“கஞ்சிக்கு வழியில்ல; 8 ஆயிரம் இன்ஸ்சூரன்ஸ் கட்டுறோம்” - புலம்பித்தள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. கச்சா எண்ணெய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் ஆட்டோ ஓட்டுநர்கள், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது எதையும் கவனத்தில் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்ககவில்லை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஓட்டுநர்கள், மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அவர்களிடமே கேட்டறிந்தோம்.
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் ஆட்டோ நிறுத்த ஓட்டுநர் திருப்பதியிடம் (52) நேரடியாக பேசினோம். நம்மை அருகில் அமர வைத்து தன் மனக் குமுறலை கொட்டித் தீர்த்தார். “ தினமும் பெட்ரோல் விலை ஏறுது. ஆனா எங்கள் வாழ்க்கை என்னவோ தலைகீழாகத்தான் போயிட்டு இருக்கு. பெட்ரோல் விலையை ஏத்தீட்டாங்க. ஒரு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுங்கனு கேட்டா.. நேத்து இவ்வளவு ரேட்டுக்குதானே வந்தாம் எனப் பேரம் பேசுறாங்க. பிழைப்புக்கு வேற வழி இல்லைன்னு சவாரிக்கு ஒத்துக்க வேண்டியிருக்கு.
தினசரி காலையில 9 மணிக்கு வந்துடுவேன். நைட் 10 மணிக்குதான் போவேன். பெட்ரோல், எங்க டீ காசு என எல்லாம் போக ஒரு நாளைக்கு 400 ரூபாய் கொண்டு போவன். சில நாள் அதுவும் இருக்காது. வண்டியை பைனான்சுக்கு எடுத்துதான் ஓட்டுறேன். அதுக்கு மாசம் 5000 கட்ட வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் மேல இன்ஸ்சூரன்ஸ் 8000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்குப்பா.. வருஷத்துக்கு வருஷம் இன்சூரன்ஸ் பணத்தை ஏத்திடுறாங்க. இதுபோக வண்டி எப்சி செலவு வேற கிட்டத்தட்ட 30,000 ரூபாய் வருஷத்துக்கு வந்துடுது. இதுலத்தான் வாடகை, குழந்தைகள் செலவு, பண்டிகை செலவு என எல்லாமுமே.. ஏதோ பிழைப்புக்காக ஓட்டிகிட்டு இருக்கேன். இந்தத் தொழிலில் நிம்மதியே இல்லப்பா” என்றார்.
கிண்டியில் ஆட்டோ டிரைவர் முத்துவிடம் பேசினோம். “ பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துட்டு போகுது. இது ஒரு பிரச்னைன்னா தனியார் கால் டாக்சி அவங்க இஷ்டத்துக்கு குறைஞ்ச ரேட்ல ஓட்டுறாங்க. அதுனால மக்கள் இங்கே வருவதில்லை. எங்களுக்கு குறைஞ்ச ரேட் அப்படின்னு ஒண்ணு நிர்ணயம் பண்ணியிருக்காங்க. ஆனா அவங்களுக்கு அப்படி இல்ல.. அந்த ரேட்டை யார்தான் நிர்ணயம் பண்றாங்கனு தெரியல. முன்ன எல்லாம் 400 ரூபாய் வீட்டுக்கு எடுத்துட்டு போவேன். இப்ப 200 ரூபாய்தான் கொண்டு போறேன். அவ்வளவு சிரமத்தோடு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கு.
எல்லோரும் பெட்ரோல், டீசல் விலையைதான் பேசுறாங்க.. ஆனால் கேஸ்ல ஓடுற ஆட்டோவும் இருக்கு.. அந்த ரேட்டையும் தாறுமாறாக ஏத்துறாங்க. கேஸ்ல ஓடுனா கட்டாயமாக ஆயில் போட வேண்டும். அப்பத்தான் வண்டி நல்லா இருக்கும். இல்லனா கஷ்டம். பழைய மாடல் வண்டின்னா இன்சூரன்ஸ் குறையும். ஆனால் எங்களுக்கு அதிக அளவு இன்சூரன்ஸ் வாங்குறாங்க. 2010 மாடல் வண்டிப்பா என்னது. வாங்கும்போது 3800 இன்சூரன்ஸ் கட்டுனேன். ஆனால் இப்போது 8000 ரூபாய் இன்சூரன்ஸ் கட்ட வேண்டியிருக்கு. ஒரு மனுஷன் சுய தொழில் செய்து வாழக் கூடாதுன்னு இந்த அரசாங்கம் நினைக்கிறாங்க போல.. எத்தனையோ போராட்டம் பண்ணி பார்த்தாச்சு.. எங்க குறைகள் அரசாங்கத்திற்கு தெரிவதே இல்லை.” என்றார்.
இவ்ளோ சிரமத்திற்கு மத்தியில் நீங்க ஆட்டோ ஓட்ட காரணம்.. “ 1982 ல் ஆட்டோ ஓட்ட வந்தேன். அப்போ வாழ்க்கை நல்லா இருந்துச்சு. நிறைய சம்பாதிச்சேன். வாழ்க்கையை இதுலயே ஓட்டிடலாம்னு நினைச்சேன். ஆனால் 2000-க்கு அப்புறம் ஆட்டோ தொழில்ல ஒழுங்கா லாபம் வரல.. ஆனால் இப்போது 3, 4 வருஷமா ரொம்ப கஷ்டம். கஞ்சிக்கே வழியில்லாமதான் இருக்கேன். எனக்கு குடி, அது இதுன்னு எந்தப் பழக்கமும் கிடையாது. அப்படியிருந்தும் என் பிள்ளைகளே ஆசைப்பட்ட இடத்துல படிக்க வைக்க முடியல” என வருத்துகிறார் இந்த ஓட்டுநர்.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்க்கை இப்படியிருக்க கிண்டியில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் பேசினோம். “ சென்னையில் நிறைய இடத்துல ஷேர் ஆட்டோ ரேட் ஏத்திட்டாங்க. 5 ரூபாய்ல இருந்து 10 ரூபாய் வரை ஏத்தி இருக்காங்க. ஆனால் கிண்டி- பில்லர் வரை அதே 10 ரூபாய்தான் நாங்க வாங்குறோம். ஏன்னா இந்த ரூட்ல நிறைய பஸ் ஓடுது. அதுனால எங்களால ஏத்த முடியல.. கஸ்டமர் வரமாட்டோங்களோனு நினைச்சு இந்த ரூட்ல நாங்க யாரும் ஏத்தவில்லை. விலையேற்றம் எங்க கையைதான் நேரடியாக கடிக்குது. கிட்டத்தட்ட டீசல் விலைக்காக தினசரி 200 ரூபாய் அதிகமாக இப்போ செலவு செய்ய வேண்டியிருக்கு.. நான் வாடகைக்கு ஓட்டுவதால் தினசரி 600 ரூபாய் அதுக்காக கொடுக்க வேண்டியிருக்கு. மத்திய, மாநில அரசுகள் வரியை குறைச்சா நல்லாயிருக்கும்” என்றார்.
சரி பொதுமக்கள் என்னதான் நினைக்கிறாங்க?
“ நான் தினசரி முடிச்சூர்- தாம்பரம் வரை ஷேர் ஆட்டோவில் பயணம் செய்கிறேன். 10 ரூபாய் இருந்தது இப்போ 15 ரூபாயாக மாறிவிட்டது. நைட்ல போனா ரூபாய் 40 வாங்குறாங்க. ஏற்கனவே பெட்ரோல் விலை அதிகமானதுல தான் ஷேர் ஆட்டோவில் வந்தேன். இப்போ இங்கேயும் அதிக ரேட். பஸ்ல போகலாம்னு பார்த்தா வொயிட் போர்டு அரை மணி நேரத்திற்கு ஒன்றுதான் வருது. பெட்ரோல் விலை உயர்வு என்பது எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாக அமையும். ஏனென்றால் அனைத்தும் இங்கு போக்குவரத்தையே சார்ந்துள்ளது. ஊட்டி கேரட் இங்கே விற்பனைக்கு வருவதற்கு காரணமும் போக்குவரத்தே. எனவே பெட்ரோல் விலை எல்லா வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவது உண்மை. நம்ம தாத்தாக்கள் வாழ்ந்த மாதிரி இனி நடந்துதான் போக வேண்டும்ன்னு போல” என்றார் சுரேந்தர்.