின்பும் சமயவாதிகள் நம்புவதற்கு தயாராகவில்லை. ஏனெனில் மத நிறுவனங்களை மீறி அப்பொழுது கருத்து சொல்வது அவ்வளவு எளிதானது அல்ல. பல்வேறு தடைகளை மீறி கலீலியோவின் நூல்கள் வெளியில் வந்து தனது உண்மைகளைக் கூறி அறிவார்ந்த புரட்சியை ஏற்படுத்தியதை உலகம் அறியும். இன்றைய வானிலை அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு கோபர்னிக்கஸ், கலீலியோவின் கோட்பாடுகள்தான் அடித்தளமிட்டது.

சூரியன் மையக்கோட்பாட்டைப் போல் அதிக எதிர்ப்புகளை சந்தித்தது, டார்வினின் பரிமாண கோட்பாடு. அப்படி என்னதான் சொல்கிறது டார்வின் கோட்பாடு. அதாவது, குரங்கில் இருந்து மனிதன் காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தான் என்பதை தாண்டி, எல்லா பெரிய ஜீவராசிகளும் சிறு உயிரினங்களில் இருந்தே மரபணு உரு இயல் மாற்றங்கள் மூலமே பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதே நீண்ட ஆய்வுகளுக்கு பின் டார்வின் கண்டடைந்த உண்மை. பீகில் கப்பலில் 4 ஆண்டுகள் பயணித்து பல்வேறு தீவுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் டார்வின் இந்த முடிவுகளுக்கு வந்தார். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை, இந்த ஆய்வுகளுக்காக அவர் செலவிட்டார். 

மனிதனின் மூதாதையர்கள் (‘The Descent of Man’), உயிரினிங்களின் தோற்றம் (The Origin Of Species) என்ற இரண்டு புத்தகங்களின் மூலம் தான் கண்டறிந்த உண்மைகளை பதிவு செய்தார். டார்வினின் இந்த கோட்பாடு மதவாதிகளின் ஆணி வேரையே அசைத்துப் பார்த்தது. மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் கடவுள் தான் படைத்தார் என்று அனைத்து மதங்களும் நம்புகிறது. இந்த கருத்தை டார்வின் கோட்பாடு அசைத்து பார்க்கவில்லை, பலரது மனங்களில் இருந்து சிதைத்தே விட்டது. தன்னுடைய கருத்திற்கான டார்வின் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. மதம் தொடர்பான அறிஞர்களில் பெரும்பாலானோர் இன்றளவும் டார்வின் கோட்பாட்டை எதிர்த்து வருகிறார்கள். உலக அளவில் டார்வின் கோட்பாடு குறித்து விவாதங்களும் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தியாவில் இருந்து டார்வின் கோட்பாட்டிற்கு எதிரான குரல் எழுந்துள்ளது. வேறு யாரேனும் இந்த குரல் எழுப்பி இருந்தால் அது வேறு. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராக உள்ள சத்யபால் சிங் டார்வின் கோட்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது விவாதமாக மாறியுள்ளது. கல்வித்துறையானது மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ளது இங்கு கவனிக்கக் கூடியது. 

எப்பொழுதுமே ஒரு அறிவியல் கோட்பாடு மீது ஒரு விமர்சனமோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படும் போது அந்த கருத்தும் அறிவியல்  பூர்வமாக தான் இருக்க வேண்டும். அப்படி ஒரு கருத்தை மறுத்து மற்றொரு கருத்து உருவாவது வழக்கமானது தான். ஆனால், மத்திய அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. ‘நம்முடைய மூதாதையர்கள் யாரும் இந்தக் கருத்தை எழுதவும் இல்லை, வாய்வழி வார்த்தையாகக் கூட சொன்னது இல்லை’ அதனால் ஏற்புடையது அல்ல என்று கூறுகிறார். 

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மதவாதத்தின் அடிப்படையில் செயல்படுகிறது பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. டார்வின் கோட்பாட்டை எதிர்ப்பதன் மூலம் கடவுள் தான் மனிதனை படைத்தான் என்பதை தான் அமைச்சர் கூற நினைக்கிறார். இதனால், மத்திய அமைச்சர் சத்யபால் சிங் மதக் கருத்தினை நேரடியாக தாங்கி பிடிக்கிறார். இந்திய மதசார்பற்ற நாடு என்பதை இந்த இடத்தில் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com