“10 போட்டியில் வெறும் 52 ரன்கள்தான்” - தோனியின் பேட்டிங் ஃபார்ம் மீது எழும் விமர்சனங்கள்

“10 போட்டியில் வெறும் 52 ரன்கள்தான்” - தோனியின் பேட்டிங் ஃபார்ம் மீது எழும் விமர்சனங்கள்
“10 போட்டியில் வெறும் 52 ரன்கள்தான்” - தோனியின் பேட்டிங் ஃபார்ம் மீது எழும் விமர்சனங்கள்

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி வெற்றி நடை போட்டு வந்தாலும் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஃபார்ம் மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.

தோனியின் பேட்டிங் ஃபார்ம்: நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி வெற்றி நடை போட்டு வந்தாலும் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஃபார்ம் மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 8இல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால், இந்தப் பத்து போட்டிகளில் தோனி வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமே 18 ரன்கள் தான். ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே விளாசி உள்ளார்.

கேப்டன் ஓகே.. ஆனால், பேட்ஸ்மேனாக?..: ஒரு கேப்டனாக தோனி மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. நடப்பு சீசனின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கு பிறகும் தோனியின் கேப்டன்சி பற்றி பலரும் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணமே உள்ளனர். ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அவரின் செயல்பாடும் மிகவும் மோசமானதாக உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ்-ன் சிறந்த ஃபார்ம் காரணமாகவே சென்னை அணி பெரும்பாலான போட்டிகளில் வெற்றி வாகை சூடி வருகிறது. மிடில் ஆர்டரில் கூட தொடர்ச்சியாக யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இருப்பினும், எல்லோரை காட்டிலும் தோனியின் நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது. முக்கியமான நேரத்தில் கூட அவர் அணிக்கு ரன்களை சேர்க்க தவறிவிடுகிறார். ஒரு காலத்தில் சிறந்த ஃபினிஷராக திகழ்ந்தவர் தோனி. ஆனால், தற்போது அந்த நிலை சுத்தமாக இல்லை.

ஆகாஷ் சோப்ரா காட்டம்: தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து மிகவும் காட்டமாக விமர்சித்துள்ள ஆகாஷ் சோப்ரா, “தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் மட்டுமே செயல்படுகிறார். அவர் கீழ் வரிசையில் களமிறங்கும் போதும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது ரன்கள் சேர்ப்பதில்லை. சிஎஸ்கேவை பொறுத்தவரை உண்மை என்னவெனில் 10 வீரர்கள் மற்றும் ஒரு கேப்டன் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். அதாவது ஒரு வீரராக தோனியின் ரோல் ஒன்றுமில்லை என்பது போல் வெளிப்படையாக சாடியுள்ளார்.

அதேபோல், அவர் தோனியின் கேப்டன்சியையும் புகழ்ந்துள்ளார். “கடந்த சீசனில் மோசமான தோல்வியை சந்தித்த சிஎஸ்கே இந்த சீசனில் சாம்பியன் சூப்பர் கிங்ஸ் என்பதை நிரூபித்து கம்பேக் கொடுத்துள்ளது. அதற்கு தோனியின் கேப்டன்சி தான் பிரதான காரணம். அவர் மட்டும் அணியில் இடம்பெறாவிட்டால் இந்த நிலைக்கு அந்த அணி சென்றிருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

மீண்டும் ரசிகர்களை மகிழ்விப்பாரா தோனி: ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை பெரும்பாலான சீசன்களில் தோனி தன்னுடைய அதிரடியாக பேட்டிங் திறனால் ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர்தான். ஒரு சில சீசன்களை தவிர எல்லா சீசன்களிலும் 300, 400 ரன்களுக்கு மேல் குவித்து வந்தார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 200 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமே 47 ரன்கள் தான். அந்த 200 ரன்கள்தான் இதுவரையிலான ஐபிஎல் போட்டிகளில் ஒரு சீசனில் தோனி எடுத்த குறைவான ஸ்கோர். ஆனால், நடப்பு சீசனில் தோனி அதனை விட குறைவாகவே எடுப்பார் என்று தெரிகிறது.

தோனி அடுத்த ஐபிஎல் சீசன் வரை கூட கேப்டனாக தொடரக் கூடும். ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு அவரது பங்களிப்பு இல்லாத வரை அவர் மீது இத்தகைய விமர்சனங்கள் எழுந்து கொண்டே தான் இருக்கும். அதேபோல், தோனியில் ஹெலிக்காப்டன் ஷாட்டையும், விளாசல் சிக்ஸர்களையும் காண அவரது ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர். அவர் ஒன்று இரண்டு சிக்ஸர்களை ஒரு போட்டியில் விளாசினாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். மீதமிருக்கும் போட்டியில் தோனியின் ஃபார்ம் திரும்புமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com