தீரன் அத்தியாயம் 2: குற்றப்பரம்பரை – உண்மையும் கற்பிதங்களும்…பகுதி – 3
குற்றப்பரம்பரைச் சட்டம்:
பிரிட்டனில் தொடர்ச்சியாகக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்காணிக்க என்று ஏற்கனவே இருந்த ஒரு சட்டத்தை எடுத்து, அதில் சில மாறுதல்களைச் செய்து ‘குற்றப் பழங்குடிகள் சட்டம்’ என்ற ஒரு சட்டத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர்.
தொடர்ச்சியாகக் குற்றம் செய்வோருக்கு தண்டனை கொடுக்க, அவர்களைக் கட்டுப்படுத்த வேறு காரணங்கள் தேவையில்லை. ஆனால் பழங்குடிகளைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் காரணம் வேண்டுமே, அதனால் இந்தச் சட்டங்கள் பழங்குடி மக்கள் அனைவரும் நாகரிகம் அற்றவர்கள், குற்றவாளிகள் என்று சித்தரித்தன. அந்த அடிப்படையில் அவர்களின் உரிமைகளை நசுக்கின.
1871 ஆம் ஆண்டில் இதனைக் கொண்டுவந்த நீதிபதி ஜேம்ஸ் ஸ்டீபன் இந்தச் சட்டத்தைப் பற்றிக் கூறும்போது,
‘கைவினை, தச்சு வேலைகளைப் போல சில மக்களுக்கு திருடுவது குலத் தொழில். அவர்களை ஒழிப்பது மட்டுமே குற்றங்களை குறைக்க ஒரே வழி!’ – என்று சொல்லி இருப்பதே ஆங்கிலேயர்களின் நோக்கத்தைக் கோடிட்டுக் காட்டுவது. காலப்போக்கில் பழங்குடிகள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரையும் ஒடுக்கும் விதமாக இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த வரையறையில் 1897, 1911, 1924, 1944 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து மாற்றங்கள் வந்தன. உதாரணமாக 1897ல் அரவாணிகளைக் கண்காணிக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. 1924ல் இந்தியா முழுவதும் இந்தச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, ‘இருப்பிடம் அற்றவர்கள், நாடோடிகள், விபச்சாரிகள் ஆகியோர் அபாயகரமானவர்கள், நாகரிகம் அற்றவர்கள்’ – என்று ஆங்கில அரசு அறிவித்தது.
இந்தியாவில் ‘குற்றப் பழங்குடிகள் சட்டம் (criminal tribal act)’ முதன் முதலாக பஞ்சாப், கூர்க் பகுதிகளில்தான் அமல்படுத்தப்பட்டது. ஆண்டு 1871. ஆங்கிலேய எதிர்ப்பு ரத்தத்திலேயே ஊறி இருந்த பஞ்சாபிகளையும், கூர்க் இன மக்களையும் கட்டுப்படுத்த ஆங்கில அரசு இதனைப் பயன்படுத்தியது.
இதன் பின்னர் சுதந்திர எழுச்சி பொங்கிய வங்கத்தில் 1876ஆம் ஆண்டில் இந்த சட்டம் அமலானது.
தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம்:
அப்போதைய சென்னை மாகாணத்திற்கு குற்றப்பரம்பரைச் சட்டம் மிகத் தாமதமாக 1911ல்தான் வந்தது. பின்னர் தமிழகத்தில் குற்றப் பழங்குடிகள் சட்டம் மெல்ல மெல்ல விரிவுபடுத்தப்பட்டது.
இன்று கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோர் மட்டுமே குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் தமிழகத்தில் பரவலாக உள்ளது. அது தவறு. அந்தச் சட்டத்தை எதிர்த்து அதிகம் போராடியவர்கள், அதற்கு அதிக விலை கொடுத்தவர்கள் என்ற முறையில் முக்குலத்தோருக்கு அதிக பாதிப்புகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கவில்லை. 1938ல் தமிழகத்தில் வெளியான ஆங்கில அரசின் அறிக்கையின்படி 90 சாதியினர் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர். குறவர், வன்னியர், படையாட்சி, அம்பலக்காரர், ஒட்டர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், பறையர், புலையர் – ஆகியோரும் அந்தப் பட்டியலில் இருந்தனர்.
இந்த அறிவிப்பு இவர்களின் குற்ற நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை நாம் இங்கு உற்று நோக்க வேண்டும். மேலும் இவர்கள் அனைவரும் இனத்தால் ஒன்றுபட்டவர்களோ சமூக, பொருளாதார நிலைகளில் சமமாக இருந்தவர்களோ பழக்க வழக்கங்களால் ஒன்றுபட்டவர்களோ அல்ல. உதாரணமாக தமிழக குற்றப்பழங்குடிகள் சட்டத்தின் படி ‘பன்றி இறைச்சி சாப்பிடுவோர்’ அனைவரும் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர்!. இதன் பின்னணி எதுவும் விளக்கப்படவில்லை.
இன்னொரு பக்கத்தில் வட இந்தியாவில் அரசுக்கு வரி செலுத்தாமல் உப்பு விற்றவர்களும் இந்தச் சட்டத்தால் ஒடுக்கப்பட்டனர். தமிழகத்தின் உப்புக் குரவர்கள் இதனால் குற்றப் பரம்பரையினராயினர். இந்தியாவெங்கும் புரட்சியாளர்கள் பலரும் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இப்படிக் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும் காவல்துறையினருக்கு ஆங்கில அரசால் அளிக்கப்பட்டது. காவல்துறையினரின் அடக்குமுறைகள் ஓங்குவதை ஆங்கில அரசு ஊக்குவித்தது.
தமிழகத்தில் குற்றப்பழங்குடிகள் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பிறமலைக் கள்ளர்கள். இவர்களது நீண்ட வரலாற்றில் குற்றப்பரம்பரை என்ற முத்திரையானது ஒரு கருப்பு அத்தியாயம்.
பிறமலைக் கள்ளர்கள் ஆங்கில அரசுக்குக் கட்டுப்படாத ஒரு தனி அரசையே நெடுங்காலமாக நடத்திவந்தனர். 8 நாடுகள் 24 கிராமங்கள் உள்ளடங்கிய அவர்களது அரசுக்கு ‘தன்னரசுக் கள்ளநாடு’ என்று பெயர். கி.பி. 1754ஆம் ஆண்டில் பிறமலைக் கள்ளர்களின் தலைவர்கள் ஒன்றுகூடி ஒரு ஒப்பந்தம் போட்டனர். அதன்படி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு நெடுங்காலம் வரிகள் எதையும் செலுத்தவில்லை. ஆங்கில அரசை அவர்கள் பகிரங்கமாகவே எதிர்த்தனர். அதனால் அவர்களை ஆங்கில அரசு அச்சத்தோடே எப்போதும் பார்த்து வந்தது.
பிறமலைக் கள்ளர்கள் மீது குற்றப்பழங்குடிகள் சட்டத்தை ஏவ வேண்டும் என்ற முடிவை, இந்தியாவுக்குள் குற்றப் பழங்குடிகள் சட்டம் வந்த 43 ஆண்டுகள் கழித்து 1914 ஏப்ரல் 8ஆம் தேதிதான் ஆங்கில அரசு முடிவு செய்தது. கி.பி.1914 மே 4ஆம் நாள் தன்னரசுக் கள்ளநாட்டின் ஒரு பகுதியான கீழக்குடி கள்ளர்கள் மீது இந்த சட்டம் முதன்முறையாகப் பாய்ந்தது. கள்ளர்கள் குற்றப் பரம்பரையினர் என்று முதன்முதலாக அறிவிக்கப்பட்டது அப்போதுதான்.
பாப்பாநாடு, முதுகுளத்தூர், சேலம் – என தமிழகத்தின் 3 இடங்களில் குற்றப் பழங்குடிகள் சட்டம் அமலுக்கு வந்தது. தன்னரசுக் கள்ளநாடு முழுவதும் இந்தச் சட்டம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. தேவையற்ற வழக்குகள் காவல்துறையினரால் போடப்பட்டன. கி.பி.1923 ஆம் ஆண்டில் மட்டும் 12,925 வழக்குகள் காவல்நிலையங்களுக்கு வந்தன. அவற்றில் பதிவு செய்யப்பட தகுதியாக இருந்தவை 3049 வழக்குகள், நடவடிக்கை எடுக்கப்பட்டவையோ 12 வழக்குகள். 12,913 வழக்குகள் குற்றமற்ற மக்களைத் துன்புறுத்த என்று மட்டும் பயன்படுத்தப்பட்டன.
குற்றப் பழங்குடிகள் சட்டம் ஒரு குற்றவாளி ஒரு கிராமத்தில் நடமாடினார் என்றால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுமே விசாரணைக்கு ஆளாக்கப்பட வழி வகுத்தது. இப்படியாகக் கண்காணிக்கப்படும் கிராமங்களின் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. இதனால் சில காலத்திலேயே மதுரையில் இருந்த அனைத்து கிராமங்களும் அரசால் கண்காணிக்கப்படும் கிராமங்களாயின, இதற்கென தனித்த ஒரு அமைப்பையே ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அரசின் அடக்குமுறைகள் உச்சத்தை அடைந்தன.
கண்காணிப்பில் இருந்த ஒவ்வொரு கிராமத்திலும் 2 பதிவேடுகள் பராமரிக்கப்பட்டன. முதலாவது பதிவேட்டில் பல்வேறு காரணங்களால் (குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பதே போதுமான காரணம்) கண்காணிப்பின் கீழ் உள்ளோரின் பெயர், தந்தை பெயர், தொழில், அங்க அடையாளங்கள், கைரேகை – ஆகியவை பதிவு செய்யப்பட்டன.
இரண்டாவது பதிவேடு நீதிமன்றத்தால் ‘குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கானது. இதில் முதல் பதிவேட்டின் அதே விவரங்களே பதிவு செய்யப்பட்டன.
முதல் பதிவேட்டில் உள்ளவர்கள் தினமும் காவல்நிலையத்தில் கைநாட்டு வைக்க வேண்டும். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி பெற்று பின்னரே செல்ல வேண்டும். இதனால் ‘கைரேகைச் சட்டம்’ என்று பொதுமக்கள் இந்தச் சட்டத்தை அழைக்கத் துவங்கினர். கைநாட்டுகளை இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணிக்குள் மக்கள் வைக்கவேண்டும். இதனால் அதிக மக்கள் இருந்த ஊர்களில் மாலை 7 மணி முதலே மக்கள் வரிசைகளில் நிற்கத் துவங்கினர்.
இரண்டாம் பதிவேட்டில் பெயர் உள்ளவர்களின் நிலை இன்னும் மோசம். இவர்கள் அரசு கொடுத்த ‘ராதாரிச் சீட்டு’ (ராத்திரிச் சீட்டு) என்ற அனுமதி அட்டையை எப்போதும் தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சீட்டை மறந்து வைத்தால் அந்தக் காரணம் ஒன்றே இவர்கள் கைது செய்யப்படப் போதுமானது. இவர்கள் மாலை 7 மணிமுதல் காவல் நிலையத்திற்கு எதிரே இருந்த திறந்த வெளியில்தான் இருக்க வேண்டும். குளிரோ, மழையோ அங்கேதான் தூங்க வேண்டும். மனைவியின் பிரசவ நாளில் கூட அவர்களுக்கு விலக்குகள் அளிக்கப்படவில்லை. ஒரு ஊரில் எந்தத் திருட்டு நடந்தாலும் உரிய குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரையில் இரண்டாவது பதிவேட்டில் உள்ளவர்களே அந்தக் குற்றத்தைச் செய்தவர்களாகக் கருதப்பட்டனர். முன்னர் அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டு எதுவானாலும் உடன் இதுவும் ஒரு குற்றமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் காவல்துறை நிம்மதியாக இருக்க, ஊர்ப்பெரிய மனிதர்கள் குற்றவாளிகளைத்தேடி அலைந்தனர். இந்த சட்டத்தில் இருந்து விலக்குப் பெற்றவர்களும் உள்ளனர்… அது அடுத்த அத்யாயத்தில்…