‘சர்வம் தாள மயம்’ திரைப்பார்வை

‘சர்வம் தாள மயம்’ திரைப்பார்வை
‘சர்வம் தாள மயம்’ திரைப்பார்வை

“நீ ஜான்சனோட பையன் ரோட்லதான் நிக்கணும்” என விரட்டியடிக்கப்படும் பீட்டர், மிருதங்க வித்வானாகிறானா? இல்லையா? என்பதை எல்லாத் தளங்களிலும் விரவிக்கிடக்கும் தாளங்களோடு உணர வைக்கும் திரைப்படமே ‘சர்வம் தாள மயம்’.

‘மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படங்களை இயக்கி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் ஒரு திரைப்படத்தை இயக்கப்போகிறார் எனும் அறிவிப்பே சினிமா ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அந்த ஆர்வத்திற்கு சிறு குறையும் வைக்காமல் முழுக்க முழுக்க இசை பேசும் கதைக்களத்தை அவ்வளவு எளிமையாய் சொல்லி ‘சர்வம் தாள மயம்’ என ரசிகனையும் உணர வைத்திருக்கிறார். கர்நாடக சங்கீத துறைக்குள் புரையோடியிருக்கும் சாதிய கட்டமைப்பையும் கொஞ்சம் துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார் ராஜீவ். 

பாரம்பரியம் என தொடர்ந்து ஒரு சமூகத்தினருக்குள் மட்டுமே முடங்கிய சாஸ்திரிய சங்கீதம் ஆர்வம் கொண்ட எல்லோருக்கும் கிட்டும்போது அது எப்படியெல்லாம் பிரவாகம் எடுக்கும் என படத்தில் காட்சிகளாய் விரியும்போது ஒருவித பிரமிப்பு ஏற்படுகிறது. அதுவே இசைத்துறைக்குள் ஏன் சாதியம்? எனும் கேள்வியையும் அழுத்தமாய் எழச் செய்கிறது. 

மிருதங்க வித்வான் வேம்பு ஐயர், கர்நாடக இசை என்பது கச்சேரிக்கு மட்டுமே சொந்தமானது, அதனை குரு-சிஷ்ய பாரம்பரியத்தின் மூலமே கற்றுத் தேர முடியும் என விடாப்பிடியாக நம்பிக்கொண்டிருப்பவர். அந்த இசை என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கே சொந்தமானது என்பதும் வேம்பு ஐயரின் நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கையைக் கரைத்து பீட்டரை தன் சிஷ்யனாகவே ஏற்றுக் கொள்ளச் செய்கிறது அவனது விரல் பேசும் மொழி. வேம்பு ஐயர் கதாபாத்திரத்தில் நெடுமுடி வேணு. நடிப்பும் அவரும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை இன்னும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

பீட்டராக ஜி.வி.பிரகாஷ். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் மிருதங்கத்துக்கும் விரலுக்கும் இடையிலான காதலால் பிறக்கும் நாதத்தை இந்தளவுக்கு உணர்ந்து பிரதிபலித்திருப்பாரா என்பது சந்தேகம்தான். விஜய் ரசிகராக திரையரங்கு முன் ஆட்டம் போடுவது, அபர்ணா மீது காதல் கொண்ட இளைஞராய் திரிவது, மிருதங்க ஈர்ப்பால் நெடுமுடி வேணுவை விடாமல் பின் தொடர்வது என வித்தியாசம் காட்டி ரசிக்க வைக்கிறார். 

ஜி.வி.பிரகாஷின் காதலியாக வரும் அபர்ணா பாலமுரளி, பொறாமையில் மிளிரும் வினித், வேம்பு ஐயருக்கு எதிராய் வில்லத்தனம் காட்டும் திவ்யதர்ஷினி, ஜி.வி.யின் அப்பா கதாபாத்திரத்தில் குமரவேல் என எல்லாக் கலைஞர்களும் கச்சிதமாக தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். 

மிருதங்க இசைதான் ‘சர்வம் தாள மயம்’ படத்தின் பிரதானம். நீளமாய் ஒலிக்கும்போது பார்வையாளனுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிக கவனமாய் பணியாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். கச்சேரிகளிலும், கற்றுத்தரும்போதும் ஒலிக்கும் மிருதங்க நாதம், பறையிசை என எல்லாவற்றிலும் அளவாகவும், அழகாகவும் இசையை அடுக்கியிருக்கிறார். பாடல்களும் அப்படியே. அதேபோல், தியர்ரி டீலோர் விஜய் ரத்னத்தின் ஒலி வடிவமைப்பும் அசத்தல்.

இந்திய சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராஜிவ் மேனனின் இயக்கத்தில் ஒளிப்பதிவு என்பது கூடுதல் பொறுப்பு. அதனை உணர்ந்து ‘சர்வம் தாள மயம்’ எனும் படைப்பை சிறப்புப்படுத்தியிருக்கிறார் ரவி யாதவ். கர்நாடக இசை ஒலிக்கும்போது ஒரு நிறம், காதல் காட்சிகளில் ஒரு நிறம், பீட்டரின் சொந்த ஊருக்கு ஒரு நிறம், இசைப் பயணத்தில் ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு வண்ணம் என ரசனை கூட்டியிருக்கிறார்.

இசை தொடர்பான படம் என்றாலும் ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்த சிஷ்யன்களுக்குள் ஏற்படும் பொறாமை, துரோகம் போன்றவையும், பீட்டர்தான் இறுதியில் வெற்றியடைவான் என தெரிந்தும் அதை சென்றடைய எடுத்துக்கொள்ளும் சில காட்சிகளின் நீளமும் சலிப்பு. மற்றபடி இதுமாதிரியான திரைப்படைப்புகள் எப்போதாவது வரும். அதிலும் அவை சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதென்பது இன்னும் அரிது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com