கன்னத்தில் அறை வாங்கிய சச்சின்.. திருப்பு முனையான அந்த நாள்! மாஸ்டர் பிளாஸ்டரின் பிறந்தநாள் பகிர்வு!

’களத்தில் எதையும் சொல்லிவிட்டுச் செய்யக்கூடியவர் அல்ல... செய்துவிட்டுப் பேசப்படக்கூடியவர்’ என்று எல்லோராலும் சொல்லுமளவுக்கு பெயர்போனவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இன்று (ஏப்ரல் 24) அவருடைய பிறந்த தினம்.
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்file image

சச்சினுக்குப் பொருந்தும் ரஜினி வசனம்

கிரிக்கெட் உலகிற்கு இளம் சிறுவனாய் அறிமுகமான நாள் முதல் இந்திய லெஜண்ட்ஸ் அணி வரை, அனைத்திலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சச்சின் வலம் வருகிறார். தவிர, ஓய்வுபெற்று ஆண்டுகள் பலவாயினும் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இன்னும் சொல்லப்போனால், சச்சினுடன் எத்தனையோ நட்சத்திரங்கள் இணைந்து ஆடியிருக்கின்றனர்; ரன்கள் குவித்திருக்கின்றனர்; வெற்றியைத் தந்திருக்கின்றனர்.

ஆனாலும், சச்சின் மட்டுமே இந்திய ரசிகர்களின் உணர்வாய் ஒன்றிப் போயுள்ளார் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்file image

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘படையப்பா’ படத்தில் வசனம் ஒன்று வரும். ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னைவிட்டுப் போகல’ என நடிகை ரம்யா கிருஷ்ணன், ரஜினியைப் பார்த்துச் சொல்வார். அந்த வசனம் ரஜினிக்கு மட்டுமல்ல, சச்சின் டெண்டுல்கருக்கும் பொருந்தும் என்பதுதான் நிதர்சனம்.

சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய ஆஸ்திரேலிய வீரர்!

தான் விளையாடிய காலகட்டத்தில் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தவர், சச்சின். அவர், இல்லாத இந்திய அணியை அந்த காலக்கட்டத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் சச்சினுக்கு உண்டு.

இது வேற எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிடைக்காத பாக்கியம். சிறுவயது முதலே கிரிக்கெட்டின் மீது தீராத காதல் கொண்ட சச்சின், வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என விரும்பினார்.
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்file image

போதிய உயரம் இல்லாததால், ஆஸ்திரேலிய பவுலர் டெனிஸ் லில்லி, சச்சினை பேட்டிங்கில் கவனம் செலுத்தும்படி ஆலோசனை வழங்கினார். அதன்பிறகு, பேட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கிய சச்சின், பிற்காலத்தில், கிரிக்கெட் உலகில் ’கிரிகெட்டின் கடவுள்’, ’மாஸ்டர்’ என அழைக்கப்படும் அளவுக்கு தன்னை மெருகெற்றிக் கொண்டார்.

கன்னத்தில் ‘அறை’ வாங்கிய சச்சின்!

பிரவீன் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே, பல்வீந்தர் சிங் சாந்து எனப் பல பிரபல வீரர்களை உருவாக்கிய ரமாகாந்த் அச்ரேக்கரின் பயிற்சி பட்டறையில் இணைந்துதான் சச்சினும் பட்டை தீட்டப்பட்டார். அவரிடம் பயிற்சி பெற்ற சமயத்தில்... ஒருமுறை, பயிற்சியாளர் அச்ரேக்கர் இல்லை என நினைத்த சச்சின், பயிற்சிக்கு செல்லாமல் நண்பர்களுடன் மைதானத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென அங்கு வந்த அச்ரேக்கர், ’பயிற்சி செய்யாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்’ எனக் கேட்டு கன்னத்தில் பளார் என ஓர் அறை விட்டாராம். அன்று வாங்கிய அறை மூலம், ஒருநாள்கூட பயிற்சி செய்ய தவறியதில்லையாம் சச்சின்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்file image

ஒரு ரூபாய் நாணயங்களைச் சேகரித்த சச்சின்!

அதனால்தான், ஆஸ்திரேலிய வீரர் பிராட்மேனே வியந்து பேசுமளவுக்கு கிரிக்கெட்டில் ஜொலித்தார். சச்சின் பிரபலமாக கோலோச்சுவதற்குக் காரணம், அவருடைய பயிற்சியாளர் அச்ரேக்கர் என்று சொன்னால் மிகையாகாது. அவரிடம் சச்சின் பயிற்சி பெற்ற சமயத்தில், ஸ்டெம்பின் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, ’சச்சினை அவுட்டாக்கும் பவுலர்களுக்கு அது பரிசு’ என்பாராம். பவுலர்கள் தோல்வி அடைய, சச்சின் அந்த நாணயங்களை எடுத்துக்கொள்வாராம். ’அதுபோல் சேகரித்த நாணயங்கள் விலைமதிப்பில்லாதவை’ என சச்சினே ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

இப்படி, பயிற்சி பெற்றதன் விளைவு, உலகின் பல பிரபல பந்து வீச்சாளர்களின் பந்துகள் எல்லாம் சச்சின் மட்டையால், மைதானத்தின் நாலாபுறமும் பறக்கத் தொடங்கின. பவுலர்களும் அவருக்கு பந்து வீச நடுங்கிய காலமும் உண்டு. கிரிக்கெட் உலகில் எல்லா வீரர்களும் சந்திப்பதைப் போன்றே சச்சினும் எண்ணற்ற அவமானங்களையும், ஏளனங்களையும், காயங்களையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளார்.

ஆனால், அவை அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, துயரங்களுக்கு மருந்திட்டுக்கொண்டு, தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி கொடுக்கும் வகையில் தோல்களுக்கு வலுகொடுத்து யாரும் எளிதில் தொட முடியாத அளவுக்கு கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்தார்.
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்file image

சச்சின் என்றால் சாதனைதான்!

இன்னும் சொல்லப்போனால், சச்சின் என்றால் சாதனைதான் என்று சொல்லுமளவுக்கு, அவர் களமிறங்கும் ஒவ்வொரு போட்டிகளும் சரித்திரத்தில் இடம்பிடித்தபடியும், ரசிகர்களுக்கு திகட்டாதபடியும் இருந்தன. சாதனைகள் ஒருநாள் தகர்க்கப்படும் என்பது விதியாக இருக்கும் நிலையில், சச்சினின் சாதனைகள் சில இன்றைய இளம்வீரர்களால் தகர்க்கப்பட்டு வருகின்றன. அதில் இன்னும் பல சாதனைகள் தகர்க்க முடியாமலும் உள்ளன.

கிரிக்கெட்டில் சச்சின் அன்றுவைத்த தொடக்கப்புள்ளியே, இன்று பல வீரர்களுக்கு சாதனை புள்ளியாக அமைகின்றன.

கிரிக்கெட்டில் அவர் ஆடிய விதமும், உத்வேகமுமே இன்று பல வீரர்களையும் வீராங்கனைகளையும் இந்திய அணிக்குள் இழுத்து வந்திருக்கிறது. சச்சினின் சாதனையை முறியடிக்கும் இன்றைய இளம் வீரர்களுடன் அவரையும் ஒப்பிட்டு, கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இன்றைய காலக்கட்டம் என்பது வேறு; அன்றைய காலம் என்பது வேறு.

இன்றைய புதிய விதிகள்போல் அன்றே இருந்திருந்தால், சச்சின் இந்த சாதனைகள் மட்டுமல்ல, இன்னும் பல நூறு சாதனைகளைப் படைத்திருப்பார் என்பதுதான் உண்மை.

கிரிக்கெட்டில் எவ்வளவோ உயரத்தை சச்சின் தொட்டிருந்தாலும், இப்போதும் சாதாரண சச்சினாகவே அவர் இருக்கிறார் என்பது மற்றுமொரு உலக அதிசயம்தான். இதனால்தான் அடுத்த தலைமுறை வீரர்களின் ரோல் மாடலாக சச்சின் உள்ளார்.

வெற்றி என்பது ஒரு பயணம். அதன் நடுவில் கற்கள் வீசப்படும். அதை மைல்கற்களாக மாற்றக் கற்றுக்கொண்டால், தொடர்ந்து வெற்றிபெறலாம்.
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்file image

‘வெற்றி என்பது ஒரு பயணம். அதன் நடுவில் கற்கள் வீசப்படும். அதை மைல்கற்களாக மாற்றக் கற்றுக்கொண்டால், தொடர்ந்து வெற்றிபெறலாம்’ என்பதை சச்சின் வேதமந்திரமாகக் கொண்டிருந்ததால்தான் விளையாட்டில் பல உயரங்களைத் தொட்டு இன்று பல லட்சக்கணக்கான மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சச்சின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com