அமர்ந்துகொண்டே தூங்குவது ஆபத்தை ஏற்படுத்துமா? - எச்சரிக்கும் நிபுணர்கள்

அமர்ந்துகொண்டே தூங்குவது ஆபத்தை ஏற்படுத்துமா? - எச்சரிக்கும் நிபுணர்கள்
அமர்ந்துகொண்டே தூங்குவது ஆபத்தை ஏற்படுத்துமா? - எச்சரிக்கும் நிபுணர்கள்

கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும்போது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற அனுபவம் இருக்கிறதா? தூங்கும்போது சுகமாக இருந்தாலும் எழுந்தபின் முதுகுவலி, கழுத்து மற்றும் தோள்ப்பட்டைகளில் பிடிப்பு மற்றும் வலியை உணர்ந்திருப்பீர்கள். இதற்கு காரணம் நீண்டநேரம் அசைவற்று இருந்ததுதான். நின்றுகொண்டே அல்லது உட்கார்ந்துகொண்டே தூங்குவது விலங்குகளிடையே இயல்பான ஒன்றாகக் காணப்பட்டாலும், மனிதர்களுடைய உடல் அதற்கு பழக்கப்பட்டதல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஒரே இடத்தில் அசைவற்று இருப்பது மூட்டுகளுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். மேலும், இது தீவிர நரம்பு ரத்த உறைதல் பிரச்னைக்கும் வழிவகுக்கும். அமர்ந்துகொண்டே தூங்குதல் மரணத்திற்கே வழிவகுக்கும் என்கிறது ஆராய்ச்சிகள்.

அமர்ந்துகொண்டே தூங்குவதால் ஏற்படும் பிரச்னைகள்:

நாம் நாற்காலியில் வசதியாக அமர்ந்து வேலைபார்த்துக்கொண்டே இருக்கும்போது தூக்கம்வருவது சகஜம்தான். குறிப்பாக பள்ளிநாட்களில் பெஞ்சின்மீது படுத்து தூங்காதவர்கள் இருக்கமுடியாது. ஆனால், இதை அடிக்கடி செய்வது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கிறது. அசைவின்றி, ஒரே நிலையில் நீண்டநேரம் இருக்கும்போது அது முதுகு மற்றும் உடல்வலியை ஏற்படுத்தும். இது உடலின் தோற்றத்தையே (posture) மாற்றிவிடும்.

அசைவற்று இருப்பது மூட்டுபிடிப்பை ஏற்படுத்துவதோடு மிகுந்த வலியையும் கொடுக்கும். அதனால்தான் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க stretching பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இந்த பயிற்சியானது மூட்டுப்பிடிப்புகளை சரிசெய்து உடலின் தோற்றத்தையும் மேம்படுத்தும். நேராக படுத்து உறங்கும்போது மூட்டுகள் நீட்சியடைவதுடன், ரத்த ஓட்டம் சீராகும். மேலும் உடலுக்கு போதுமான அசைவும் இருக்கும். இது பல்வேறு பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

அமர்ந்துகொண்டே தூங்குவது சிறிய உடல்நலப் பிரச்னைக்கு மட்டுமின்றி நீண்டகால உடல்நலப் பிரச்னைக்கு வழிவகுக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அதாவது, அமர்ந்துகொண்டே தூங்குதல் தீவிர நரம்பு ரத்த உறைவுக்கு(deep vein thrombosis) வழிவகுக்கிறது என்கின்றனர். இதனால், உடலிலுள்ள நரம்புகளில் ரத்தம் உறைந்து கட்டிகள் உருவாகும் என்கிறனர். குறிப்பாக நீண்டநேரம் அமர்ந்தபடி, கால்களை கீழே தொங்கவிட்டு தூங்குவதால் இந்த ரத்தம் உறைதல் பிரச்னை கால்களில்தான் பெரும்பாலும் ஏற்படும் என்கின்றனர்.

இந்த பிரச்னை நீண்டநாட்களுக்கு இருந்தும் கவனிக்காமல் விடும்போது மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சமயங்களில் மரணம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக, உறைந்த ரத்தக்கட்டிகள் உடைந்து அது மூளை அல்லது நுரையீரலுக்கு செல்லும்போது மோசமான விளைவுகள் அல்லது மரணம் ஏற்படும். தினசரி 200 பேருக்கும் அதிகமானோர் ரத்தக்கட்டிகளால் உயிரிழப்பதாக தேசிய ரத்த உறைவு கூட்டணி (National Blood Clot Alliance) கூறுகிறது. ரத்தக்கட்டிகள் 25 வயதினருக்கும் வரலாம் அல்லது 85 வயதினருக்கும் வரலாம் என்கிறது.

தீவிர நரம்பு ரத்த உறைவின் அறிகுறிகள்:

கால் தசைகள், கணுக்கால் அல்லது பாதத்தில் வீக்கம் மற்றும் காயம் ஏற்படுதல்

வீக்கத்தால் சிவந்துபோதல் மற்றும் தோல் சூடாதல்

தீடீர் பாதம் அல்லது கணுக்கால் வலி

அமர்ந்துகொண்டே தூங்குவதில் ஏதேனும் நன்மைகள் இருக்கிறதா?

நேராக கை, கால்களை நீட்டியபடி படுத்துத் தூங்குவதுதான் சிறந்தது. என்றாலும், கர்ப்பிணி பெண்களுக்கு படுத்து உறங்குவது சிரமம் என்பதால் அவர்கள் மேற்கூறிய பிரச்னைகள் வராதவாறு அமர்ந்து தூங்குவது அவர்களுக்கு சற்று ரிலாக்ஸாக இருக்கும். மேலும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்னை இருப்பவர்களும் அதை தவிர்க்க அமர்ந்தநிலையில் தூங்கலாம். அதேபோல் செரிமான பிரச்னை இருப்பவர்களும் நிபுணர்களின் ஆலோசனைப்படி அமர்ந்தபடி தூங்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com