”கலவரம் செய்து மக்களை கூறுபோடவே பாஜகவினர் யாத்திரை நடத்துகிறார்கள்” : தா. பாண்டியன் பேட்டி

”கலவரம் செய்து மக்களை கூறுபோடவே பாஜகவினர் யாத்திரை நடத்துகிறார்கள்” : தா. பாண்டியன் பேட்டி

”கலவரம் செய்து மக்களை கூறுபோடவே பாஜகவினர் யாத்திரை நடத்துகிறார்கள்” : தா. பாண்டியன் பேட்டி
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெற்றிவேல் யாத்திரையை அறிவித்துள்ளார். வரும் நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் ஆரம்பித்து டிசம்பர் 6 அன்று திருச்செந்தூரில் முடியும், இந்த யாத்திரையில் கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனிடம் பேசினோம்.

 ”முருகன் தாயைத் துறந்து, தந்தையைத் துறந்து பழனி மலையில் போய் குடியேறி எல்லாவற்றையும் துறந்துவிட்டப்போதும், தனது கையில் இருக்கும் வேலை மட்டும் தூக்கி எறியாமல் கையிலே பிடித்து நிற்க. காரணம் என்ன தெரியுமா? அநியாயங்கள் தமிழகத்தில் நடந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் என்பதை உணர்த்தத்தான்’ என்று அரசியல் மேடைகளிலும் இலக்கிய மேடைகளிலும் சொல்வார் முத்துராமலிங்கத் தேவர். அவரதுக் கருத்தையேதான் நானும் வலியுறுத்துகிறேன். முருகன் சாதி மறுப்புத் திருமணம் செய்தான். வேல் யாத்திரை நடத்தவிருக்கும் பாஜகவினர் தூக்கிப்பிடிக்கும் மனு தர்மம் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்றுக்கொள்கிறதா?

 இதேபோல், அத்வானி ரத யாத்திரை தொடங்கித்தான் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த வழக்கு சரியாக விசாரிக்கப்படாமல் வழக்கின் குற்றவாளிகள் நாட்டின் அமைச்சர்கள் ஆகிவிட்டார்கள். இந்து, முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தி கலவரங்கள் செய்யவும் இந்தியாவை கூறுபோடவும்தான் யாத்திரையையே நடத்துகிறார்கள். அதே, ஃபார்முலாவை தமிழகத்திலும் ஏற்படுத்தி ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். ஆனால், பகுத்தறிவான தமிழக மக்களிடம் வேல் யாத்திரை அல்ல. பாஜகவின் எந்த யாத்திரையும் எடுபடாது. காரணம், யாத்திரை என்பது அவர்களுக்கு பொழுதுபோக்குத்தான். மதவெறியை தூண்டிவிட்டு குளிர்காய்கிறவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

பாஜகவுக்கு ரஜினியை தேடினார்கள். கமல்ஹாசனை தேடினார்கள். அவர்கள் தேடாத ஆளே இல்லை. யாரும் முடியவில்லை என்றதும், இதுபோல் யாத்திரை நடத்துகிறார்கள். தமிழகத்தில் எத்தனை யாத்திரை நடத்தினாலும் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியாது. இதனை தமிழக அரசுதான் தடுத்து நிறுத்தவேண்டும். அப்படி நிறுத்தாமல் சுயமாக எந்த முடிவையும் எடுக்காமல், மோடியின் தயவில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக ஒன்று மட்டும் சொல்கிறேன். தமிழகம் முழுக்க வேல் யாத்திரை நடத்தும் பாஜகவினர், வேலை எடுத்துக்கொண்டு காஷ்மீர் போய் சீன படைகளுடன் போரிடலாமே? வேல்,வில்லோடு காஷ்மீர் எல்லைக்குச் செல்லுங்கள். கட்டாயம் நான் வரவேற்று வழியனுப்ப வருகிறேன்” என்கிறார்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com